by adminDev2

on Sunday, November 03, 2024

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடுகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், அது எதிர்காலத்தில் நடைபெறும் பரீட்சைகளையும் பாதிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கல்வி அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்படும் தாமதத்தால் பாடசாலைக் கல்வியும் பாதிக்கப்படும் என பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தரவிடம் ‘அத தெரண’ வினவியது.

தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை ஆரம்பிக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பில் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்