பிரதர் விமர்சனம்: ஜெயம் ரவி, பிரியங்கா மோகனின் நடிப்பில் இயக்குநர் ராஜேஷ் சிரிக்க வைத்தாரா?

பிரதர் விமர்சனம்: ஜெயம் ரவி, பிரியங்கா மோகனின் நடிப்பில் இயக்குநர் ராஜேஷ் சிரிக்க வைத்தாரா?

பட மூலாதாரம், Screen Scene

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஓகே ஓகே’ ஆகிய நகைச்சுவை-காதல்-குடும்ப திரைப்படங்களை இயக்கிய எம். ராஜேஷ் இயக்கத்தில், ஜெயம் ரவி, ப்ரியங்கா மோகன், பூமிகா, நட்ராஜ், ராவ் ரமேஷ், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பிரதர்’.

இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘பிரதர்’ திரைப்படம் குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்களைப் பார்க்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிரதர் படத்தின் கதை என்ன?

எந்தவொரு தவறையும் அதன் ஆபத்தை உணராமல் நேரடியாகச் சுட்டிக்காட்டும் குணம் கொண்டவர் கார்த்திக் (ஜெயம் ரவி). அதனாலேயே அவரால் சட்டப் படிப்பை முடிக்க முடியவில்லை.

இவருடைய ‘நேர்மையான’ குணம் காரணமாக, அவரது குடும்பத்தில் அடுக்கடுக்காக பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சென்னையில் அடுக்குமாடிக் கட்டடத்தின் சங்கத்தை ஆலோசிக்காமலேயே அந்தக் கட்டடத்தை இடிப்பதற்கான அனுமதியைப் பெறுகிறார் ஜெயம் ரவி. இதனால், அவரின் குடும்பத்திற்கு உள்ளேயே சிக்கல் ஏற்பட, அவருடைய தந்தை, ஜெயம் ரவியை ஊட்டியில் உள்ள அவருடைய சகோதரி வீட்டிற்கு (பூமிகா) அனுப்புகிறார்.

அங்கும் எதையும் ஆழமாகச் சிந்திக்காமல் மேற்கொள்ளும் ஜெயம் ரவியின் நடவடிக்கைகள், பூமிகாவின் வீட்டிற்குள்ளும் பிரச்னைகளை உருவாக்குகின்றன. ஒரு கட்டத்தில், அக்காவின் மாமனாரான (ராவ் ரமேஷ்), மாவட்ட ஆட்சியருடன் மோதல் ஏற்பட, இரு குடும்பங்களுக்கும் இடையே விரிசல் ஏற்படுகிறது.

இதைச் சரிசெய்யுமாறு கூறுகிறார் ஜெயம் ரவியின் தந்தை. இவர்களுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவராக இருக்கிறார் கதாநாயகி அர்ச்சனா (ப்ரியங்கா மோகன்). இந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டதா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘லாஜிக் இல்லாத நகைச்சுவை’

ஜெயம் ரவியின் பிரதர் திரைப்பட விமர்சனம்

பட மூலாதாரம், Screen Scene

படக்குறிப்பு, நகைச்சுவைக் காட்சிகள் மேலோட்டமாக இருப்பதாக பிரதர் படத்தின் ஊடக விமர்சனங்கள் கூறுகின்றன.

குடும்ப திரைப்படமான ‘பிரதர்’ அதன் கதைக்களத்திற்கு நியாயம் சேர்த்திருப்பதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விமர்சனம் கூறுகிறது.

“சந்தர்ப்ப சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல், அதீத உற்சாகத்துடன் வலம் வரும் ஜெயம் ரவியால், அவருடைய குடும்பத்திற்குள் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. நகைச்சுவை எனும் பெயரில் ‘லாஜிக்’ பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதாக,” அந்த விமர்சனம் கூறுகிறது.

மேலும், படத்தின் நகைச்சுவைக்குப் பல்வேறு துணை கதாபாத்திரங்களும் பங்களித்து இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.

படத்தின் குடும்பக் காட்சிகள் பலவும் வழக்கமான ‘இந்திய மனநிலையை’ சித்தரிப்பதாக விமர்சித்துள்ளது. படத்தின் முதல் பகுதி சற்று வேடிக்கையாக இருப்பதாகவும், ஆனால் வெடித்துச் சிரிக்கும் அளவுக்கு இல்லையென்றாலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருப்பதாகவும் கூறுகிறது. சில கதாபாத்திரங்கள் அப்பட்டமாக மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதாகவும் கூறுகிறது அந்த விமர்சனம்.

இவற்றோடு, அழுகை, வலுக்கட்டாயமான எமோஷனல் காட்சிகள் மிகையாக இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சித்துள்ளது.

“நடனம், சிரிப்பு, சண்டை, அழுகை என அனைத்து உணர்ச்சிகள் வாயிலாகவும் இந்தப் படத்தின் முதுகெலும்பாக ஜெயம் ரவி இருப்பதாக” டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டியுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘மக்காமிஷி’ பாடல் சுமார் என்றும் மற்ற பாடல்கள் கடந்து செல்லும் விதமாக இருப்பதாகவும் அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மேலோட்டமான திரைக்கதை’

ஜெயம் ரவியின் பிரதர் திரைப்பட விமர்சனம்

பட மூலாதாரம், Screen Scene

அதேபோன்று, மக்காமிஷி பாடல், கதாநாயகரின் குணநலன்களை விவரிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு தி இந்து நாளிதழ் பாராட்டியுள்ளது. வழக்கமான கதாநாயகர் அறிமுக பாடலாக அது இல்லை என்றும் அப்பாடல் வாயிலாக அந்தக் கதாபாத்திரத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

அந்நியன் திரைப்படத்தின் அம்பி கதாபாத்திரத்தின் நீர்த்துப்போன கதாபாத்திரமாக கார்த்திக் இருப்பதாகக் கூறும் தி இந்து விமர்சனம், “திரைக்கதை வலுவில்லாமல் இருப்பதால் படம் மேலோட்டமாக இருப்பதாக” விமர்சித்துள்ளது.

‘சரியானதையே செய்ய வேண்டும்’ என்ற ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தை முன்னிறுத்துவதற்கான நகைச்சுவைக் காட்சிகளுடன் முதல் பாதி நகரும் வகையில் ராஜேஷ் கதைக்களத்தை அமைத்திருப்பதாகவும் தி இந்து நாளிதழின் விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.

இது, பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கிறது அந்த விமர்சனம். தன் முதல் மூன்று திரைப்படங்கள் மூலம், பெரும் நகைச்சுவை கதைக்களத்தைத் திறம்படக் கையாண்ட ராஜேஷின் இந்தத் திரைப்படத்தில் பல நகைச்சுவைக் காட்சிகள் லேசான நகைப்பையே ஏற்படுத்துவதாக தி இந்து விமர்சித்துள்ளது.

ஜெயம் ரவியின் பிரதர் திரைப்பட விமர்சனம்

பட மூலாதாரம், Screen Scene

சில சீரியசான காட்சிகளில் ஜெயம் ரவி தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தினாலும், நகைச்சுவை காட்சிகளில் அவரின் நடிப்பு பாராட்டும்படி இல்லை என தி இந்து விமர்சித்துள்ளது.

மேலும், “அவருடைய ‘காதலியாக’ மட்டும் பிரியங்கா மோகன் தனது பங்கைச் செய்திருப்பதாகக் கூறுகிறது. அவருடைய கதாபாத்திரம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை” என்றும் கூறியுள்ளது.

பெண் கதாபாத்திரங்களை மோசமாகக் கையாள்வதாக கடந்த காலங்களில் விமர்சனங்களை எதிர்கொண்ட ராஜேஷ், பூமிகா கதாபாத்திரம் மூலம் அதை மாற்ற முயல்வதாகவும் அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூமிகாவின் மாமனார் அவருடைய பெற்றோரை அவமானப்படுத்தும் போதும், கணவர் அனைவர் முன்பும் தன்னை அறையும்போதும், தன்னிடம் மன்னிப்பு கோராமல் வீடு திரும்பப் போவதில்லை என முடிவெடுத்து வெளியேறுகிறார் பூமிகா. அவருடைய பெற்றோர் வீடு திரும்பக் கட்டாயப்படுத்தும் போதும் தனது முடிவில் உறுதியாக நிற்பது, அவருடைய பலத்தை வெளிப்படுத்தும் காட்சியாக உள்ளதாக தி இந்து பாராட்டியுள்ளது.

திரைக்கதை வலுவில்லாமல் இருப்பது படத்தின் குறைகளுக்குப் பெரும் காரணமாக அமைவதாகவும் தி இந்து விமர்சித்துள்ளது. மேலும், நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் இரண்டும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் விமர்சித்துள்ளது.

பிரதர் விமர்சனம்: ஜெயம் ரவி, பிரியங்கா மோகனின் நடிப்பில் இயக்குநர் ராஜேஷ் சிரிக்க வைத்தாரா?

பட மூலாதாரம், Screen Scene

‘ஜெயம் ரவிக்கு பாராட்டு’

பிரதர் திரைப்படத்தின் முதல் பாகம் பொறுமையைச் சோதிப்பதாக இந்தியா டுடே விமர்சித்துள்ளது.

முந்தைய விமர்சனங்களைப் போலவே, நகைச்சுவைக் காட்சிகள் ஆழமில்லாமல் மேலோட்டமாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளது.

“ஒவ்வொரு காட்சியும் நாம் முன்பே யூகிக்கும் வகையில் இருக்கின்றன. ‘பிரதர்’ போன்ற படங்களில் நடிப்பு பெரிய விஷயம் இல்லை என்றாலும், ஜெயம் ரவி இத்திரைப்படத்தை தாங்கியிருக்கிறார்” என்றும் கூறியுள்ளது.

“புதிய விஷயங்கள் ஏதுமில்லாத திரைப்படம் ‘பிரதர்’. தொலைக்காட்சி சீரியல்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் பிடிக்கக்கூடும்” என்றும் இந்தியா டுடே தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு