தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் செய்து அனுபவம் இருக்கிறது. ஆனால் அரசாங்கம் செய்த அனுபவம் இல்லை

by sakana1

தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் செய்து அனுபவம் இருக்கிறது. ஆனால் அரசாங்கம் செய்த அனுபவம் இல்லை : சாகல ரத்நாயக்க ! on Tuesday, November 05, 2024

தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் செய்து அனுபவம் இருக்கிறது. ஆனால் அரசாங்கம் செய்த அனுபவம் இல்லை. அதனால்தான் பாெருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அவர்கள் இன்னும் நாட்டுக்கு வெளிப்படுத்தாமல் இருக்கின்றனர். அவ்வாறான வேலைத்திட்டம் அவர்களிடம் இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்திக்கு அரசாங்கம் செய்த அனுபவம் இல்லை என்பது அவர்களின் கடந்த ஒரு மாதகால நடவடிக்கைகளில் இருந்து தெரிந்துகொள்ள முடியும். ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இன்னும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு விமர்சன அரசியல் செய்வது போன்றே தற்போது செயற்பட்டு வருகிது.

நாட்டை நிர்வகிக்கும் அவர்களுக்கு ஒரு முறையான வேலைத்திட்டம் இருக்க வேண்டும். நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு பயணப்பாதை இருக்க வேண்டும்.

ஆனால் இதுவரை அவர்கள் அவ்வாறான எந்த வேலைத்திட்டத்தையும் நாட்டுக்கு முன்வைத்ததில்லை. அவர்களிடம் அனுபவம் இல்லாமையே இதற்கு காரணமாகும்.

எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் காரணமாக படிப்படியாக அபிவிருத்தியடைந்து வந்தது. முறையான வேலைத்திட்டம் இருந்தமையாலே அவ்வாறு செய்ய முடிந்தது.

அரசாங்கத்தை கொண்டு செல்லும் எமது பயண வழியை நாங்கள் முன்வைத்திருந்தோம். அப்போது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எமது வேலைத்திட்டத்தை விமர்சித்தார்கள். ஆனால் அதற்கு மாற்று வழியை அவர்கள் முன்வைக்கவில்லை.

தற்போது அதிகாரத்தில் இருக்கும் இவர்களுக்கு நாட்டை அபிவிருத்தி செய்ய எந்த வேலைத்திட்டமும் இல்லை. அவ்வாறு வேலைத்திட்டம் இருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பார்த்து எமது ஆலாேசனைகளை முன்வைக்க முடியும்.

வீழ்ச்சியடைந்திருந்த இந்த நாடு தற்போதுதான் மீண்டும் அபிவிருத்தியடைய ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்து, மக்கள் பொருட்களுக்கு வரிசையில் இருக்கும் நிலை ஏற்பட யாரும் விருப்பம் இல்லை. அந்த நிலைக்கு செல்லாமல் தடுப்பதற்கே, நாட்டை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெளிப்படுத்துமாறு நாங்கள் தெரிவித்து வருகிறோம்.

நாட்டின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் நாங்கள் கைச்சாத்திட்டிருக்கிறோம். அதன் பிரகாரம் இன்னும் 4 வருடங்களில் மீண்டும் கடன் செலுத்த வேண்டி இருக்கிறது. அதற்கு தேவையான வேலைத்திட்டம் என்ன என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

அரசாங்கம் ரணில் விக்ரமசிங்க கொண்டு சென்ற பொருளாதார வேலைத்திட்டத்தை அவ்வாறே முன்னெடுத்து செல்கிறதா அல்லது வேறு வேலைத்திட்டத்தை வைத்திருக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அப்போதுதான் எமக்கும் அது தொடர்பில் ஆலாேசனைகளை தெரிவிக்க முடியும். அவ்வாறு இல்லாவிடின் ராஜபக்ஷ்வினர் போன்று நினைத்த பிரகாரம் செயற்பட்டால் நாடு வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாமல்போகும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்