உத்தரகாண்ட் பஸ் விபத்து; 36 பயணிகள் உயிரிழப்பு, 24 பேர் காயம்!

by admin

உத்தரகாண்டின் அல்மோரா மாவட்டத்தில் திங்கட்கிழமை (4) பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று 200 மீட்டர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறித்த பஸ்ஸில் பயணித்த 60 பயணிகளில் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 இலட்சம் இந்திய ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவும் வழங்குமாறு உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

காயமடைந்தவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்களில் மூவர் விமானம் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மற்றைய நபர் ஹல்த்வானியில் உள்ள சுசீலா திவாரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அல்மோரா மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி வினீத் பால் உறுதிபடுத்தியுள்ளார்.

விபத்து நடந்தபோது 43 இருக்கைகள் கொண்ட பஸ்ஸில் சுமார் 60 பேர் இருந்ததாகவும், வாகனத்தில் அதிக சுமை ஏற்றியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

கர்வால் பகுதியில் உள்ள பவுரியிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குமாவோனில் உள்ள ராம் நகருக்குச் சென்று குறித்த பஸ் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர், பொலிஸார் மற்றும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்கத்கது.

தொடர்புடைய செய்திகள்