இரான்: பல்கலைக் கழகத்தில் ஆடையை களைந்த இளம்பெண் – ஹிஜாபுக்கு எதிரான போராட்டமா?

இரான்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
  • எழுதியவர், ரோசா அசாத்
  • பதவி, பிபிசி பாரசீகம்

இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நவம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த காணொளி தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் பெண் தனது ஆடைகளை கழற்றி வீசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிபிசி பாரசீக டிஜிட்டல் குழு இந்த சம்பவம் நடந்த இடத்தை உறுதி செய்துள்ளது. டெஹ்ரானின் இஸ்லாமிய ஆசாத் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தின் பிளாக் 1 பகுதியில் இது நிகழ்ந்துள்ளது.

பிபிசியைப் பொருத்தவரை, இந்த சம்பவம் நவம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை நடந்தது. சமூக ஊடகங்களில் வெளியான சில புகைப்படங்களில் இளம்பெண் உள்ளாடை அணிந்தபடி அலட்சியமாக வளாகத்தில் நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

பிபிசி தமிழ்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வைரலான வீடியோ

இரான் மாணவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமூக வலைதளங்களில் இரான் மாணவி குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன

சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில், உள்ளாடை அணிந்தபடி பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்துள்ளார். பல்கலைக் கழகத்தின் ஆண் மற்றும் பெண் பாதுகாப்பு அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த உரையாடலின் ஆடியோ வீடியோவில் கேட்கவில்லை.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இந்த வீடியோ எங்கோ தொலைவில் உள்ள வகுப்பறை ஜன்னலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். மற்றொரு வீடியோவில், இந்த பெண் பல்கலைக் கழக வளாகத்தின் பிளாக் ஒன்றின் அருகே சாலையில் நடந்து செல்வதைக் காண முடிகிறது.

அந்தப் பெண் திடீரென தனது ஆடைகளை களைகிறார். சம்பவ இடத்தில் இருந்தவர்களின் எதிர்வினையும் இதை உறுதிப்படுத்துகிறது. சிறிது நேரத்தில் பல போலீஸ் அதிகாரிகளுடன் ஒரு கார் சம்பவ இடத்திற்கு வந்தது.

காரில் இருந்து இறங்கிய பல அதிகாரிகள் அந்தப் பெண்ணை காருக்குள் ஏற்றிச் செல்வதை வீடியோவை காண முடிகிறது.

சமூக ஊடகங்களில் எதிர்வினை

இரானுக்கு வெளியே பல ஊடக தளங்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகளில் இதனை, “அந்தப் பெண் தனது ஆடைகளை களைவதன் மூலம் தன் எதிர்ப்பை தெரிவிக்கிறார்” என்று விவரித்தன.

ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்திற்கும், பல்கலைக் கழக பாதுகாப்பு அதிகாரிகளின் நடத்தைக்கும் எதிரான எதிர்வினையாக அந்தப் பெண் இப்படி செய்ததாக விவரிக்கப்படுகிறது.

இதுதொடர்பான பல செய்திகள் ‘அமிர் கபீர் நியூஸ் லெட்டர்’ என்னும் டெலிகிராம் சேனலில் வெளியாகியுள்ளன.

‘அமிர் கபீர் நியூஸ்’ கூற்றின்படி, “ஹிஜாப் அணியாததால் அந்தப் பெண் துன்புறுத்தப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படையினரால் அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டன. அதனால் கோபமடைந்த அந்தப் பெண் தனது உடைகள் அனைத்தையும் கழற்றி தன் எதிர்ப்பை பதிவு செய்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

பிபிசி பாரசீகத்திற்கு பதிலளித்த `அமீர் கபீர் நியூஸ்’, தகவலறிந்த சிலரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அந்த செய்திகளை வெளியிட்டதாகக் கூறியது.

இரான் மாணவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

நேரில் பார்த்தவர்களின் கருத்து என்ன?

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு பேர் பிபிசி பாரசீகத்திடம் அது குறித்து விவரித்தனர்.

பிபிசி பாரசீகத்திடம் அவர்கள் கூறுகையில், “அந்தப் பெண் தனது கையில் மொபைல் போனுடன் பல வகுப்பறைகளுக்குள் நுழைந்து மாணவர்களை வீடியோ எடுத்து கொண்டிருந்தார்” என்றனர்.

அவர்கள் கூற்றுபடி, அனுமதியின்றி வகுப்பறைக்குள் நுழைந்ததால் கோபமடைந்த பேராசிரியர் ஒருவர், அவர் என்ன செய்கிறார் என்பதை கேட்க ஒரு மாணவியை அவருக்குப் பின்னே அனுப்பினார். அதன் பின்னர் அந்தப் பெண் சத்தம் போட ஆரம்பித்தார்.

பல்கலைக் கழக வளாகத்தின் சாலையில் அந்தப் பெண் தனது ஆடைகளைக் களைந்திருப்பதை கண்டதாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த சாட்சிகளின் கூற்றுப்படி, அந்தப் பெண்ணுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே எந்த சண்டையும் நடக்கவில்லை.

அதேசமயம் பிபிசியிடம் பேசிய இரு சாட்சிகளும் அந்தப் பெண் வகுப்பறைக்குள் திடீரென நுழைந்த பின்னர் தான் கவனித்துள்ளனர். அவர் வகுப்பறைக்குள் வருவதற்கு முன் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

அந்தப் பெண், வகுப்பறை இருந்த கட்டடத்தை விட்டு வெளியேறி ஆடைகளை களைவதற்கு முன்பு என்ன நடந்தது என்பது சாட்சிகளுக்கு தெரியாதா?

அந்தப் பெண் தன் ஆடைகளை களைந்த பிறகே இந்த இரண்டு சாட்சிகளும் அங்கு சென்றுள்ளனர்.

அவர்களின் கூற்றுப்படி, அந்தப் பெண் வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம், “உங்களை காப்பாற்ற வந்தேன்” என்று கூறியுள்ளார்.

இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர் என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்ட ஒரு சமூக ஊடகப் பயனர், எக்ஸ் பக்கத்தில், “நான் உன்னைக் காப்பாற்ற வந்தேன்” என்று இந்தப் பெண் கூறியதாகப் பதிவிட்டிருக்கிறார்.

பல்கலைக் கழகம் கூறுவது என்ன?

இஸ்லாமிய ஆசாத் பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அமீர் மஹ்ஜூப், ஒரு சமூக ஊடகப் பதிவில், அந்தப் பெண்ணை ஒரு பல்கலைக்கழக மாணவி என்று குறிப்பிட்டார். அவருக்கும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் இடையே எந்த வாக்குவாதமும் நடக்கவில்லை என்று அவர் கூறினார்.

“மனம் சார்ந்த பிரச்னை காரணமாக, அந்தப் பெண் தனது வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்களை வீடியோ எடுக்கத் தொடங்கினார், அதற்காக அவர் கண்டிக்கப்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.” என்பது அமீர் மஹ்ஜூப்பின் கூற்று.

“மாணவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை எச்சரித்ததைத் தொடர்ந்து, அவர் சாலையை நோக்கி ஓடிவந்து, இவ்வாறு செய்தார்” என்று அவர் கூறினார்.

இந்தப் ‘பெண்’ மாணவர்களை வீடியோ எடுத்த போது, அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதற்கு பதிலடியாக அவர் தனது ஆடைகளை கழற்றி வீசியதாகவும் ISNA உள்ளிட்ட இரானிய ஊடகங்கள் கூறியுள்ளன.

“மாணவி கடுமையான மன உளைச்சல் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்” என பல்கலைக் கழகத்தை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இரான் மாணவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மாணவியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை

இந்த மாணவி கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எதிர்வினை ஆற்றியுள்ளது.

“இஸ்லாமிய ஆசாத் பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் ஹிஜாப் அணியாததற்காக தவறாக நடத்தப்பட்டு, நவம்பர் 2-ஆம் தேதியன்று வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட மாணவியை நிபந்தனையின்றி இரானிய அதிகாரிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ட்வீட் செய்துள்ளது.

“பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சித்திரவதை செய்வதோ மோசமாக நடத்துவதோ கூடாது. அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு வழக்கறிஞரை அணுகுவதை உறுதி செய்ய வேண்டும். அவர் காவலில் இருக்கும் சமயத்தில் அவருக்கு எதிராக வன்முறையோ அல்லது பாலியல் தொந்தரவோ நடந்தால் அந்த குற்றச்சாட்டுகள் சுயாதீனமாகவும் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும்” என்று அம்னெஸ்டி இரான் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் இரானுக்கான சிறப்பு அறிக்கையாளராக ஆகஸ்ட் மாதம் தனது பணியைத் தொடங்கிய மை சடோ தனது எக்ஸ் பக்கத்தில், “நான் இந்த சம்பவத்தையும், அதிகாரிகளின் பதிலையும் உன்னிப்பாகக் கவனிப்பேன்.” என்று குறிப்பிட்டார்.

ஹிஜாபிற்கு எதிரான போராட்டமா?

இரான் மாணவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

பல்கலைக் கழக மாணவி என்ன செய்தார் என்பது பற்றி பல்வேறு கதைகள் மற்றும் கூற்றுகள் பரவி வருகின்றன. இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் பற்றி தெரியவில்லை என்றாலும், கிடைக்கக் கூடிய தகவல்களின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் பல பயனர்கள் இந்த பெண்ணைப் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர்.

பல பயனர்கள் பெண்ணின் இந்த செயலை ஹிஜாப்பை கட்டாயப்படுத்துவதற்கான எதிர்ப்பு மற்றும் பல்கலைக் கழக பாதுகாப்புப் படையினரின் கடுமையான அணுகுமுறைக்கு எதிரான போராட்டம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்தகைய கூற்றுகளை முன்வைப்பவர்களில் மரியம் கியானார்த்தி என்ற வழக்கறிஞரும் ஒருவர், “இந்த மாணவர்களின் கிளர்ச்சி, மாணவியர் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கடுமையான மற்றும் நியாயமற்ற அழுத்தத்தின் எதிர்ப்பு” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணுக்காக கட்டணம் வாங்காமல் வழக்கை நடத்த தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார்.

ஹிஜாப் அணிய வேண்டிய அழுத்தம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடத்தை காரணமாக மாணவி தனது ஆடைகளை களைந்ததாக நம்பும் சமூக ஊடகப் பயனர்கள் அவரின் செயலை “துணிச்சல்” என்று அழைக்கின்றனர்.

அந்தப் பெண் பீதி மற்றும் அழுத்தத்தால் மட்டுமே இதைச் செய்ததாகவும், இது வேண்டுமென்றே செய்யப்பட்ட போராட்டம் அல்ல என்றும் சிலர் கூறியுள்ளனர்.

இருப்பினும், இரானிய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் “பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்” (Women, Life, Freedom) இயக்கத்தின் எதிர்ப்பாளர்கள் பலரும், அந்த இயக்கத்தினர் ஆடைகள் இன்றி போராடவும் தயாராக உள்ளனர் என்ற அவர்களின் கூற்றை இந்தப் பெண்ணின் செயல் உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.

இந்த பெண்ணின் அடையாளத்தைக் கண்டறிய முயற்சிப்பதாக சமூக ஊடகங்களில் பல பயனர்கள் கூறுகிறார்கள். இதனால் அவர்கள் அவரைப் பற்றிய தகவல்களை வழங்கவும் சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவளிக்கவும் முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.