தலைநகர் டெல்லியில் குளிர் காலத்தின்போது காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், நடப்பு குளிர்காலத்தில் டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதியில் காற்று மாசு மோசமான நிலைக்கு சென்றுள்ளதால், பயிர்க்கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதத்தை மத்திய அரசு இரு மடங்காக உயர்த்தி உள்ளது.
காற்று மாசுபாடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து, இது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 2 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரித்தால் சுற்றுச்சூழல் இழப்பீடாக இனி 5,000 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்கான அபராதம் ரூ.5,000-க்கு பதிலாக ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு 30,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.