தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடித்து கொண்டடுவது வழக்கம் . ஆனால் , சில கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதேயில்லை என்ற ஒரு தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள 10 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீபாவளி பண்டிகை பண்டிகையை 20 ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றனர். இதற்கு காரணம் சென்னிமலை அருகே வெள்ளோட்டில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் தான்.
ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே ‘வெள்ளோடு பறவைகள் சரணாலயம்’ அமைந்துள்ளது. சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பறவைகள் சரணாலயத்தில் 50 ஏக்கர் அளவில் 30 அடி ஆழத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் குளம் அமைக்கப்பட்டுள்ளன.
கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீர், மழைக்காலங்களில் ஓடைகளில் நிரம்பி வரும் நீர் ஆகியவற்றின் மூல ஆதாரமாகக்கொண்டு விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பட்டாம் பூச்சி பூங்கா, செல்பி பாயிண்ட் என அமைக்கப்பட்டு சரணாலயமே எழில் மிகுந்து காட்சியளிக்கின்றது.
பெரும்பான்மையாக இனப்பெருக்கத்திற்காக இங்கு வரும் ஆயிரக்கணக்கான பறவைகள், இங்குள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்ணுகின்றன.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் இங்கு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருவதால், அச்சமயம் சீசன் தொடங்குகிறது.
பறவைகள் இனப்பெருக்க காலங்களில் மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பொறி உள்ளான், நீலவால், இரைக்கோழி, சிறிய நீர் காகம், சாம்பல் நாரை, பஞ்சுருட்டான் உள்ளிட்ட உள்நாட்டுப் பறவைகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை நோக்கி வருகின்றன.
மேலும் சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து சுழைக்கடா, வண்ண நாரை, நெடுங்கால உள்ளான், செம்பருந்து, பூ நாரை, வால் காக்கை, காஸ்பியன் ஆலா, வெண்புருவ சின்னான், கருங்கழுத்து நாரை உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகளும் கூட்டம் கூட்டமாக வெள்ளோடு சரணாலயத்திற்கு வருகின்றன.
இனப்பெருக்கத்தைத் தொடர்ந்து மரங்களில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுகள் வளர்ந்தவுடன் மீண்டும் இங்கிருந்து பறந்து செல்வதை அவைகளின் வழக்கமாகக் கொண்டுள்ளன.
இவ்வாறு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து மரங்களில் கூடு கட்டி, குஞ்சுகளுடன் கூச்சலிட்டுக் கொஞ்சி மகிழும் இந்த பறவைகளின் கீச்சொலிகளை கேட்கும்போது காதுகளுக்கு மட்டுமில்லாது மனதுக்கும் ஒரு அமைதியை அளிக்கின்றது.
இந்த பறவைகளின் கூட்டத்தைக் காண, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வருவதுண்டு.
இவ்வாறு இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளுக்கு எந்த விதமான இடையூறும் வந்து விடக்கூடாது என அப்பகுதியிலுள்ள கிராமத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, இந்த பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பி.மேட்டுப்பாளையம், பூங்கம்பாடி, தலையன்காட்டு வலசு, தச்சன்கரைவழி, செம்மாம்பாளையம், எல்லப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
அதன் அடிப்படையில், இந்த வருடமும் தொடர்ந்து 20-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் அமைதியான முறையில் தீபாவளியை கொண்டாடினர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டும் இரவு நேரத்தில் கம்பி மத்தாப்பு, சக்கரம் புஷ்பானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்து வருகின்றனர்.