3,500 முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மகாராஷ்டிரா பெண்
இவர் யோஜனா கரத்.
முதியவர்களை கவனித்துக் கொள்வதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக, சுமார் 3,500 முதியவர்களுக்கு அவர் ஆதரவளித்துள்ளார். அவர்களைத் தத்தெடுத்து கவனித்துவருகிறார். யோஜனா தன் பணியை 1993-இல் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் போய்செரில் துவங்கினார். பின்னர், அவர் பான்வெலுக்கு இடம்பெயர்ந்தார். இதன்பின், தானே மாவட்டத்தின் கால்ஹெரில் தற்போதுள்ள முதியோர் இல்லத்தைத் துவங்கினார்.
ஆரம்பத்தில் யோஜனாவின் குடும்பத்தினர் இதனை எதிர்த்தனர். இதனால் தன் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தாரிடமிருந்து 2012-ஆம் ஆண்டு பிரிய நேரிட்டது. இப்போது, முதியோர் இல்லத்தை நடத்த அவருடைய இரு மகள்களும் உதவிவருகின்றனர்.
யோஜனா தற்போது வரை சுமார் 2,000 முதியவர்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்துள்ளார். யோஜனாவின் இல்லத்தில் இருப்பவர்கள் இததான் தங்களின் கடைசி வீடு என்றும் இங்கிருந்து தாங்கள் சொர்க்கத்திற்கு செல்வோம் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த முதியோர் இல்லத்திற்காக மாதம் 15-20 லட்சம் ரூபாய் செலவாகிறது. கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி மூலம் பெரும்பாலான செலவுகளை கவனிக்கின்றனர். எனினும், இந்த இல்லத்திற்கான தேவை அதிகரிப்பதால் செலவுகளைச் சமாளிக்க யோஜனா போராடிவருகிறார்.
தங்களுடைய வயதான பெற்றோரை எப்படி கவனித்துக்கொள்வது என்பது குறித்து இளையோருக்கு அவர் பயிற்சி வகுப்புகளையும் எடுக்கிறார். வயதான பெற்றோரை குழந்தைகள் போன்று கவனிக்க வேண்டும் என யோஜனா கூறுகிறார்.
அரசு புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 2050-ஆம் ஆண்டுக்குள் மொத்த மக்கள்தொகையில் 20.8% பேர் முதியவர்களாக இருப்பார்கள் என்கிறது. இதன் அடிப்படையில், அவர்களுக்குப் பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம் குறித்த தெளிவான கொள்கையை வகுக்க வேண்டியது அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. இதில், யோஜனா போன்றோரின் முதியோர் இல்லங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.