கொழும்பு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன் – சீ.வை.பி.ராம்

by 9vbzz1

கொழும்பு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன் – சீ.வை.பி.ராம் அரசியல் அனுபவம் மற்றும் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அறிவை பயன்படுத்தி கொழும்பு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டத்தை எங்களால் முன்னெடுக்க முடியும். அதற்கான சந்தர்ப்பத்தை கொழும்பு மக்கள் எனக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் வடகொழும்பு அமைப்பாளருமான சீ.வை.பி.ராம் தெரிவித்தார்.

கொழும்பில் பல்வேறு பிரதேசங்களில் செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்தமுறை பாராளுமன்றத்துக்கு புது முகங்களை அனுப்பவேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இருக்கின்றனர். கடந்த காலங்களில் மக்கள் பிரதிநிதிகளில் அதிகமானவர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களை மறந்து செயற்பட்டு வந்துள்ளனர். தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வாக்கு கேட்டுவிட்டு செல்கிறார்கள். அவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி சென்ற பின்னர் தங்களுக்கு வாக்களித்த மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை.

அதனால் இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மக்கள் என்னை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்பினால், எனது அரசியல் அனுபவம் மற்றும் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான  கல்வியை பயன்படுத்தி கொழும்பு மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன். கொழும்பு மக்கள் என்னை கொழும்பு மாநகர சகைக்கும் மேல்மாகாண சபைக்கும் தெரிவு செய்து அனுப்பி இருந்தார்கள். அதன் மூலம் என்னால் முடிந்த சேவையை அந்த மக்களுக்கு நான் ஆற்றி உள்ளேன் என்பதை எனது மக்கள் அறிவார்கள்.

கொழும்பு மாவட்டத்தில் வாழும் வறிய மக்கள் முதல் நடுத்தர வகுப்பார் வரை, அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்களது பிள்ளைகளின் கல்விக்காகவும் எனது பதவிகளுக்குட்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தியும் அரசியலுக்கு அப்பாற்பட்ட ‘ராம் நற்பணி மன்றத்தினூடகவும்’  பல நற்பணிகளை செய்துள்ளேன். எனக்கு வழங்கப்பட்ட பன்முகப் படுத்தப்பட்ட நிதியைக் கொண்டு எழுப்பப்பட்ட பாடசாலைக் கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் எனது சேவையின் சான்றுகளாக நிலைத்துள்ளன.

எனவே மக்கள் இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் அரசியல் அனுபவமுள்ள புது முகங்களை தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறனர்.அதனால் கொழும்பு மக்கள், குறிப்பாக வடகொழும்பு மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் வட கொழும்பில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்துகொள்ள முடியும். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்