பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்தை பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது வேதனை பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நிவாரணத்தைப் பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய இக்கட்டான நிலை உள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா வேதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக்கூறி ரூ. 13.66 லட்சம் வசூலித்து ஏமாற்றியதாக வேலூரைச் சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஜெயசிங் வசந்த் ரஞ்சித் என்பவருக்கு எதிராக கோயம்பேடு போலீஸில் புகார் அளித்திருந்தார். தனது புகார் மீது எப்ஐஆர் பதிவு செய்த போலீஸார் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவி்ல்லை எனக்கூறி மனோகர்தாஸ் கடந்த 2022-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது 2 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து இந்த வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் போலீஸார் உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி எந்த நடவடிக்கையும் எடுக்கவி்ல்லை எனக்கூறி மனோகர்தாஸ் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கடந்தமுறை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கடந்த 2022-ம் ஆண்டு பிப்.16 முதல் கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியில் இருந்த 6 காவல் ஆய்வாளர்கள், அந்த எல்லைக்குட்பட்ட 3 உதவி ஆணையர்கள், 4 துணை ஆணையர்கள் அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது 11 காவல் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகியிருந்தனர். 2 பேர் ஆஜராகவி்ல்லை. மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜி்ன்னா ஆஜராகி, ஆஜராகாத அந்த 2 அதிகாரிகள் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளதாகவும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயசிங் வசந்த் ரஞ்சித் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கின் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, இதுபோல பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நிவாரணத்தைப்பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட வேண்டிய இக்கட்டான நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தார். மேலும், அதிகாரிகளை தண்டிக்கும் நோக்கம் நீதிமன்றத்துக்கு இல்லை என்றும், அவர்கள் தங்களது தவறை உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஆஜராகக்கூறியதாகவும் தெரிவித்தார்.
பின்னர், நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்தும் வகையில் காவல்துறை தயாரிக்கவுள்ள வழிகாட்டு நெறிமுறைக்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் தாமதம் செய்ததற்கான காரணங்களை விளக்கி மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.19-க்கு தள்ளி வைத்துள்ளார். அன்றைய தினம் கோயம்பேடு காவல் நிலையத்தில் தற்போது பணியில் உள்ள ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் ஆகிய 2 பேர் மட்டும் ஆஜராக வேண்டும், என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.