பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில் , இருவர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே இன்றைய தினம் காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்கிந்த பகுதியில் பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
காயமடைந்த பயணிகள் உடனடியாக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, காயமடைந்த ஆறு பேர் பதுளை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை 7:45 மணியளவில் KDU மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
உள்ளூர்வாசிகள் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை பேருந்தில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் காயமடைந்த 39 பேரை உடனடியாக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த வைத்தியர் பாலித ராஜபக்ஷ, ஆபத்தான நிலையில் உள்ள ஆறு நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் பொது வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, சத்திரசிகிச்சை தேவைப்படுவோர் அவசர சத்திரசிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற முயற்சிப்பதாக உறுதியளித்தார்.
இந்த குழுவில் இரண்டு இராணுவ வீரர்கள், ஐந்து பயிற்றுனர்கள் மற்றும் மாணவர்கள் இருந்தனர்.
ஊவா முகாமைத்துவ அபிவிருத்தி நிறுவனத்தில் தங்கியிருந்து களப்பரிசோதனைக்காக சென்று கொண்டிருந்த போதே இவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும், பிரேக் பழுதடைந்தமையினால் அதிவேகமாக பயணித்த பஸ், கரையில் மோதியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.