டுபாய் துணைத் தூதரகத்தினால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமான பொது மன்னிப்பு காலமானது முன்னதாக ஒக்டோபர் 31 ஆம் திகதி அன்று நிறைவடையவிருந்தது.
இந்த காலத்தில் 8,513 இலங்கையர்களுக்கு பயன் பெற்றுள்ளனர்.
தொழில் வழங்குனரின் சட்டப்பூர்வ அனுமதியின்றி பணியிடத்திலிருந்து விலகி இருப்பவர்கள் மற்றும் செல்லுபடியாகும் விசா இல்லாதவர்கள் இந்த பொது மன்னிப்புக் காலத்தில் அபராதம் அல்லது பிற சட்டத் தடைகளுக்கு உட்படாமல் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது சம்பந்தப்பட்ட விசா ஆவணங்களை சட்டப்பூர்வமாக செயல்படுத்தவோ வாய்ப்புள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் பொது மன்னிப்புக் காலத்தின் போது தமது விசாக்களை சட்டப்பூர்வமாக ஏற்பாடு செய்ய அல்லது இலங்கைக்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.