சென்னை மாநகராட்சி கால்பந்து திடல்களை தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட்டது ஏன்? மேயர் பிரியா சொல்வது என்ன?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் இருக்கும் மாநகராட்சிக் கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை வாபஸ் பெறுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தனியாரிடம் திடல்களை ஒப்படைக்கும் தீர்மானம், விவாதமே நடத்தாமல் அவசரமாகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறுகின்றனர், கவுன்சிலர்கள்.
கால்பந்து விளையாடத் திடல்களுக்குப் பணம் செலுத்தினால், மக்களுக்கு அவறைப் பயன்படுத்தும்போது கூடுதல் அக்கறை இருக்கும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார், மேயர் பிரியா ராஜன்.
தனியாரிடம் விளையாட்டு மைதானங்களை ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி எடுத்தது ஏன்?
அந்த முடிவை வாபஸ் பெறும் அளவுக்கு இப்போது என்ன நடந்தது?
என்ன நடந்தது?
சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மாநகராட்சி அறிவித்தது.
அதில் ஒன்றாக, மாநகராட்சிக்குச் சொந்தமான ஒன்பது கால்பந்து மைதானங்களை செயற்கைப் புல் விளையாட்டுத் திடல்களாக மாற்றிவிட்டு, அவற்றை ஒப்பந்த முறையில் பராமரிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி மேயர் அறிவித்தார்.
இதுதொடர்பான தீர்மானத்தில், கால்பந்து திடல்களில் விளையாடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு நபர் ஒன்றுக்கு ரூ.120 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் ஆண்டுக்கு 2.33 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்ட உள்ளதாகவும் கூறப்பட்டது.
மாநகராட்சியில் நடந்த விவாதம்
மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு அ.தி.மு.க., பா.ம.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மட்டுமல்ல, தி.மு.க-வின் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநகராட்சி கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் விமலா, “தனியாருக்கு விளையாட்டுத் திடல்களைக் கொடுப்பதால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இலவசமாக அவர்களை அனுமதிக்க வேண்டும்,” என்றார்.
ஆனால், பராமரிப்புச் செலவை ஈடுகட்டும் வகையிலேயே கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாகக் கூறிய மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SDAT) விளையாடி வரும் வீரர்கள் இந்த மைதானங்களில் கட்டணமில்லாமல் பயிற்சி மேற்கொள்ளலாம்,” என்றார்.
இந்த விளக்கத்தை ஏற்காத கவுன்சிலர்கள், மாநகராட்சிக் கட்டடத்துக்குள் கால்பந்து விளையாடி தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அதேநேரம், தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்ட ஒன்பது மைதானங்களில் பலவும் வியாசர்பாடி, திரு.வி.க.நகர் என வடசென்னையில் அமைந்திருப்பதால் அரசியல்ரீதியாக மாநகராட்சியின் முடிவு விமர்சனத்தை ஏற்படுத்தியது.
‘மேயர் பிரியா ஏற்கவில்லை’
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னை மாநகராட்சியின் 98-ஆவது வார்டு கவுன்சிலரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷினி, “மாநகராட்சியின் தீர்மானத்தில் 57-ஆவதாக இந்தத் தீர்மானம் வந்தது. அதில் இடம்பெற்றுள்ள ஒன்பது மைதானங்களும் ஏழை எளிய மக்கள் வசிக்கக் கூடிய பகுதிகளில் உள்ளன,” என்கிறார்.
“கால்பந்து விளையாடுவதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம் நிர்ணயித்திருந்தனர். ஒரு கால்பந்து அணியில் பத்து முதல் 13 பேர் இருப்பார்கள். பத்து பேரும் விளையாடுவதற்கு 1 மணிநேரத்துக்கு ரூ.1,200 ரூபாய் செலவாகும்,” என்கிறார்.
மேலும், “இவர்கள் பயிற்சி எடுப்பதற்கு ஆறு மணிநேரம் தேவைப்படும். அப்படியானால் ஒரே ஒரு குழு மட்டும் ரூ.6,000-க்கு மேல் பணம் செலுத்த வேண்டிய நிலை வரும். இதை எளிய மக்களால் செலுத்த முடியாது. எனவே, இதை நிலைக்குழுவில் விவாதிக்க வேண்டும் என்றோம். ஆனால் அதனை மேயர் ஏற்கவில்லை,” என்கிறார்.
கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைக்கும்போது, மாநகராட்சிக்கு 40% மட்டுமே வருமானம் வர உள்ளதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறும் பிரியதர்ஷினி, “வெறும் 40%-க்காக இப்படியொரு முடிவுக்கு மாநகராட்சி ஏன் செல்ல வேண்டும் எனக் கேள்வி எழுப்பினோம். அதற்கும் மேயரிடம் இருந்து பதில் வரவில்லை,” என்கிறார்.
“கால்பந்து திடல்களுடன் மாநகராட்சியின் வசம் உள்ள 595 பூங்காக்களையும் தனியாரிடம் ஒப்படைக்க உள்ளனர். இதற்கு முன்னதாக பராமரிப்பு பணி என்ற பெயரில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு ஒப்பந்ததாரர் எனக் கொடுத்தனர். தற்போது ஒரே நபரிடம் ஒப்படைப்பதற்காக இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
“இந்தப் பூங்காக்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மாநகராட்சி சம்பளம் கொடுக்கிறது. பிறகு ஏன் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்புகிறார் பிரியதர்ஷினி.
வாபஸ் பெறுவதாக அறிவிப்பு
கால்பந்து மைதானம் தொடர்பான மாநகராட்சியின் முடிவுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
இதையடுத்து, திடல்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை வாபஸ் பெறுவதாக மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமையன்று (அக்டோபர் 30) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார் அவர்.
அதில் “மாணவ, மாணவியர்களின் கோரிக்கையை ஏற்று, விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும் ஊக்கப்படுத்தும் வகையிலும் 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களை கட்டணம் ஏதுமின்றி தொடர்ந்து பயன்பாட்டிற்கு அனுமதிக்க சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. இந்த விளையாட்டுத் திடல்களின் பராமரிப்பு செலவினங்களை மாநகராட்சியே ஏற்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘வடசென்னைக்குக் கால்பந்து முக்கியம்’
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கால்பந்து பயிற்சியாளர் தங்கராஜ், “மாநகராட்சியின் தீர்மானம் நடைமுறைக்கு வந்திருந்தால், வடசென்னையில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியிருக்கும்” என்கிறார்.
“வடசென்னையின் பிரதான விளையாட்டாகக் கால்பந்து உள்ளது. இங்குள்ள மக்களால் பணம் கட்டி விளையாட முடியாது. நாங்களும் இலவசமாகதான் பயிற்சி அளிக்கிறோம்,” எனக் கூறும் தங்கராஜ், போதைப் பழக்கங்களில் இருந்து இளைஞர்களை மடைமாற்றும் முக்கிய ஆயுதமாக கால்பந்து இருப்பதாக கூறுகிறார்.
வியாசர்பாடி மைதானத்தில் பயிற்சி பெற்ற நந்தகுமார் தற்போது தேசிய அளவில் முக்கிய வீரராக வலம் வருவதாக கூறும் தங்கராஜ், “கொல்கத்தாவில் உள்ள மூன்று பெரிய கால்பந்து அணிகளில் ஒன்றான ஈஸ்ட் பெங்கால் அணிக்காக நந்தகுமார் விளையாடி வருகிறார். கால்பந்து விளையாட்டில் ஏராளமான வீரர்களை உருவாக்கும் களமாக, வடசென்னை உள்ளது,” என்கிறார்.
வியாசர்பாடி மைதானத்தில் 300-க்கும் மேற்பட்டோர் தினசரி கால்பந்து விளையாடுவதாக கூறும் தங்கராஜ், “இங்கு விளையாடும் மாணவர்களின் பெற்றோர், ஆட்டோ ஓட்டுநர், சுமை தூக்கும் பணியாளர், வீட்டு வேலை என அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களால் பணம் கட்டி விளையாட முடியாது,” என்கிறார்.
“விளையாட்டுத் திடல்களில் மீண்டும் எந்த வடிவத்திலும் கட்டண நிர்ணயம் வந்துவிடக் கூடாது. அது ஆபத்தில் முடியும்,” என்கிறார் தங்கராஜ்.
தனியாரிடம் செல்லும் மாநகராட்சி அரங்குகள்
இதுதவிர, தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவற்றைத் தனியாருக்குக் குத்தகை விடும் தீர்மானத்தையும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) அன்று மாநகராட்சி நிறைவேற்றியுள்ளது.
“கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் பலவும் மிகக் குறைந்த விலையில் இந்த அரங்கங்களில் நடத்தப்பட்டு வந்தன. இவை தனியாரிடம் சென்றால் சாதாரண அமைப்புகளால் இனி சென்னையில் கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இந்த முடிவையும் மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும்,” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தியாகராயர் அரங்கமும் அம்மா அரங்கமும் எளிய மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டவை. அதற்கான நோக்கத்தில் இருந்து மாநகராட்சி விலகிச் செல்வதாக கூறும் கவுன்சிலர் பிரியதர்ஷினி, “அக்டோபர் 29 -ஆம் தேதி கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பானவை. தனியார்மயத்தை நோக்கி மாநகராட்சி செல்வதையே இது காட்டுகிறது,” என்கிறார்.
மேயர் பிரியா ராஜன் சொல்வது என்ன?
‘விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமலேயே திடல்களை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்களே?’ என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனிடம் பிபிசி தமிழ் கேட்டது.
“மீண்டும் கட்டணம் நிர்ணயிக்கும் சூழல்கள் வராது. அதை முழுமையாக வாபஸ் பெற்றுவிட்டோம். விளையாட்டு மைதானங்களை மாநகராட்சியே பராமரிக்க உள்ளது. யாரும் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக் கூறிவிட்டோம்,” என்கிறார்.
“விளையாட்டு மைதானங்களில் கட்டணம் வசூலிக்காமல் மக்களுக்கு வழங்க வேண்டும்,” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளதாகவும் மேயர் பிரியா ராஜன் குறிப்பிட்டார்.
‘வருவாய் பெருக்கத்துக்காகத் திடல்களை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டதா?’ என்று கேட்டோம்.
“வருவாய் என்ற ஒரு நோக்கம் மட்டும் இல்லை. பணம் கட்டி விளையாடினால், மக்களும் ஓரளவு அக்கறையுடன் பராமரிப்பார்கள் என்பதற்காக இந்த முடிவை எடுத்தோம். இதில் பெரிதாக எந்த வருவாயும் கிடைக்கப் போவதில்லை,” என்கிறார்.
அடுத்து, மாநகராட்சிப் பூங்கா, அரங்கம் தொடர்பான சர்ச்சை குறித்துப் பேசிய மேயர் பிரியா, “மக்களின் நலனுக்காக மட்டுமே மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் கட்டணமில்லாத சேவைகளை வழங்க வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்,” என்கிறார்.
“இதுவரை மண்டல வாரியாகப் பூங்காக்களைப் பராமரிக்கும் வேலைகள் நடந்தன. இனி மாநகராட்சிப் பூங்காக்களை ஒருமுகப்படுத்தி ஒரே ஒப்பந்ததாரர் மூலமாக பராமரிப்பு வேலைகள் நடக்க உள்ளன,” என்கிறார் பிரியா ராஜன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.