சிவனொளிபாத மலையாத்திரை பருவ காலத்தில் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை ! on Friday, November 08, 2024
சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் ஆரம்பமாகவுள்ளதால் இம்முறை பிளாஸ்டிக் மற்றும் புகைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட தெரிவித்தார்.
சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் மற்றும் சுருட்டுகள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நல்லதண்ணி கிராமசேவகர் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. நல்லதண்ணி சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் சீத்த கங்குல முதல் சிவனொளிபாதமலை உச்சிவரை செல்லும் யாத்திரிகர்களுக்கு இலவச குடிநீர் வழங்குவதற்கு தர்ம சுகதய மனித உதவி அறக்கட்டளை நிறுவனம் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, 2024— 2025 சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் அடுத்த மாதம் (14) உடுவப் பௌர்ணமி தினத்தன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.