காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்திருந்த பணிப் பகிஷ்கரிப்பு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவரினால் ஏனைய வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தி கடந்த வாரம் ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்தனர்.
கடந்த இரண்டு தசாப்த காலமாகவே, குறித்த வைத்தியர் இவ்வாறான மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும், இதுதொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எனவே, குறித்த வைத்தியருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்று மீண்டும் போராட்டம் முன்னெடுப்பதாக வைத்தியர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்திருந்தனர்
இதன்காரணமாக நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியதை அவதானிக்க முடிந்தது.
எனினும் இந்த விடயத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விசேட வைத்தியரை இடமாற்றம் செய்ய சுகாதார அமைச்சு ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியரை மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான எழுத்துமூல அறிவித்தல் இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.