முத்தகவை நிறைவைக் கொண்டாடி மகிழ்ந்த தமிழாலயம் முன்சன்.

by wp_shnn

தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா கடந்த 27.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 09.45 மணிக்கு தாயகம், மொழி, பண்பாடு என்பவற்றைக் காத்திடும் நோக்கத்தோடு பயணித்த மாவீரர்களையும், மக்களையும் நினைவேந்திப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை முன்சன் தமிழாலயத்தின் முன்னாள் பெற்றோர் பிரதிநிதியும் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் தென்மாநிலச் செயற்பாட்டாளரில் ஒருவருமான திரு. கிருபாமூர்த்தி சபேசன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து சிறப்பு வருகையாளர்களைப் பண்பாடு தழுவி, மண்டபத்தினுள் அழைத்து வந்தனர். அவர்களைத் தமிழாலயத்தின் பேரக்குழந்தைகளும் இணைந்து வரவேற்றமை சிறப்பிற்குரியதாகும்.

முத்தகவை நிறைவு விழாவில் அனைத்துலக அகதிகள் குடும்பங்களுக்கான செயற்பாட்டாளர் திருமதி ஊர்சுலா மாயர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம், தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ. மனோகரன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநிலப் பொறுப்பாளர் திரு. கனகையா சிறீகாந்தன், தமிழ்மணிப் புலவர் ஆசிரியர் திரு. ஆறுமுகம் விவேகானந்தன், தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மாநிலச் செயற்பாட்டாளர் “தமிழ் வாரிதி” திருமதி சௌந்தராதேவி அரசரட்ணம், முன்சன் கோட்டப் பொறுப்பாளர் திரு. ஜெகநாதன் சுகுமார், முன்சன் தமிழாலயத்தின் உதவி நிர்வாகி, ஆசிரியை திருமதி பகீரதி ஆனந்தசிங்கம் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றித் தொடங்கிவைத்தனர். இவர்களுடன் தமிழ்க் கல்விக் கழகத்தின் மற்றைய பிரிவுசார் பொறுப்பாளர்கள், பிரிவுசார் துணைப் பொறுப்பாளர்கள், முன்னிலைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அயல் தமிழாலயங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

அகவணக்கம், தமிழாலயப்பண் மற்றும் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து தமிழாலய நிர்வாகி “தமிழ் மாணி” திரு. நாகராசா நிர்மலதாசன் அவர்களின் வரவேற்புரையுடன் அரங்க நிகழ்வுகள் தொடங்கப்பட்டன. கலை நிகழ்வுகளோடு கடந்த ஐந்து ஆண்டுகளில் தேர்வு, தமிழ்த்திறன் போட்டி, கலைத்திறன் போட்டி, மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்புகள் இடம்பெற்றன. தமிழாலயத்தின் தூண்களாக விளங்கும் ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்புகளைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம் வாழ்த்தி வழங்கி வைத்தார்.

கலை நிகழ்வுகளோடு, சிறப்பு நிகழ்வாக முத்தகவை நிறைவு விழாச் சிறப்பு மலர் நூற்றுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் அணிவகுத்துக் குத்துவிளக்குகளால் ஒளியேற்றி வர, தமிழாலயத்தின் மூத்த ஆசிரியை “தமிழ் மாணி” திருமதி நந்தினிதேவி செல்வபாஸ்கரன் அவர்களும் அவரின் துணைவரும் அரங்கிற்கு எடுத்து வந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தகவை மலரைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் வெளியிட்டு வைக்க முதற் பிரதியைப் பெற்றோர்களில் ஒருவரான திரு. துரைராஜா சிவநேசன் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கலைப்பிரிவுப் பொறுப்பாளரால் வெளியீட்டுரை நிகழ்த்தப்பட்டது. செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஆர்வத்துடன் அரங்கிற்கு வந்து, சிறப்பு மலரைப் பெற்றுக்கொண்ட நிகழ்வு முதன்மை மிக்க வரலாற்றுப் பதிவாகும்.

சிறப்புரையை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்களும் வாழ்த்துரைகளைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. சேரன் யோகேந்திரன் அவர்களும் தமிழாலயத்தைத் தொடங்கிவைத்த முன்னாள் உலகத் தமிழர் இயக்கத்தின் தென்மாநிலச் செயற்பாட்டாளர் ஆசிரியர், தமிழ்மணிப்புலவர். திரு. ஆறுமுகம் விவேகானந்தன் அவர்களும், தமிழ் கல்விக் கழகத்தின் கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ மனோகரன் அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநிலப் பொறுப்பாளர் திரு. கனகையா சிறிகாந்தன் அவர்களும், தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுத் துணைப் பொறுப்பாளர். திரு. ராமேஸ் ஜெயக்குமார் அவர்களும் வழங்கிச் சிறப்பித்தனர். மாணவர்களின் சிறப்பான கலை வெளிப்பாடுகள் அரங்கைத் தொடர்ந்தும் உற்சாகம் ஊட்டியதோடு, பார்வையாளர்களின் சிந்தனையைத் தூண்டக்கூடியதாகவும் அமைந்தன.

நிறைவாகத் தமிழினம் வென்றெடுக்க வேண்டிய தமது இலட்சியமாம் தாயகக் கனவினை ஒன்றிணைந்து வென்று நிமிர்வோம் என்ற உறுதிப்பாட்டோடு முத்தகவை நிறைவு விழாச் சிறப்புடன் நிறைவுற்றது.

தொடர்புடைய செய்திகள்