அமெரிக்கா: டிரம்ப் அதிபராவதால் ஈலோன் மஸ்க் ஆதாயம் அடைவாரா?

அமெரிக்கா - டொனால்ட் டிரம்ப் - ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் டிரம்பின் மிக முக்கியமான தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக கருதப்பட்டார்
  • எழுதியவர், லில்லி ஜமாலி
  • பதவி, சான் பிரான்சிஸ்கோ நிருபர்

டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரானது உலகின் பெரிய பணக்காரரான ஈலோன் மஸ்கிற்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. காரணம் டிரம்பிற்கு அவர் வெளிப்படையாக தனது ஆதரவை வழங்கி வந்தார்.

தேர்தலில் வாக்களித்த தினத்தன்று இரவு ஃப்ளோரிடாவில் உள்ள மார்-எ-லாகோவில் டிரம்புடன் அவர் இருந்தார்.

டிரம்பின் வெற்றி உறுதியானதும் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்க மக்கள் மாற்றத்திற்கான ஒரு தெளிவான முடிவை டிரம்புக்கு வழங்கியுள்ளனர்” என்று பதிவிட்டார்.

பாம் பீச் கன்வென்ஷன் சென்டரில் தனது வெற்றி உரையில், டிரம்ப் மஸ்கைப் புகழ்ந்து பேசினார். மஸ்கின் நிறுவனங்களில் ஒன்றான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தயாரித்த ராக்கெட் வெற்றிகரமாக தரையிறங்கியதையும் டிரம்ப் மேற்கோள் காட்டினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஜூலை 13 அன்று பென்சில்வேனியாவின் பட்லரில், டிரம்பின் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சிக்குப் பிறகு, ஈலோன் மஸ்க் டிரம்பை வெளிப்படையாக ஆதரித்தார்.

ஈலோன் மஸ்க் அதன் பின்னர் டிரம்பின் மிக முக்கியமான தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக கருதப்பட்டார். டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் `சூப்பர் பிஏசி’ (Super PAC) என்னும் ‘டிரம்ப்-ஆதரவு அரசியல் நடவடிக்கைக் குழு’வை உருவாக்கி, 119 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக நன்கொடை அளித்தார்.

தேர்தல் நாளுக்கு முந்தைய கடைசி வாரங்களில் டிரம்புக்கு ஆதரவான வாக்காளர்களை திரட்ட, (முடிவை) தீர்மானிக்கும் மாகாணங்களை குறிவைத்து பிரசாரங்களுக்கு நிதியளித்தார்.

வாக்காளர்களிடையே டிரம்பிற்கான ஆதரவைப் பெருக்கும் நோக்கத்தில் அந்த மாகாணங்களில் ‘தேர்தல் முடியும்வரை தினமும் வாக்காளர்களுக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர்கள்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தினார். இவ்வாறு வாக்காளர்களுக்கு டாலர்களை கொடுப்பது சட்டச் சிக்கலை ஏற்படுத்தியது. சட்டவிரோதமானது என விமர்சிக்கப்பட்டது. எனினும், அந்நடவடிக்கையை தொடரலாம் என நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்தார்.

அமெரிக்கா - டொனால்ட் டிரம்ப் - ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மஸ்க் இந்த தேர்தலில் டிரம்புக்காக தனது பெயர், பணம் மற்றும் தளம் என அனைத்தையும் பயன்படுத்தினார்.

மஸ்க் இந்த தேர்தலில் டிரம்புக்காக தனது பெயர், பணம் மற்றும் தளம் என அனைத்தையும் பயன்படுத்தினார். இதனால் அவருக்கு என்ன பலன் என்ற கேள்விக்கு பதில் என்னவெனில் டிரம்பின் வெற்றியில் நிறைய ஆதாயங்களைப் பெறுவார்.

டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள “அரசாங்கத்தில் தேவையற்றதை” அகற்ற மஸ்கை பணியமர்த்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

மஸ்கின் சாத்தியமான முயற்சியை “அரசு செயல்திறன் துறை” அல்லது DOGE (Department of Government Efficiency) என்று குறிப்பிட்டுள்ளார். DOGE என்பது அவர் பிரபலப்படுத்திய மீம் மற்றும் கிரிப்டோகரன்சியின் பெயர்.

ஸ்பேஸ்எக்ஸின் உரிமையாளராக மஸ்க் டிரம்பின் அதிபர் பதவி மூலமாக பயனடையலாம். அரசாங்க செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் வணிகத்தில் ஸ்பேஸ்எக்ஸ் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

வெள்ளை மாளிகையில் உள்ள அவரது நெருங்கிய நண்பர் டிரம்ப் மூலமாக மஸ்க் அரசாங்க உறவுகளை மேலும் பயன்படுத்த முற்படலாம்.

போயிங் (Boeing) போன்ற போட்டி நிறுவனங்கள் உடனான அரசாங்க ஒப்பந்தங்களின் கட்டமைப்பை மஸ்க் விமர்சித்தார். அவரைப் பொறுத்தவரை, அத்தகைய கட்டமைப்பு திட்டமிடப்பட்ட பட்ஜெட் மற்றும் நேரத்திற்குள் திட்டத்தை முடிக்க ஊக்குவிக்காது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உளவு செயற்கைக்கோள்களின் கட்டுமானத்திலும் முன்னேறியுள்ளது. அதற்காக பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனும் அமெரிக்க உளவு அமைப்புகளும் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

அமெரிக்கா - டொனால்ட் டிரம்ப் - ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அக்டோபர் மாத தொடக்கத்தில் பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் டிரம்பை ஆதரித்துப் பேசிய மஸ்க்

இதனிடையே, “குறைந்த ஒழுங்குமுறை சுமை” (the lowest regulatory burden) மூலம் வரையறுக்கப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்ட நிர்வாக பாணியில் மஸ்கின் மின்சார கார் நிறுவனமான டெஸ்லா, லாபங்களை அறுவடை செய்ய முடியும்.

கடந்த மாதம், சாலை பாதுகாப்பை ஒழுங்குப்படுத்தும் அமெரிக்க நிறுவனம் டெஸ்லாவின் தானியங்கி மென்பொருள் அமைப்புகளை ஆய்வு செய்வதை வெளிப்படுத்தியது.

டெஸ்லா தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதைத் தடுக்க முயன்றதாகக் கூறப்படும் விமர்சனத்துக்கும் மஸ்க் ஆளானார். அந்த சமயத்தில் டிரம்ப் உடனான எக்ஸ் தள உரையாடலில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது பற்றி இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து யுனைடெட் ஆட்டோ தொழிலாளர்கள் டிரம்ப் மற்றும் மஸ்க் இருவருக்கும் எதிராக நியாயமற்ற தொழிலாளர் நடைமுறை குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் மீதான வரிகளை குறைப்பதாக டிரம்ப் உறுதியளித்துள்ளார். டிரம்ப் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார் என்று மஸ்க் நம்புகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.