நாடாளுமன்ற தேர்தலில் சிறீதரன் மற்றும் சிறிநேசனை வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருக்கவில்லை என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை எமது கட்சியிலிருந்து எவராவது அமைச்சர் பதவி எடுக்க வேண்டும் அதன் மூலமாக ஒரு அதிகாரத்தை பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மக்கள் விரும்புகின்ற வேட்பாளர்கள்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் களம் இறக்கப்பட வேண்டுமே தவிர சில தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டவர்கள் களத்தில் இறக்கப்பட வேண்டும் என்று கனவு காண்பது ஒரு பழி வாங்குகின்ற சிந்தனையாக இருக்க முடியுமெனவும் சிறீநேசன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அநுர தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னைய காலத்தில் நாங்கள் அமைச்சுப் பதவிகளை எடுக்கக்கூடாது, ஒரு நிலையான தீர்வு வருகின்ற வரைக்கும் மத்திய அரசில் நாங்கள் பங்குபெறக் கூடாது என்கின்ற கருத்துக்கள் நிலவின.
ஆனால், அது கட்சியினுடைய கொள்கை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அமைச்சுப் பதவிகளை எடுத்த ஒரு காலகட்டமும் இருந்திருக்கிறதென எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.