- எழுதியவர், மேடலின் ஹால்பர்ட்
- பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் மீது பல குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தீர்ப்பளிக்கப்படாத பல குற்றவியல் வழக்குகள் உள்ள ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல்முறை.
பல குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் அதேவேளையில் டிரம்ப் அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியில் உட்காரப் போவது, அமெரிக்காவில் இதுவரை நடந்திராத ஒன்று.
டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் நுழையும் போது, அவர் எதிர்கொள்ளும் நான்கு குற்ற வழக்குகள் என்ன ஆகும் என்பது இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு
வணிக ஆவணங்களில் முறைகேடு செய்ததாக அவர் மீது முன்வைக்கப்பட்ட 34 குற்றச்சாட்டுகள் நியூயார்க் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் உறுதி செய்யப்பட்டது. இவை நியூயார்க்கில் கடுமையான குற்றங்களா கருதப்படுகின்றன.
மே மாதம், நியூயார்க்கின் நடுவர் மன்றம் டிரம்பை குற்றவாளி என்று அறிவித்தது. இந்த கணக்கு பதிவேடு முறைகேடுகள் அனைத்துமே ஆபாச நடிகைக்கு பணம் தரப்பட்டதுடன் (hush money) தொடர்புடையவை.
நியூயார்க் நீதிபதி ஜுவான் மார்ச்சென், டிரம்புக்கான தண்டனை அறிவிப்பை செப்டம்பர் மாதத்தில் இருந்து நவம்பர் 26-ஆம் தேதி வரை ஒத்திவைத்திருந்தார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தள்ளிவைக்கப்பட்டது.
முன்னாள் புரூக்ளின் வழக்கறிஞர் ஜூலியா ராண்டில்மேன் கூறுகையில், தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றாலும், நீதிபதி மார்ச்சென் திட்டமிட்டபடி சட்ட நடவடிக்கையை தொடர முடியும் என்று கூறினார்.
ஆனால், முதியவர் என்பதாலும் முதல்முறை குற்றவாளி என்பதாலும் டிரம்புக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பில்லை என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வேளை தண்டனை அறிவிக்கப்பட்டால், டிரம்பின் வழக்கறிஞர்கள் உடனடியாக தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். ஏனெனில் டிரம்ப் சிறைக்கு அனுப்பப்பட்டால், அவர் தனது அதிகாரப்பூர்வ வேலையைச் செய்ய முடியாது என்று ஜூலியா கூறுகிறார்.
“இந்த மேல்முறையீட்டு செயல்முறை பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்” என்றும் அவர் கூறினார்.
தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்ததாக வழக்கு
கடந்த ஆண்டு டிரம்ப் மீது சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித், கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.
இந்த வழக்கு 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற பின்னர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பானது. டிரம்ப் இந்த வழக்கில் தன்னை நிரபராதி என்று கூறினார்.
அதிபர் என்ற முறையில் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து அவருக்கு ஓரளவு சட்டப் பாதுகாப்பு இருப்பதை அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு பற்றி குழப்பம் நிலவுகிறது.
எவ்வாறாயினும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் டிரம்பின் முயற்சி அதிபர் என்கிற முறையிலான அவரது அதிகாரப்பூர்வ கடமைகளுக்குள் வராது என்று ஸ்மித் தனது வாதத்தை மீண்டும் முன்வைத்தார்.
முன்னாள் அரசு வழக்கறிஞர் நயீம் ரஹ்மானியின் கூற்றுப்படி, டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதால், கிரிமினல் வழக்குகளில் அவருக்கு இருந்த பிரச்னைகள் ‘முடிவுக்கு வந்ததுள்ளன’.
“பதவியில் இருக்கும் அதிபருக்கு எதிரான குற்றம்சாட்டில் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பது உறுதியாகிவிட்டது. எனவே வாஷிங்டன் டிசி நீதிமன்றத்தில் நடந்து வரும் தேர்தல் மோசடி தொடர்பான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும்” என்று அவர் கூறுகிறார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய ஸ்மித் மறுத்தால், டிரம்ப் ஏற்கனவே கூறியதைப் போல அவரை அதிகாரத்தில் இருந்து நீக்க முடியும்.
“இரண்டு நொடிகளில் நான் அவரை நீக்குவேன்” என்று டிரம்ப் அக்டோபரில் ஒரு வானொலி பேட்டியில் கூறினார்.
அரசு ஆவணங்கள் தொடர்பான வழக்கு
டிரம்பிற்கு எதிரான மற்றொரு வழக்கையும் ஸ்மித் முன்னெடுத்தார். அரசின் ரகசிய ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், இதை டிரம்ப் மறுத்தார்.
டிரம்ப் தனது இல்லமான ‘மார்-ஏ-லாகோ’வில் முக்கியமான அரசு ஆவணங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த ஆவணங்களை சட்டத் துறை திரும்பப் பெற முயன்றது.
இந்த வழக்கை டிரம்ப் அதிபராக இருந்த போது நியமிக்கப்பட்ட ஃபுளோரிடா நீதிபதி எலைன் கேனன் விசாரித்தார். கடந்த ஜூலை மாதம் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார். இந்த வழக்கை விசாரிக்க சட்டத் துறை ஸ்மித்தை முறைகேடாக நியமித்துள்ளதாகக் கூறி குற்றச்சாட்டுகளை அவர் தள்ளுபடி செய்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்மித் மேல்முறையீடு செய்துள்ளதாக ரஹ்மானி கூறினார். ஆனால், தற்போது டிரம்ப் அதிபராவது உறுதியாகிவிட்ட நிலையில், தேர்தல் மோசடி தொடர்பான வழக்கை போல் ரகசிய ஆவணங்கள் தொடர்பான வழக்கும் ரத்து செய்யப்படலாம் என ரஹ்மானி கூறுகிறார்.
“ரகசிய ஆவணங்கள் வழக்கை நிராகரிப்பதற்கான லெவந்த் சர்க்யூட் மேல்முறையீட்டை (Eleventh Circuit appeal) சட்டத்துறை (DOJ) கைவிடும்,” என்று அவர் கூறினார்.
ஜார்ஜியா வழக்கு
ஜார்ஜியாவிலும் டிரம்ப் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இந்த விவகாரம் 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் முடிவை மாற்றச் சதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பானது.
இந்த விஷயத்தில் பல்வேறு தடைகள் இருந்தன. மாவட்ட வழக்கறிஞர் ஃபேன்னி வில்லிஸை தகுதி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழக்கு தொடர்பான வழக்கறிஞர் ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம் வில்லிஸ் இந்த வழக்கில் இருக்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை பரிசீலித்து வருகிறது.
ஆனால் தற்போது டிரம்ப் அதிபராக வந்துவிட்டார். எனவே இந்த வழக்கு இன்னும் தாமதமாகலாம் அல்லது தள்ளுபடி செய்யப்படலாம்.
இந்த வழக்கு ரத்து செய்யப்படும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்து.
டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் விசாரணைகளுக்கு வர முடியுமா என்று நீதிபதி கேட்ட போது டிரம்பின் வழக்கறிஞர் ஸ்டீவ் செடோ, “அமெரிக்க அதிபராக, அவர் அதிபர் அலுவலகத்தில் இருக்கும் வரை, அவர் மீது எந்த வழக்கும் பதியப்பட மாட்டாது என நம்புகிறேன்” என்றார்.
– இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.