தமிழ்நாட்டுக்கு கனமழை எச்சரிக்கை – சென்னையில் மழை நிலவரம் என்ன?

தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட மஞ்சள் நிற எச்சரிக்கை: சென்னையில் மழை நிலவரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது (கோப்புப் படம்)

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று உருவெடுத்ததை அடுத்து, தமிழ்நாட்டிற்கு இன்று (செவ்வாய், நவம்பர் 12) முதல் வரும் 18-ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் பெருங்குடியில் 78.9மிமீ மழை பதிவாகியுள்ளது.

முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (செவ்வாய், நவம்பர் 12) காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

எனவே தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செவ்வாய், நவம்பர் 12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழகத்தில் எங்கு எப்போது மழை பெய்யும்?

இன்று (செவ்வாய், நவம்பர் 12) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், வங்கக்கடலில் உருவாகியுள்ள குறந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பு இல்லை என்றார்.

அடுத்துவரும் 4 தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும், என்றார்.

“நாளை (புதன், நவம்பர் 13) சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிள் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது,” என்றார்.

“அடுத்த 24 மணிநேரங்களில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்”

அதேபோல், “டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும்,” என்றார்.

14-ஆம் தேதி, வட கடலோர மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்புள்ளது எனவும் 15-ஆம் தேதி, தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறினார்.

மீனவர்கள் அடுத்துவரும் இரண்டு தினங்களுக்குக் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

வானிலை, மழை, சென்னை, தமிழகம்

படக்குறிப்பு, வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் (கோப்புப் படம்)

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி

தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று (திங்கள், நவம்பர் 11) உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை முதல் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (செவ்வாய், நவம்பர் 12) இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடி, மின்னல் சமயத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (செவ்வாய், நவம்பர் 12), சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (புதன், நவம்பர் 13), மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களோடு சேர்த்து மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட மஞ்சள் நிற எச்சரிக்கை: சென்னையில் மழை நிலவரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம்?

நவம்பர் 14-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 15-ஆம் தேதி மேற்கண்ட மாவட்டங்களில் (நீலகிரி, கோவை, திருப்பூர் தவிர்த்து) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 16, 17-ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35-45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம், @chennaicorp

படக்குறிப்பு, பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்

சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னையில் நேற்று இரவு முதல் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை குறிப்பிட்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “மழை நீரை அகற்ற 1494 மோட்டார் பம்புகள், 158 அதி விரைவு நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அக்டோபர் மாதம் பெய்த மழையின் கருத்தில் கொண்டும் கூடுதல் மோட்டார்களை நிறுவி இருக்கிறோம். சென்னை மாநகராட்சி சார்பில் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 120 உணவு தயாரிப்பு மையங்களும் தயாராக உள்ளன. அக்டோபர் மாதத்தில் 95ஆக இருந்தது, தற்போது அதன் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறோம்.” என்று கூறினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சம்பந்தப்பட்ட அனைத்து புகார்களுக்கும் மற்றும் உதவிகளுக்கும் 1913 உதவி எண்ணை அழைக்கலாம் என்றும், மழைக்காலத்தில் பழுதடைந்த அல்லது வலுவிழந்த கட்டடங்களுக்குள் மக்கள் நுழைய வேண்டாம் என்றும் மாநகராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட மஞ்சள் நிற எச்சரிக்கை: சென்னையில் மழை நிலவரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மழைக்காலத்தில் பழுதடைந்த அல்லது வலுவிழந்த கட்டடங்களுக்குள் மக்கள் நுழைய வேண்டாம் என்றும் மாநகராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது

மழை படிப்படியாக குறையும்

தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக தென் சென்னையில் கூடுலாக மழை பெய்துள்ளது,” என்று பதிவிட்டுள்ளார்.

“மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்யும். பூண்டி, செம்பரம்பாக்கம் போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யும் என்று நம்புவோம்,” என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.