ரூ.23 லட்சம் சம்பளம் கொடுத்து புலம்பெயர் தொழிலாளர்களை ஈர்க்கும் அமெரிக்க நகரம்
- எழுதியவர், கில்லர்மோ மோரேனோ
- பதவி, பிபிசி முண்டோ
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘குடியேற்றம்’ தொடர்பான பிரச்னைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் மெக்ஸிகோ எல்லையைக் கடக்கும் நபர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசி வருகின்றனர்.
ஆனால், அமெரிக்காவின் ஒரு மாகாணத்தின் அரசு, முடிந்தவரை புலம்பெயர்ந்தோரை ஈர்க்க முயற்சிக்கிறது.
அலாஸ்கா வளைகுடாவில் காப்பர் நதி டெல்டாவிற்கு அருகில் கோர்டோவா (Cordova) என்ற ஒரு சிறிய மீன்பிடி நகரம் உள்ளது.
இங்கு உள்ள மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்கள் மதிய உணவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களது உணவில் அமெரிக்க உணவுகளைக் காட்டிலும், டாகோஸ் மற்றும் டார்ட்டிலாக்கள் போன்ற மெக்சிகோவின் உணவுகளைப் பார்க்க முடிந்தது.
ஏனெனில், அவர்களில் பெரும்பாலானோர் மெக்ஸிகோவைச் சேர்ந்தவர்கள்.
22 லட்ச ரூபாய் சம்பளம்
அலாஸ்காவில் உள்ள மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காகப் புலம்பெயர்ந்தோர் பலர் வெகு தொலைவில் இருந்து வருகிறார்கள். இங்கே அவர்கள் சொந்த நாட்டில் இருப்பதைக் காட்டிலும் அதிக பணம் சம்பாதிக்க முடிகிறது.
இங்கு 4 மாதங்கள் பணியாற்றி 27,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 23 லட்சம் ரூபாய்) சம்பாதித்துள்ளதாக மெக்ஸிகோவைச் சேர்ந்த எட்கர் வேகா கார்சியா கூறுகிறார்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் (OECD) கூற்றுப்படி, இந்த வருமானம் மெக்ஸிகோவில் ஆண்டுக்குச் சராசரி குடும்ப வருமானமான 16,269 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 13 லட்சம் ரூபாய்) விட அதிகமாகும்.
ஆண்டின் பெரும்பாலான மாதங்களில், கோர்டோவாவில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே இருக்கும். கனமழை அல்லது பனிப்பொழிவு மாறி மாறி வரும். மேலும், இரண்டு மாதத்திற்கு சூரியனே தெரியாத நிலையும் இருக்கும். இது ‘போலார் நைட்’ என்று அழைக்கப்படுகிறது.
இங்கு குளிரில் இருந்து விடுபட்டு, கோடைகாலம் துவங்கும் பட்சத்தில், உள்ளூர் மக்கள், காப்பர் ஆற்றிலும் அதன் பல்லுயிர் பெருக்கப் பகுதிகளிலும் சால்மன் மீன் மற்றும் பிற மீன்களை பிடிக்கின்றனர். இந்தச் சமயத்தில் மக்கள் மத்தியில் அதிக போட்டி நிலவும். இங்கு பாதிக்கும் மேற்பட்ட வேலைகள் மீன்பிடித் தொழிலுடன் தொடர்புடையவை.
மீன்களைப் பதப்படுத்தவும், பேக்கேஜ் செய்யவும், விற்கவும் கோர்டோவாவில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதிக தொழிலாளர்கள் தேவைப்படுவதால், வெளியில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்கின்றனர்.
ஊழியர்களுக்குப் பல வசதிகள்
அலாஸ்கா மாகாணத் தொழில்துறையின் கூற்றுப்படி, அலாஸ்காவின் கடல் உணவுத் தொழிலில் உள்ள தொழிலாளர்களில் 80% பேர் வெளிநாட்டினர். அமெரிக்காவில் உள்ள பிற மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் வருகிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் யுக்ரேன், பெரு, துருக்கி, பிலிப்பைன்ஸ் மற்றும் மெக்ஸிகோவைச் சேர்ந்தவர்கள்.
இங்குள்ள சம்பளம் மற்றும் வேலை கலாசாரத்தால் அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர். சொந்த நாடுகளைக் காட்டிலும் இங்கு வருமானம் அதிகம்.
இங்கு ஒரு மீனவர் ஒரு மணிநேரத்திற்கு $18.06 (இந்திய மதிப்பில் ரூ.1,500) வரை சம்பாதிக்கிறார். கூடுதல் நேரம் வேலை செய்தால், சுமார் $27 (இந்திய மதிப்பில் ரூ.2,270) வரை கிடைக்கும். மீன்பிடித் தொழில் உச்சத்தில் இருக்கும் பருவ காலங்களில், கூடுதல் நேரம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியத்தில் 50% உயர்த்த வேண்டும் என்பது அலாஸ்காவின் கட்டாயச் சட்டம்.
அலாஸ்காவில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இலவச தங்குமிடம், மூன்று வேளை உணவு ஆகியவற்றை வழங்குகின்றன. எனவே, கோர்டோவா டவுனில் தங்கி வேலைபார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சம்பாத்தியம் அனைத்தையும் சேமித்து வைக்கின்றனர்.
கோர்டோவாவில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் இல்லை. எனவே, மீன்பிடிக்க முடியாத சூழல் நிலவும் போது, நகரத்தின் ஒரே பாரில் மீனவர்கள் மது அருந்தி நேரத்தைக் கழிப்பார்கள்.
மேலும், விமானம் மற்றும் படகு மூலம் மட்டுமே அணுகக்கூடிய கோர்டோவா போன்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு தொழிலாளர்களுக்கு பயணக் கட்டணங்களையும் நிறுவனங்கள் வழங்குகின்றன.
18 மணிநேர வேலை
கோர்டோவாவில் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை ஆடம்பரமாக இல்லை.
ஷிப்பிங் கண்டெய்னரில் (shipping container) உருவாக்கப்பட்ட ஒரு அறையில் நான்கு பேர் வசிக்கிறார்கள். அங்கு அவர்கள் தங்கள் கோடைக்கால உபகரணங்களை ஒரு சிறிய லாக்கரில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இங்கு வேலை செய்வது எளிதானது அல்ல. அவர்களது வேலை நேரம் பெரும்பாலும் காலையில் தொடங்கி 18 மணிநேரம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும். ஏனெனில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 1,000 கிலோவுக்கு அதிகமான மீன்களைப் பிடிக்க வேண்டும்.
இரட்டிப்பு மகிழ்ச்சி
ஒரு தொழிற்சாலையில் கன்வேயர் பெல்ட்டில் பணிபுரியும் எட்கர், ஒவ்வொரு மீனிலிருந்தும் முள், ரத்தம், பிற பாகங்களை அகற்ற இரண்டு கத்திகளைத் திறமையாக பயன்படுத்துகிறார்.
அவர் இந்தச் செயல்பாட்டை நேர்த்தியாக, வேகமாகச் செய்கிறார். சுத்தம் செய்யப்பட்ட மீன்கள் கன்வேயர் பெல்ட்டின் மறுமுனையில் வந்தவுடன், மற்ற தொழிலாளர்கள், அவற்றை எடை போடுவதற்கும் பேக்கேஜ் செய்வதற்கும் தயாராக இருக்கிறார்கள்.
அங்கு பணிபுரியும் அனைத்து தொழிலாளர்கள் மீதும் மீன் வாசம் வீசுகிறது. ஆனால், எட்கர் அங்கு மகிழ்ச்சியுடன் வேலை செய்கிறார்.
எட்கர் மெக்ஸிகோ மாநிலமான ‘பாஹா கலிபோர்னியா’வின் (Baja California) எல்லை நகரம் ‘மெக்சிகாலி’யை (Mexicali) சேர்ந்தவர்.
அவர் மீன்பிடி காலத்தில் அலாஸ்காவில் சம்பாதிக்கும் வருமானத்தை வைத்து ஆண்டின் மீதமிருக்கும் மாதங்களில், தனது நான்கு குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசதியாக வாழ முடியும்.
“நான் இங்கு சம்பாதிக்கும் பணம் மெக்ஸிகாலியில் இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும்,” என்று எட்கர் கூறுகிறார்.
1.3 லட்சம் விசாக்கள்
அலாஸ்காவில் மீன்பிடித்தல் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள் ஒரு பெரிய வணிகமாகப் பார்க்கப்படுகிறது. அலாஸ்கா ஃபேர்பேங்க்ஸ் பல்கலைக்கழகத்தின் (University of Alaska-Fairbanks) கூற்றுப்படி, அம்மாகாணத்தின் மீன்பிடித் தொழிற்சாலைகள் மற்றும் கடல் உணவுத் தொழில் ஆண்டுதோறும் 2,268 டன் மீன்களை உற்பத்தி செய்கிறது.
அலாஸ்காவின் தொழிற்துறையில் பணிபுரிய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படுவதால், 2023-ஆம் ஆண்டில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தற்காலிக விசா வழங்கும் செயல்பாட்டிற்கு அதிகளவில் அமெரிக்க அரசாங்கம் ஒப்புதல் அளிக்கத் துவங்கியது.
கடந்த 2022-ஆம் ஆண்டில், விசாக்களின் எண்ணிக்கை 66,000-ஆக மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், 2023-2024-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 1.3 லட்சமாக அதிகரித்துள்ளது.
மெக்சிகோவில் குடும்பங்களைப் பிரிந்து…
இந்த ஆண்டு எட்கர் வேலை செய்து வரும் கோர்டோவாவில் உள்ள சிறிய மீன் பதப்படுத்தும் ஆலையான ‘North 60 Seafoods’- ஐ ரிட்ச் வீலர் என்பவர் நடத்தி வருகிறார். சில அமெரிக்கத் தொழிலாளர்கள் போதைப்பொருள் உட்கொண்டு சண்டையிடுவதால் அவர்களுடன் பணியிடத்தில் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறுகிறார் அவர்.
மெக்ஸிகோவில் இருந்து வந்த தொழிலாளர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும், அது தனது தொழிலை வெகுவாக மேம்படுத்தியதாகவும் ரிட்ச் வீலர் கூறுகிறார்.
“மெக்ஸிகோ தொழிலாளர்கள் இல்லாமல் தொழிலை வெற்றிகரமாக நடத்த முடியுமா என்பது சந்தேகம் தான். அவர்கள் எப்போதும் சரியான நேரத்தில் வேலைக்கு வருவார்கள்,” என்கிறார்.
பல புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தங்கள் குடும்பங்களை நீண்ட காலம் பிரிந்து, அலாஸ்காவில் இவ்வளவு தொலைவில் வேலை செய்வது ஒரு பெரிய சவாலாக உள்ளது.
எட்கரின் தாய் ரோசா வேகா, 18 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் அலாஸ்காவிற்குப் பணிக்கு வந்து செல்கிறார். 67 வயதான வேகா மெக்ஸிகோவில் உள்ள தனது வயதான தாயைப் பற்றி கவலைப்படுகிறார்.
அம்மாவுக்கு வயதாகிவிட்டதாகவும், அவர் தன்னை அலாஸ்கா வர அனுமதிக்க மறுப்பதாகவும் ரோசா கூறினார்.
அரசியல் சூழல்
அமெரிக்க வேலைவாய்ப்புகளை வெளியாட்கள் பறிப்பதாக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். எல்லையைப் பாதுகாப்பேன், குடியேற்றக் கொள்கைகளில் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்வேன் என்று கமலா ஹாரிஸ் கூறுகிறார்.
கோர்டோவா நகரத்தின் சாதாரண மக்கள்தொகை 3,000-க்கும் குறைவாகவே உள்ளது. ஆனால் கோடை மாதங்கள் வரும்போது இந்த எண்ணிக்கை மும்மடங்காக உயர்கிறது.
ஆனால், நகரத்தின் மேயர் டேவிட் எலிசன், புலம்பெயர்ந்தோர் வேலைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதைக் காட்டிலும் உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய ஊக்கமாக பார்க்கப்படுகிறார்கள் என்று கூறுகிறார்.
அவர் பல ஆண்டுகளாக மீன்களைப் பதப்படுத்தும் ஆலையில் பணிபுரிந்தார், மேலும் “உங்களுக்கு 250 தொழிலாளர்கள் தேவை என்று ஒரு அலாஸ்கா செய்தித்தாளில் விளம்பரம் செய்தால், உங்களுக்கு 20 விண்ணப்பதாரர்களுக்கு மேல் வரமாட்டார்கள்,” என்று தன் அனுபவத்தை கூறுகிறார். கோர்டோவாவின் உள்ளூர்வாசிகள் பதப்படுத்தும் ஆலைகளில் வேலை செய்வதை விட மீன் பிடிக்கவே விரும்புகிறார்கள்.
புலம்பெயர்ந்தோரின் பணி மிகவும் முக்கியம், அவர்கள் இல்லாமல் உள்ளூர் மக்களால் பிடிக்கப்பட்ட மீன்கள் விரைவாக அழுகி, வீணாகிவிடும் என்று அலிசன் கூறுகிறார். அவர்களது உதவி இல்லாமல், மீன் பதப்படுத்தப்படாது. மேலும் மீன் பிடிக்கத் தொழிலாளர்கள் இல்லாமல் மோசமான சூழல் உருவாகும், என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.