பாகிஸ்தான் பாடசாலை அருகே தாக்குதல்; சிறுவர்கள் ஐவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

by wp_fhdn

பாகிஸ்தானின், பலுசிஸ்தான் பகுதியில் பொலிஸ் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பலுசிஸ்தானின் மஸ்துங் (Mastung) நகரில் அமைந்துள்ள பெண்கள் உயர்நிலைப் பாடசாலைக்கு அருகிலேயே இந்த தாக்குதல் வெள்ளிக்கிழமை (01) நடத்தப்பட்டுள்ளது.

இந்த குண்டுத் தாக்குதலில் ஐந்து சிறுவர்களும், ஒரு பொலிஸ் அதிகாரியும் உட்பட மொத்தம் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மஸ்துங்கில் உள்ள DHQ மற்றும் நவாப் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை சிறுவர்கள் ஆவர் என்று நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இரண்டு வைத்தியசாலைகளிலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்துங் நகர துணை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட வெடி குண்டு சாதனத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் இருந்த ரிக்ஷாக்கள் உட்பட பல வாகனங்களும் சேதமடைந்தன.

தாக்குதலைத் தொடர்ந்து பலுசிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

பிரிவினைவாத இனப் போராளிகளின் தாக்குதல்களால் பலுசிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 29 அன்று, மஸ்துங்கில் உள்ள மசூதிக்கு அருகே நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மொத்தம் 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்