இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி ஊடாக மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு ! on Tuesday, November 05, 2024
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மற்றும் இந்திய குடியரசின் பிரதமர் ஆகியோரது தொலைநோக்கான வழிகாட்டலின் கீழ் இந்திய-இலங்கை நட்புறவு திட்டத்தின் ஊடாக இந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுமார் 279 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி புதிய சத்திரசிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்தை கையளிக்கும் நிகழ்வு நேற்று 04ம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித குணரத்ன மஹிபால ஆகியோரினால் கட்டிடத்தின் நினைவுக் கல் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன்,கட்டிடம் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரின் பாரியார் திருமதி. சந்தோஷ் ஜா, கொழும்பு இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புக்கான கொன்சியூலர் மைத்ரி குல்கர்னி,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன்,சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்கள்,சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள்,மட்டகளப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள்,தாதியர்கள்,உத்தியோகத்தர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட கௌரவிப்பு வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சனி கணேசலிங்கம், சிரேஷ்ட சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் பீ.ஜீப்ரா ஆகியோரினால் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித குணரத்ன மஹிபாலவும் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இங்கு திறந்து வைக்கப்பட்ட சத்திர சிகிச்சைப் பிரிவில் (04) நான்கு சத்திர சிகிச்சை அறைகளும்,தீவிர சிகிச்சை பிரிவில் (10) பத்து தீவிர சிகிச்சைக்கான கட்டில்களும் ஏனைய அதற்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதுடன் இதனால் கிழக்கு மாகாண மக்கள் பெரிதும் நன்மையடயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.