பரபரப்பான கட்டத்தில் மும்பை டெஸ்ட் – இந்திய அணி வெற்றி பெறுமா? ஆட்டம் எப்படி திரும்பும்?

India vs New Zealand Test match

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

மும்பை வான்ஹடே மைதானத்தில் நடந்து வரும் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்கிறது.

இன்னும் 3 நாட்கள் ஆட்டம் இருக்கும் நிலையில் புனே டெஸ்ட் போட்டியைப் போன்று ஆட்டம் 3 நாட்களில் முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் பெரிதாக முன்னிலை வகிக்காத நிலையில், நியூசிலாந்து அணியும் 2வது இன்னிங்ஸில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இதனால் குறைந்த வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி 2வது இன்னிங்ஸில் களமிறங்கினாலும் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் சமாளிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ரிஷப் பந்த், சுப்மான் கில் ஆகியோரின் அரை சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 28 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய நியூசிலாந்து அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து, 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நாளான இன்று ஒரே நாளில் மட்டும் 15 விக்கெட்டுகள் இரு அணிகளிலும் சேர்த்து வீழ்த்தப்பட்டுள்ளன. இந்திய அணியின் அனுபவ பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சரியக் காரணமாயினர். குறிப்பாக அஸ்வின் பல அற்புதமான கேரம் பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆட்டம் எப்படி நகரும்

நியூசிலாந்து அணியை 200 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்துவிட்டால், இந்திய அணிக்கு 160 முதல் 170 ரன்களுக்குள்தான் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும். இந்த இலக்கை இந்திய அணி பேட்டிங்கின் மூலம் அணுகினால்தான் வெற்றியை எளிதாக எட்ட முடியும்.

விக்கெட்டை இழந்துவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் அதீத கவனத்துடன் ஆடும்பட்சத்தில் இந்திய பேட்டர்கள் திணறும் டிஃபெண்ட்ஸ் போக்கால் விக்கெட்டுகளை இழக்க நேரிடும். இந்திய பேட்டர்கள் டிஃபெண்ட்ஸ் வகை பேட்டிங்கில் திணறுகிறார்கள் என பயிற்சியாளர் கம்பீரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால், இதுபோன்ற நேரத்தில் தற்காப்பு பேட்டிங் மிகுந்த அவசியம். டி20 போட்டிகளில் அதிகம் பங்கேற்றதால் தற்காப்பு பேட்டிங்கை இந்திய பேட்டர்கள் கையாளுவதில் திணறுகிறார்கள். இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தலாம்.

ஆடுகளமும் கடைசி 3 நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், ஈஷ் சோதி, அஜாஸ் படேல், பிலிப்ஸ் ஆகியோரின் பந்துவீச்சு நன்கு டர்ன் ஆகி, பவுன்ஸ் ஆகும். இதனால் இந்திய பேட்டர்கள் விக்கெட்டை இழக்காமல் ரன்களை சேர்த்தால் வெற்றி பெறலாம். டெஸ்ட் தொடரையும் ஒயிட்வாஷ் முறையில் இழக்காமல் 2-1 என்ற கணக்கில் கௌரவமாக இந்திய அணி முடிக்கும்.

ஒருவேளை இந்திய அணி நாளை விரைவாக வெற்றி இலக்கை அடைந்துவிட்டால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டணையில் 12 புள்ளிகளைப் பெறும், வெற்றி சதவீதமும் தற்போதுள்ள 62 சதவீதத்தில் இருந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் பின் ஆஸ்திரேலியா சென்று அந்நாட்டுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட சவாலான டெஸ்ட் தொடரை இந்திய அணி எதிர்கொள்ளும்.

ரிஷப் பந்த் – கில் அதிரடி

India vs New Zealand Test match

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி நேற்று மாலை ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் இருக்கும்போது 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பதற்றமடைந்தது. ஆனால், ரிஷப் பந்த், சுப்மான் கில் கடைசி நேரத்தில் விக்கெட்டை நிலைப்படுத்தி, இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ரிஷப் பந்த், கில் இருவரும் டெஸ்ட் போட்டியை போன்று பேட் செய்யாமல் டி20 போட்டியை போல நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அதிரடியாக ஆட வேண்டும் என்ற மனநிலையோடு களமிறங்கிய ரிஷப் பந்த் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். சுப்மான் கில் 66 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இந்திய அணி 21 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. அடுத்த 10 ஓவர்களில் தேநீர் இடைவேளையின் போது 163 ரன்களை எட்டி 6 ரன்ரேட்டில் சென்றது. இதனால் இந்திய அணி பெரிய ஸ்கோரை நோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், ரிஷப் பந்த் 53 ரன்கள் சேர்த்திருந்தபோது கிடைத்த கேட்ச் வாய்ப்பை ஃபிலிப்ஸ் தவறவிட்டார். இருப்பினும் ஈஷ் சோதி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ரிஷப் பந்த் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்திருந்தது. 46 ஓவர்களில் 200 ரன்களை இந்திய அணி எட்டியது.

விக்கெட் சரிவு

India vs New Zealand Test match

பட மூலாதாரம், Getty Images

ஆனால், அடுத்த 63 ரன்களுக்கு மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இந்திய பேட்டர்கள் விரைவாக இழந்தனர். ரிஷப் பந்த் ஆட்டமிழந்தபின் இந்திய அணி கவனமாக ஆட்டத்தை நகர்த்த வேண்டும் என்று எண்ணி இருந்தது. இதனால் அடுத்த 10 ஓவர்களாக ஒரு பவுண்டரிகூட அடிக்காமல் ஆட்டம் நகர்ந்தது.

ஆனால், ரவீந்திர ஜடேஜா, சர்ஃபிராஸ் கான் விக்கெட்டுகளை விரைவாக இந்திய அணி இழந்தது. சொந்த மண்ணில் களமிறங்கிய சர்ஃபிராஸ் கான் டக்-அவுட்டில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் பிளென்டலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஃபிலிப்ஸ் பந்துவீச்சில் ஜடேஜா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

சதத்தை தவறவிட்ட கில்

சதத்தை நோக்கி நகர்ந்த சுப்மான் கில் 90 ரன்கள் சேர்த்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் டேரல் மிட்ஷெலிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன்பின் வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனித்துப் போராடிய நிலையில் அவருக்குக் கடைசி வரிசையில் எந்த பேட்டரும் ஒத்துழைக்கவில்லை. அஸ்வின்(6), ஆகாஷ் தீப்(0) விரைவாக விக்கெட்டை இழந்தனர். சுந்தர் 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 59.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 28 ரன்கள் முன்னிலை பெற்றது. அஜாஸ் படேல் இந்த டெஸ்ட் தொடரில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நியூசிலாந்து திணறல்

India vs New Zealand Test match

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்து அணி, 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஆகாஷ் தீப் வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் லாதம் க்ளீன் போல்டாகி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு கான்வே, யங் ஜோடி சேர்ந்து ஆட்டத்தைப் பொறுமையாக நகர்த்தினர். ஆனால், கான்வே 22 ரன்கள் சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த இன்னிங்ஸை போலவே ரவீந்திரா இந்த முறையும் நிலைக்கவில்லை.

ரவீந்திரா களமிறங்கிய சிறிது நேரத்தில் 4 ரன்னில் ரிஷப் பந்த் ஸ்டெம்பிங் செய்து, அஸ்வின் பந்துவீச்சில் அவரது விக்கெட்டை எடுத்தார். 4வது விக்கெட்டுக்கு டேரல் மிட்ஷெல், யங் கூட்டணி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

திருப்பம் தந்த ஜடேஜா

இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் சிரமப்பட்ட நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் திருப்பம் நிகழ்ந்தது. டேரல் மிட்ஷெல் 21 ரன்கள் சேர்த்திருந்தபோது, மிட்-ஆப் திசையில் நின்றிருந்த அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதன்பின் நியூசிலாந்து விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. மாலை தேநீர் இடைவேளையின்போது நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்திருந்தது.

ஆனால் நிதானமாக பேட் செய்த வில் யங் 95 பந்துகளில் அரைசதம் அடித்தார். 94 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து அணி, அடுத்த 77 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கடைசி 4 விக்கெட்டுகளை மட்டும் 40 ரன்களுக்குள் இழந்தது. நிதானமாக பேட் செய்த வில் யங் 51 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 43.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து, 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.