இரான்: பல்கலைக்கழகத்தில் ஆடைகளை களைந்த பெண் ஹிஜாபுக்கு எதிராகப் போராடினாரா?

கட்டாய ஹிஜாப்

பட மூலாதாரம், Telegram

படக்குறிப்பு, ஒரு பெண் ஆடைகளைக் களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக ஊடகத்தில் வெளியானது.
  • எழுதியவர், பர்ஹாம் கோபாடி
  • பதவி, பிபிசி பாரசீகம்

`கட்டாய ஹிஜாப் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக வளாகத்தில் தனது ஆடைகளைக் களைந்த பெண்ணை காவலில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என இரானில் மனித உரிமை ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

சனிக்கிழமையன்று, டெஹ்ரானின் இஸ்லாமிய ஆசாத் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் பிளாக் 1 பகுதியில் நடைபாதையில் ஒரு பெண் தனது உள்ளாடைகளுடன் படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானது.

மற்றொரு காணொளியில், அந்தப் பெண் தனது உள்ளாடைகளைக் களைவது போலக் காட்டப்பட்டுள்ளது, சற்று நேரத்தில் சாதாரண உடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்து காருக்குள் ஏற்றுகிறார்கள்.

அந்தப் பெண் “மனநலம் பாதிக்கப்பட்டு”, “மனநல மருத்துவமனைக்கு” அழைத்துச் செல்லப்பட்டதாக ஆசாத் பல்கலைக்கழகம் கூறியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பெண்கள், வாழ்க்கை மற்றும் சுதந்திரம் இயக்கத்தின் செயல்பாடா?

சமூக ஊடகங்களில் பல இரானியர்கள் இந்தக் கூற்றை மறுத்தனர். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தப் பெண்ணின் செயலை, “பெண்கள், வாழ்க்கை மற்றும் சுதந்திரம்” (Women, Life, Freedom) இயக்கத்தின் ஒரு பகுதி என்று பலர் விவரித்தனர். இந்த இயக்கத்தில் இருக்கும் பல பெண்கள் தங்கள் தலைமுடியை மறைக்க வேண்டும், நீண்ட, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என்ற கடுமையான சட்டங்களை பகிரங்கமாக மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாசா அமினி என்ற குர்திஷ் பெண் “சரியாக” ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இதையடுத்து நாடு தழுவிய போராட்டம் நடந்தது. அதில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக முந்தைய செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.

டெலிகிராம் செயலியில் உள்ள அமீர் கபீர் செய்தி சேனல் (Amirkabir Newsletter) “இரானிய மாணவர் இயக்கத்திற்கான ஊடகம்” என்று தன்னை விவரிக்கிறது. இரானிய பெண் ஆடைகளைக் களைந்ததால் கைது செய்யப்பட்ட செய்தியை இந்த சேனல் தான் முதலில் வெளியிட்டது. அந்தச் செய்தியின்படி, ஹிஜாப் அணியாததால் அந்தப் பெண் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

`ஹிஜாப் சட்டங்களுக்கு எதிராக போராடிய இரானிய பெண்ணை விடுவிக்க வேண்டும்’ : சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பட மூலாதாரம், Getty Images

மேலும் அந்தச் செய்தியில், “அந்தப் பெண்ணை சாதாரண ஆடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் காருக்குள் ஏற்றினர். அப்போது ​​அந்தப் பெண்ணின் தலை காரின் கதவு மீது மோதியது. இதனால் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னர் அந்தப் பெண்ணை அவர்கள் ஏதோ ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்” என்று எழுதப்பட்டுள்ளது.

“ஆசாத் பல்கலைக்கழகத்தில் வகுப்பறைக்குள் நுழைந்த அந்தப் பெண் மாணவர்களைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார் என்றும், விரிவுரையாளர் எதிர்த்தபோது, ​​கூச்சலிட்டுக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறினார்” என்றும் நேரில் பார்த்த ஒருவர் பிபிசி பாரசீக சேவையிடம் கூறினார்.

நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, அந்தப் பெண் மாணவர்களை நோக்கி “நான் உங்களைக் காப்பாற்ற வந்தேன்” என்று உரக்க கத்தினார்.

இதற்கிடையில், இரானிய ஊடகம் ஒரு நபரின் முகத்தை மறைத்து ஒரு வீடியோவை வெளியிட்டது. அவர் அந்தப் பெண்ணின் கணவர் என்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்காக அவரின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று அந்த நபர் கூறியதாகவும் காணொளியில் உள்ளது. ஆனால் இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை பிபிசி பாரசீக சேவையால் சரிபார்க்க முடியவில்லை.

கட்டாய ஹிஜாப் சட்டத்திற்கான எதிர்ப்பா?

இரான்: பல்கலைக்கழகத்தில் ஆடைகளை களைந்த பெண் ஹிஜாபுக்கு எதிராகப் போராடினாரா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கனடாவில் வசிக்கும் பெண்கள் உரிமை ஆர்வலர் அஸ்ஸாம் ஜன்ஜாராஃபி, 2018இல் ஒரு போராட்டத்தின்போது ஹிஜாபை அகற்றிய பின்னர் ஈரானில் இருந்து மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தப்பி ஓடிவிட்டார்: “நான் கட்டாய ஹிஜாப் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தபோது கைது செய்யப்பட்டேன்.”

மேலும், “கட்டாய ஹிஜாப் சட்டத்தை எதிர்த்து நான் போராடியபோது, ​​பாதுகாப்பு அதிகாரிகள் என்னைக் கைது செய்தனர். அதோடு, எனது குடும்பத்தினரை மிரட்டி, என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அறிவிக்கும்படி அழுத்தம் கொடுத்தனர்” என்று அஸ்ஸாம் ஜாங்ரவி கூறினார்.

அஸ்ஸாம் ஜாங்ரவி 2018இல் ஒரு போராட்டத்தின்போது, தனது ஹிஜாப்பை அகற்றியதற்காக இரானில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இரானில் இருந்து வெளியேறினார்.

இரான் “வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியை உடனடியாகவும் நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும்” என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது.

அந்த அமைப்பு, “அதிகாரிகள் அவரை இன்னும் விடுதலை செய்யவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சித்திரவதை செய்வதோ மோசமாக நடத்துவதோ கூடாது. அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு வழக்கறிஞரை அணுகுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

“அவர் கைது செய்யப்பட்டபோது அவருக்கு எதிராக வன்முறை மற்றும் பாலியல் தொந்தரவு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதைச் சுயாதீனமாகவும் பாரபட்சமின்றியும் விசாரிக்க வேண்டும். மேலும் இந்தச் செயல்களுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அம்னெஸ்டி இரான் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இரான் சிறையில் இருந்து அறிக்கை வெளியிட்ட நர்கஸ் முகமதி

`ஹிஜாப் சட்டங்களுக்கு எதிராக போராடிய இரானிய பெண்ணை விடுவிக்க வேண்டும்’ : சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பட மூலாதாரம், Getty Images

ஐநா மனித உரிமைகள் பேரவையின் இரானுக்கான சிறப்பு அறிக்கையாளராக ஆகஸ்ட் மாதம் தனது பணியைத் தொடங்கிய மை சடோ தனது எக்ஸ் பக்கத்தில், “நான் இந்தச் சம்பவத்தையும், அதிகாரிகளின் பதிலையும் உன்னிப்பாகக் கவனிப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இரானில் சிறையில் உள்ள அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இரானியரான நர்கஸ் முகமதி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“பெண்கள் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் தாக்கப்படுகின்றனர். ஆனாலும் நாங்கள் அதிகாரத்திற்குத் தலை வணங்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.

“பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவி நீண்ட கால ஒடுக்குமுறைக்கான கருவியாக இருந்த தனது உடலை, எதிர்ப்பு தெரிவிக்கும் கருவியாகப் பயன்படுத்தினார். அவரது விடுதலை மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் அழைப்பு விடுக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.