டிரம்புக்கு குவியும் வாழ்த்துகள் – யுக்ரேன், இஸ்ரேல், இந்தியா கூறியது என்ன?

அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார்.

வெற்றிமுகத்தில் இருக்கும் போதே ஃபுளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப் “இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த அற்புதமான வெற்றியாகும். இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோதி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட உலகத் தலைவர்கள் பலரும் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்திய பிரதமர் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அதிபர் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற என் நண்பர் டொனால்ட் டிரம்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்.” என்று கூறியுள்ளார்.

“நமது மக்களின் மேம்பாட்டிற்காகவும், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளம் ஆகியவற்றை மேம்படுத்தவும் நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.” என்று மோதி தனது பதிவில் கூறியுள்ளார்.

அந்தப் பதிவில் டொனால்ட் டிரம்ப் உடனான தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார் மோதி.

அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், NarendraModi/X

படக்குறிப்பு, டிரம்பை வாழ்த்திய நரேந்திர மோதி

இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டொனால்ட் டிரம்புக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “வரலாற்றின் மிகப்பெரிய மறுவரவிற்கு (Comeback) வாழ்த்துகள்! இதுவொரு மாபெரும் வெற்றி” என்று கூறியுள்ளார்.

“வரலாற்று சிறப்புமிக்க வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை நீங்கள் மீண்டும் கைப்பற்றியிருப்பது, அமெரிக்காவிற்கு ஒரு புதிய தொடக்கத்தையும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவிற்கு ஒரு வலிமையான மறுசீரமைப்பையும் வழங்குகிறது” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியிருப்பது, அமெரிக்காவிற்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தரும் என நெதன்யாகு கருத்து

பிரிட்டன் பிரதமர் வாழ்த்து

பிரிட்டன் பிரதமர் கிய்ர் ஸ்டார்மரும் டொனால்ட் டிரம்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“வரவிருக்கும் ஆண்டுகளில் உங்களுடன் பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். மிக நெருக்கமான நட்பு நாடுகள் என்ற முறையில், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை பாதுகாப்பதில் நாம் ஒன்றாக, உறுதுணையாக நிற்கிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு முதல் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் வரை, பிரிட்டன் -அமெரிக்கா சிறப்பு உறவு, வரவிருக்கும் ஆண்டுகளில் தொடர்ந்து முன்னேற்றம் காணும் என்பதை நான் அறிவேன்.” என்றும் கிய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் கிய்ர் ஸ்டார்மரும் டொனால்ட் டிரம்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் அதிபர் வாழ்த்து

யுக்ரேன் அதிபர் வொலொதிமிர் ஸெலென்ஸ்கி, டொனால்ட் டிரம்பை வாழ்த்தியுள்ளார். “சர்வதேச விவகாரங்களில் “வலிமை மூலம் அமைதி” என்ற கொள்கையைக் கொண்ட டிரம்பை நான் வாழ்த்துகிறேன். இது தான் யுக்ரேனுக்கும் அமைதியை வழங்கும். இதனை நாம் இருவரும் இணைந்து நடைமுறைப்படுத்துவோம்,” என்று கூறி தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார் அவர்.

“டொனால்ட் டிரம்பின் தலைமையின் கீழ் வலிமையான அமெரிக்காவை நான் எதிர்பார்க்கிறேன். அமெரிக்காவின் இரு கட்சிகளும் யுக்ரேனுக்காக வழங்கிய வலிமையான ஆதரவை நாங்கள் நம்பியுள்ளோம்.

இரு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த ஒன்றாக பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். ஐரோப்பாவில் ஒரு வலுவான ராணுவ சக்தியைக் கொண்ட யுக்ரேன் ஐரோப்பா மற்றும் அட்லாண்டிக் பிரதேசத்தில் உள்ள சமூகங்களுக்கான நீண்ட கால அமைதி மற்றும் பாதுகாப்பினை எங்கள் கூட்டணி நாடுகள் உதவியுடன் நிலை நிறுத்த உறுதி பூண்டுள்ளோம்.

அதிபர் டிரம்பை நேரில் பார்த்து வாழ்த்தவும், அமெரிக்காவுடனான யுக்ரேனின் மூலோபய கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவும் ஆவலுடன் இருக்கிறேன்,” என்று அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விரைவில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூற ஆவலுடன் இருக்கிறேன் என யுக்ரேன் அதிபர் கூறியுள்ளார்.

ஹங்கேரி பிரதமர் வாழ்த்து

டிரம்பின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்பட்ட ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.

“உலக நாடுகள் அனைத்திற்கும் தேவையான முக்கியமான வெற்றி இது,” என்று குறிப்பிட்ட அவர், “அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மறுவரவு இது,” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக போட்டியிட முடிவு செய்த போது அதனை ஆர்பன் வெளிப்படையாக ஆதரித்தார். 2016ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள உறுப்பு நாடுகளில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு வழங்கிய முதல் மற்றும் ஒரே தலைவர் இவர் மட்டுமே.

அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Reuters/X

படக்குறிப்பு, ஹங்கேரி பிரதமருடன் டொனால்ட் டிரம்ப்

வாழ்த்திய இதர தலைவர்கள்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், டிரம்பை வாழ்த்தியுள்ளார். அவருடைய வாழ்த்து செய்தியில், “அமைதிக்காகவும் செழுமைக்காகவும் மரியாதையுடனும் லட்சியத்துடனும்,” முன்பு ஒன்றாக பணியாற்றியதைப் போன்று தொடர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டே, டிரம்பின் தலைமை “எங்களின் கூட்டாளிகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். அவருடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்,” என்று கூறியுள்ளார்.

நேட்டோவை டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்திருக்கிறார். கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் ஐரோப்பிய உறுப்பு நாடுகள், பாதுகாப்பிற்காக போதுமான நிதியை வழங்குவதில்லை என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி , “இரு நாடுகளும் அசைக்க முடியாத கூட்டணி, பொது மதிப்புகள் (Common Values), வரலாற்று ரீதியிலான நட்பால் இணைந்திருக்கிறது. இது மூலோபாய கூட்டணி. வருங்காலத்தில் இந்த கூட்டணி வலுப்பெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்,” என்று கூறி வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார்.

சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “அமெரிக்க அதிபர் தேர்தலானது அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரம். அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம்,” என்று கூறினார்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜக்ரோவா, “அமெரிக்கா அதன் ஜனநாயகத்தை முதலில் சரி செய்ய வேண்டும். அதன் சொந்த தோல்விகளுக்கு மற்றவர்களை குற்றம் சொல்லக் கூடாது,” என்று கூறினார். கடந்த முறை தேர்தலின் போது ரஷ்யாவின் தலையீடு அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்தியது என்று குற்றம் சுமத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு