அமெரிக்க அதிபர் தேர்தலில் சட்டவிரோத குடியேறிகளால் வாக்களிக்க முடியுமா? பிபிசி ஆய்வு

அமெரிக்க அதிபர் தேர்தல், கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஜேக் ஹார்டன்
  • பதவி, பிபிசி வெரிஃபை

அமெரிக்க அதிபர் தேர்தலில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வாக்களிக்க வைக்க ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சி பிரமுகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

“எங்கள் தேர்தல்கள் மோசமான நடவடிக்கைகளை கொண்டுள்ளன. மேலும் சட்டவிரோத குடியேறிகள் பலர் தேர்தல் நடைமுறைகளில் தலையிடுகின்றனர். அவர்களை வாக்களிக்க வைக்க முயற்சி நடக்கிறது” கமலா ஹாரிஸ் உடனான அதிபர் விவாதத்தின் போது டிரம்ப் கூறினார்.

பிபிசி வெரிஃபை, இந்த பிரச்னை தொடர்பாக, செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் குடியரசுக் கட்சியினரால் வெளியிடப்பட்ட 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களை கண்டறிந்தது. அவை கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரப் பதிவுகள் (paid-for ads) ஆகும்.

அமெரிக்க குடிமக்கள் அல்லாத ஒருவர் அந்நாட்டு தேர்தலில் வாக்களிப்பது சட்டவிரோதமானது, ஆனால் உண்மையில் இவ்வாறு நடப்பது மிகவும் அரிதானது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தல், கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சட்டவிரோத குடியேறிகள் வாக்களிப்பதை தடுக்க சட்டங்கள் உள்ளனவா?

1996 ஆம் ஆண்டின் `சட்டவிரோத குடியேற்ற சீர்திருத்தம் மற்றும் குடியேற்றப் பொறுப்புச் சட்டம்’, சட்டவிரோதமாக குடியேறியவர் உட்பட அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதைத் தடை செய்கிறது.

அதையும் மீறி தேர்தலில் வாக்களித்தால், ஒரு வருடம் சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் நாடு கடத்தல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்திலும் ஒரு பொதுவான படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு ஆவண ஆதாரங்கள் தேவையில்லை.

பிரென்னன் நீதிக்கான மையத்தின் நிபுணரான ஜஸ்லீன் சிங் கூறுகையில், “அமெரிக்காவில் வாக்களிப்பதற்கு முன்னதாக, அமெரிக்க குடிமகன்/குடிமகள் என்பதை உறுதி செய்யும் ஆப்ஷனில் டிக் செய்வதே முதல் படி. இது சட்டவிரோத குடியேறிகளுக்கு மிகப்பெரியத் தடையாகும். ஏனெனில் பொய்யாக அமெரிக்கர் என பதிவு செய்தால் மிகவும் ஆபத்தான தண்டனைகளுக்கு வழிவகுக்கும்” என்கிறார்.

பல மாகாணங்களில், குடியேற்றம் மற்றும் குடியுரிமைச் சேவைகள், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அஞ்சல் தரவுகளுடன் பல அதிகார வரம்புகளில் வாக்காளர் பட்டியல்கள் சரிப்பார்க்கப்படுகின்றன. வாக்களிக்க பதிவு செய்தவர்கள் பட்டியலில், இறந்தவர்கள், குடிமக்கள் அல்லாதவர்கள் அல்லது அமெரிக்காவுக்கு வெளியே வசிக்கும் நபர்கள் இல்லை என்பதை உறுதிசெய்யும் நடவடிக்கை இது.

சான் பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழகத்தின் வாக்களிக்கும் உரிமைகள் நிபுணரான பேராசிரியர் ரொனால்ட் ஹெய்டுக் கூறுகையில், “வாக்குச் சாவடியில் தகுதியான வாக்காளர்களின் பட்டியல் வைக்கப்பட்டிருக்கும். அமெரிக்க குடிமகன்/மகள் அல்லாத ஒருவர் வாக்களிக்க வந்தால், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் அல்லது தற்காலிகமாக வாக்களிக்கச் சொல்லப்படுவார்கள். அவர்கள் குடியுரிமைக்கான சான்றை வழங்கினால் மட்டுமே அந்த வாக்கு செல்லுபடியாகும்” என்று விளக்கினார்.

மாகாண தேர்தல்களிலும் குடிமக்கள் அல்லாதவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

இருப்பினும், கலிபோர்னியா, மேரிலாந்து, வெர்மான்ட் மற்றும் வாஷிங்டன் டிசியில் உள்ள சில நகராட்சிகள் போன்ற சில உள்ளூர் தேர்தல்களில் குடியுரிமை பெறாத குடியேறிகளும் கூட வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

சட்டவிரோதமாக குடியேறிகள் வாக்களிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா?

கன்சர்வேடிவ் மற்றும் இடதுசாரி அமைப்புகளின் பல ஆய்வுகள், அமெரிக்க பெடரல் தேர்தல்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வாக்களிக்கும் நிகழ்வுகள் நடப்பது மிகவும் அரிது என்று கூறுகின்றன.

அதில் ஒரு ஆய்வு பிரென்னன் நீதிக்கான மையத்தால் நடத்தப்பட்டது. அந்த அமைப்பு 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது 12 மாகாணங்களில் பணியாற்றிய 44 தேர்தல் அதிகாரிகளை பேட்டி கண்டது.

இந்த மாகாணங்களில் எண்ணப்பட்ட 23.5 மில்லியன் வாக்குகளில், குடிமக்கள் அல்லாதவர்கள் வாக்களித்ததாகச் சந்தேகிக்கப்படும் 30 சம்பவங்கள் விசாரணைக்கு வந்ததாக அது கண்டறிந்துள்ளது.

இது மொத்த வாக்குகளில் 0.0001% ஆகும்.

ஹெரிடேஜ் அறக்கட்டளை, 1999 மற்றும் 2023 க்கு இடையில் தேர்தல் மோசடி வழக்குகளை சேகரித்த தரவுத்தளத்தை பகுப்பாய்வு செய்தது. அதில் குடிமக்கள் அல்லாதவர்கள் வாக்களித்ததாக 77 நிகழ்வுகளைக் கண்டறிந்தது.

“பல தரவுகளின்படி, அமெரிக்க தேர்தலில் வாக்களித்த குடிமக்கள் அல்லாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு” என்று கேடோ இன்ஸ்டிடியூட் என்னும் ஆராய்ச்சிக் குழுவின் மூத்த ஊழியர் வால்டர் ஓல்சன் கூறுகிறார். அவர் வாக்காளர் மோசடி குறித்து பல செய்தி அறிக்கைகளை எழுதியுள்ளார்.

“அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் வாக்களிக்கவே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த நிகழ்வு மிகவும் அரிதாக நடக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை ஒரு தேர்தலின் முடிவை பாதிக்கும் அளவிற்கு இல்லை.” என்றார் அவர்.

குடியரசுக் கட்சியினர் சுட்டிக்காட்டும் ஆதாரங்கள்

அமெரிக்கர்கள் வாக்களிப்பதற்காக பதிவு செய்யும் போது தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்ற குடியரசுக் கட்சியின் முன்மொழிவான “பாதுகாப்பு அமெரிக்க வாக்காளர் தகுதி (சேவ்) சட்டம்’’, பிரதிநிதிகள் சபையில் நிராகரிக்கப்பட்டது.

குடியரசுக் கட்சியின் சட்ட வல்லுநர்கள் குடியுரிமை தேவைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

“வாக்காளர் பட்டியலை தணிக்கை செய்து அதில் ஆயிரக்கணக்கான குடிமக்கள் அல்லாதவர்களைக் கண்டறிந்த பல மாகாணங்கள் உள்ளன” என்று சபையின் முன்னணி குடியரசுக் கட்சி பிரமுகர் மைக் ஜான்சன் சிஎன்என் ஊடகத்திடம் கூறினார்.

அவர் ஓஹியோ, பென்சில்வேனியா மற்றும் ஜார்ஜியாவை முன்னிலைப்படுத்தி பேசினார். இந்த மூன்று மாகாணங்களில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

ஓஹியோவில், குடியரசுக் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட மதிப்பாய்வில், பதிவுசெய்யப்பட்ட எட்டு மில்லியன் வாக்காளர்களில், 597 பேர் குடிமக்கள் அல்லாதவர்களாக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பென்சில்வேனியாவில், மாகாண ஓட்டுநர் உரிம மையங்களில் எலக்ட்ரானிக் தொடுதிரைகளில் ஏற்பட்ட கோளாறால், குடிமக்கள் அல்லாதவர்கள் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட உரிமங்களைப் பெறும்போது வாக்களிக்க பதிவு செய்வதற்கான விருப்பத்தை தவறாகக் காட்டியது.

2006க்கும் 2017க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தக் கோளாறு இருந்தது, அதன் பின்னர் அது சரி செய்யப்பட்டது.

2017 ஆம் ஆண்டில், பென்சில்வேனியா மாகாணத் தேர்தல் அதிகாரிகள், குடியுரிமை பெறாத குடியேறிகள் 2000 ஆம் ஆண்டுக்கு முந்தைய தேர்தல்களில் மொத்தமாக பதிவான 93 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளில் 544 வாக்குகளை சட்டவிரோதமாக செலுத்தியிருக்கலாம் என்று கூறினர்.

ஜார்ஜியாவில், 2022 ஆம் ஆண்டில் வாக்காளர் பட்டியல்களை மதிப்பாய்வு செய்ததில் 1,634 பேர் “சட்டவிரோதமாக வாக்களிக்க பதிவு செய்ய முயற்சித்துள்ளனர்” ஆனால் அதனை உறுதி செய்ய முடியவில்லை. வாக்காளர் மோசடி மற்றும் சட்டவிரோத குடியேறிகள் வாக்களிப்பது மிகவும் அரிதானது. இந்த கட்டுக்கதைகள் எல்லாம் தேர்தல் நடவடிக்கைகள் மீது சந்தேகத்தை விதைத்து, இறுதியில் தேர்தல் முடிவின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைக்கும் செயல்பாடு”” என்று ஜஸ்லீன் சிங் வாதிடுகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, குடியரசுக் கட்சியின் விளம்பரம்

குடியரசுக் கட்சியின் சர்ச்சை விளம்பரங்கள்

பிபிசி வெரிஃபை, இந்த பிரச்னை தொடர்பாக, செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் குடியரசுக் கட்சியினரால் வெளியிடப்பட்ட 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களை கண்டறிந்தது. அவை கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரப் பதிவுகள் (paid-for ads).

ஒரு விளம்பரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்டிருந்தது.

“சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா?” என்ற கேள்வியுடன் ஒரு வாக்கெடுப்பில் சமூக ஊடக பயனர்களை பங்கேற்க அது அழைக்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு