ஜடேஜா, வாஷிங்டன் சுழலில் சுருண்ட நியூசிலாந்து; இந்தியா 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறல்
- எழுதியவர், போத்திராஜ் . க
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவம்பர் 1) துவங்கிய இந்தியா நியூசிலாந்து அணிக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி விரைவாகவே முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் வில் யங் (71), டேரல் மிட்செல் (82) ஆகியோர் சேர்த்த ரன்கள்தான் அதிகபட்சம். இருவரையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்திருந்தால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 150 ரன்களுக்குள்தான் இருந்திருக்கும்.
முதல் இன்னிங்ஸை சீராகத் தொடங்கிய இந்திய அணி வழக்கம்போல் ரோகித் சர்மாவின் விக்கெட்டை விரைவாக இழந்தது. அதன்பின் முதல்நாள் ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்தபோது, திடீரென அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.
78 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
9 விக்கெட்டுகளை வீழ்த்திய இருவர்
நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 186 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என வலுவாக இருந்தது. ஆனால், கடைசி 48 ரன்களுக்கு மட்டும் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
நியூசிலாந்து அணியின் பேட்டிங் சரிவுக்கு வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா இருவரின் பங்களிப்பு பிரதானமாகும். ஜடேஜா 22 ஓவர்கள் வீசி 65 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், சுந்தர் 18.4 ஓவர்கள் வீசி 81 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இருவரும் சேர்ந்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டெஸ்ட் போட்டியில் 14-வது முறையாக ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஜாகீர்கான், இஷாந்தை முந்திய ஜடேஜா
டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஜாகீர்கான், இஷாந்த் சர்மா, இருவரையும் இந்த ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா பின்னுக்குத் தள்ளி 5-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
ரவீந்திர ஜடேஜா தற்போது டெஸ்ட் போட்டியல் 314 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி அளவில் 5வது இடத்தில் உள்ளார். ஜாகீர்கான், இஷாந்த் சர்மா இருவரும் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
அடுத்துவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 3-ஆவது முறையாக இந்திய அணி தகுதி பெறுவதற்கு 6 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் 4 டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டும். 6 ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றால், எந்தவிதமான தடையும் இன்றி, இறுதிப்போட்டிக்குச் செல்லலாம்.
நியூசிலாந்துடன் மும்பையில் இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் இந்திய அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதலால் இன்று கட்டுக்கோப்பான பீல்டிங், பந்துவீச்சை வெளிப்படுத்தி 235 ரன்களுக்குள் நியூசிலாந்தைச் சுருட்டினர்.
அஸ்வினுக்கு சாதாரண நாள்
ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சு புனே டெஸ்ட் போட்டியிலிருந்து எதிர்பார்த்த அளவு எடுபடவில்லை. மும்பை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிலும் அஸ்வினுக்கு சாதாரண நாளாக அமைந்துவிட்டது.
வழக்கமாக பந்துவீச்சில் பல்வேறு உத்திகங்களைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அஸ்வினின் பந்துவீச்சு நியூசிலாந்து பேட்ஸ்மேன்களிடம் எடுபடவில்லை. டெஸ்ட் போட்டியில் ஃபார்முக்கு வராத நிலையிலும் ஆஸ்திரேலியாவுக்கு அஸ்வின் பயணிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் கொளுத்திய வெயில்
மும்பையில் இன்று வெயில் 37 டிகிரி செல்சியஸாக சுட்டெரித்து, நண்பகலில் 41 டிகிரி வரை சென்றது. இதனால் இந்திய வீரர்கள் பீல்டிங் செய்யவும், நியூசிலாந்து பேட் செய்யவும் மிகுந்த சிரமப்பட்டனர்.
ஒவ்வொரு 3 ஓவர்களுக்கும் இடையே நீர், குளிர்பானங்கள் வீரர்களுக்கு வழங்கப்பட்டன, ஐஸ் பேக், ஐஸ் துண்டு ஆகியவற்றை வைத்து வீரர்கள் முகத்தையும், வியர்வையையும் துடைத்தவாறு இருந்தனர்.
காலை நேரத்தில் கடும் வெயிலும், காற்று குறைவாகவும், காற்றில் ஈரப்பதத்தின் அளவும் அதிகரித்து காணப்பட்டதால் வீரர்கள் வியர்வை மழையில் நனைந்து, சிறிது நேரத்தில் சோர்வடைந்தனர். இதுபோன்ற கடும் வெயிலை அனுபவித்திராத நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் டேரல் மிட்செல், வில் யங் மிகுந்த சிரமப்பட்டனர்.
பும்ராவுக்கு ஓய்வு
ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை மனதில் வைத்தும், வைரஸ் தொற்று காரணமாகவும் பும்ராவுக்கு இந்த டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டு முகமது சிராஜ் சேர்க்கப்பட்டிருந்தார்.
சிராஜின் பந்துவீச்சு சாரசரிக்கும் கீழாகவே இருந்தது, பெரிதாக சொல்லிக் கொள்ளும் வகையில் அவர் வீசிய பந்து ஸ்விங் ஆகவில்லை, லென் லென்த்தும் (line length) கிடைக்கவில்லை.
நியூசிலாந்து திணறல்
ஆனால், ஆகாஷ் தீப், அரவுண்ட் ஸ்டெம்ப் பக்கம் வந்து பந்துவீசியதால், தொடக்கத்திலிருந்தே டேவன் கான்வே, லாதம் திணறினர். அதற்கு ஏற்றார்போல் கான்வே கால்காப்பில் வாங்கி, ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 15 ரன்களுக்கு முதல் விக்கெட்டை நியூசிலாந்து பறிகொடுத்தது.
இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் லாதமுடன், வில் யங் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர். சுந்தர், ஜடேஜா பந்துவீச வந்தபின் ரன் சேர்க்கும் வேகம் குறைந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் 44 ரன்கள் சேர்த்தநிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டாம் லாதம் (28) க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
கடந்த டெஸ்டில் இந்திய அணிக்கு சிம்மசொப்னமாக இருந்த ரச்சின் ரவீந்திரா இந்த முறை நிலைக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ரச்சின் ரவீந்திரா போல்டாகி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். புனே டெஸ்டில் இருந்து மூன்றாவது முறையாக சுந்தர் பந்துவீச்சில் ரவீந்திரா விக்கெட்டை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உணவு இடைவேளைக்கு செல்லும்போது நியூசிலாந்து அணி 91 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆடுகளம் தொடக்கத்திலிருந்தே சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது. இதனால் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் பந்து நன்கு டர்ன் ஆகியது, சிறிது பவுன்ஸும் ஆகியது.
வலுவான பார்ட்னர்ஷிப்
நான்காவது விக்கெட்டுக்கு வில் யங் – டேரல் மிட்செல் கூட்டணி சிறப்பாக விளையாடினர். ஜடேஜா, அஸ்வின், சுந்தர் பந்துவீச்சை சமாளித்து ஆடி ரன்களைச் சேர்த்தனர்.
வில் யங் 94 பந்துகளிலும், மிட்ஷெல் 90 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். வில் யங் இந்த டெஸ்ட் தொடரிலேயே முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்திருந்த நிலையில் இந்த பார்ட்னர்ஷிப்பை ஜடேஜா பிரித்தார்.
ஆட்டத்தில் திருப்புமுனை
ஜடேஜா பந்துவீச்சில் வில் யங்க் ஸ்லிப்பில் இருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 71 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தத் தருணம்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும், அடுத்து களமிறங்கிய டாம் பிளென்டல் இதே ஓவரில் ஜடேஜா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். ஜடேஜா வீசிய 45-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை நியூசிலாந்து அடுத்தடுத்து இழந்தது.
அதன்பின் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்களைக் கடக்கவில்லை. இஷ் சோதி (7), மாட் ஹென்றி (0), அஜாஸ் படேல் (7), கிளென் பிலிப்ஸ் (17) என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
கடைசி 48 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. டேரல் மிட்செல் 82 ரன்கள் சேர்த்தநிலையில் சுந்தர் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு டேரல் மிட்செல் அடித்த 3 சிக்ஸர்கள்தான் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தியது.
ரோகித் மீண்டும் ஏமாற்றம்
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் தொடங்கினர். அதிரடியாக பவுண்டரிகள் அடித்த ரோகித் சர்மா கடந்த டெஸ்டைப் போல் நீடிக்கவில்லை. ஹென்றி பந்துவீச்சில் அவுட்சைட் ஆப்சைடு சென்றபந்தைரோஹித் சர்மா தேவையின்றி தட்டிவிட ஸ்லிப்பில் நின்றிருந்த லாதம் கேட்ச் பிடித்தார். ரோகித் சர்மா 18 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த சுப்மான் கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். இருவரும் விரைவாக ரன்களைச் சேர்த்தனர். நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் என அடித்தால் ரன்ரேட் வேகமெடுத்தது. 13 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. இருவரின் அதிரடியான ஆட்டத்தால் 58 பந்துகளில் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைத் தொட்டது.
கடைசி நேரத்தில் திணறல்
அஜாஸ் படேல் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முற்பட்டு ஜெய்ஸ்வால் 30 ரன்கள் சேர்த்தநிலையில் க்ளீன் போல்டாகினார். முதல் நாள் ஆட்டம் முடிய சில ஓவர்கள் இருக்கையில் களமிறங்கிய முகமது சிராஜ் கால்காப்பில் வாங்கி அஜாஸ் படேலின் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 18வது ஓவரில் மட்டும் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து களமிறங்கிய விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்தநிலையில் ஹென்றியால் ரன்அவுட் செய்யப்பட்டார். முதல்நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்துள்ளது. ரிஷப் பந்த் ஒரு ரன்னிலும், கில் 31 ரன்களிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சை வெற்றிகரமாகத் தொடங்கி, ரோஹித் சர்மா, கோலி என பெரிய விக்கெட்டுகளை குறைந்த ஓவர்களில் வீழ்த்தி நிம்மதி அடைந்துள்ளது. ஆடுகளம் நாளை சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், நாளை இரு அணிகளிலும் விக்கெட் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.