மோகனுக்கெதிரான சட்ட நடவடிக்கை அவதூறு செய்யும் போலிகளுக்கு ஒரு எச்சரிக்கையே ; கோ.கருணாகரம்(ஜனா) ! on Wednesday, November 06, 2024
என்னைப் பற்றியும் சங்குச் சின்னம் தொடர்பிலும் அவதூறு பரப்பிய கணபதிப்பிள்ளை மோகனுக்கெதிரான சட்ட நடவடிக்கை அவதூறுப்பிரச்சாரம் மேற்கொள்ளும் போலிகளுக்கு ஒரு எச்சரிக்கையே என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
செட்டிபாளையக் கிராம மக்களின் ஏற்பாட்டில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதியானது தமிழ்த் தேசியத்துடன் காலங்காலமாக உறுதியாக நிற்பதாகும். இம்முறை நடைபெறும் தேர்தலிலும் இது நிரூபிக்கப்படும். தமிழ்த் தேசிய விரோதச் செயற்பாட்டில் ஈடுபட்ட எவருக்கும் இம்முறை பட்டிருப்புத் தொகுதி ஆதரவு வழங்காது. நமது சொந்த மண்ணில் வைத்து என்னையே குறை கூறிச் சென்ற போலித் தேசிய வேடதாரிகளுக்கு எமது மக்கள் இத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவர்.
தன்னுடைய தரப்பில் ஊழல்வாதிகள், இல்லை, கொள்ளைக்காரர்கள் இல்லை. கொலைகாரர்கள் இல்லை என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் ஒருவர் கூறுகின்றார். இது இறால் தன்னுடைய தலைக்குள்ளேயே கழிவை வைத்துக்கொண்டு நாற்றம் பற்றிப் பேசுவது போலவே இருக்கிறது.
ஆனால். அவரே ஒரு ஏமாற்றுப் பேர்வழி, ஒரு போலி. அவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது கோடிக்கணக்கில் ஒதுக்கீட்டை வாங்கி செலவிட்டுவிட்டு ஒன்றரை மாதத்தில் அவருக்கு எதிராக சஜித் பிரேமதாசவுக்கு, நோட்டிஸ் அடிக்கிறார். அவருடைய படத்தையும் வீட்டுச் சின்னத்தையும் சேர்த்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பெயரும் சேர்த்து அந்த நோட்டிஸ் வெளியிடப்பட்டிருந்தது. அப்படியானால் சஜித் பிரேமதாச அக்கட்சியின் உறுப்பினரா. ஆல்லது அவரும் உறுப்பினராக சேர்க்கப்பட்டாரா? உண்மையில் அவ்வாறு செய்வது அரசியல் தர்மமா.
கோடிக்கணக்கான பணத்தைப் பெற்று ஒரு ஜனாதிபதியையே ஏமாற்றியவரால் சாதாரண ஒரு வாக்காளரை ஏமாற்றுவதற்கு எத்தனை செக்கன்கள் வேண்டும். அரசியல்வாதிகள் மக்களுக்கு உதாரணமானவர்களாக இருக்கவேண்டும். நேர்மையான அரசியல் செய்யவேண்டும்.
மாவட்டத்தில் என்று 33 சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுகின்றன. அதிலொரு சுயேட்சைக்குழுவின் தலைமை வேட்பாளரான கணபதிப்பிள்ளை மோகன் தேற்றாத் தீவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் சங்குச் சின்னம் உருவாகியதன் பிரதான சூத்திரதாரி ஜனா அண்ணன் எனவும் சங்குச்சின்னம் உருவான வரலாற்றினை தானே முழுவதும் அறிந்தவன் எனக் கூறியுள்ளார்.
சங்குச்சின்னம் தமிழர்களின் ஐக்கியத்தின் சின்னமாக உருவாகியது. சங்குச் சின்னம் வட கிழக்குத் தமிழர்களின் ஒற்றுமைக்கு ஆக்கபூர்வமான கட்டியம் கூறியது. ஆத்தகைய செயற்பாடு ஒன்றின் பிரதான சூத்திரதாரியாக நான் இருப்பதையிட்டு பெருமைப்படுகின்றேன். இதைப் பேசுவதற்குரிய யோக்கியதை மோகனுக்கு இருக்கிறதா என்பதில் நான் ஐயுறுகின்றேன். இவ்வாறு கூறியதன் மூலம் வடகிழக்குத் தமிழர்களின் முதன்மைத் தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு கூறிய அவர் இதற்குப் பகரமாக ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ஐந்து கோடிரூபாவினையும் ஒதுக்கீட்டினையும் பெற்றுக் கொண்டதாகவும் ஒரு பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு எனது அரசியல் ரீதியதான நற்பெறருக்கு ஏற்படுத்தும் முகமாக ஒரு போலிப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளார்.
கணபதிப்பிள்ளை மோகன் என்மீது மேற்கொண்ட அவதூறுப்பிரச்சாரத்துக்கு எதிராக எனது சட்டத்தரணி ஊடாக பத்துக் கோடி ரூபா இழப்பீடு கேட்டு கோரிக்கைக் கடிதம் அனுப்பிவைத்துள்ளேன். கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் அவர் உரிய பதில் வழங்காவிட்டால் அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எமது சட்டத்தரணி குழாம் மேற்கொள்ளும். இத்தகைய அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளும் போலிகளுக்கு ஒரு முன்னெச்சரிக்கையாக அமையும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்தேன் என தெரிவித்தார்.