தமிழ்நாட்டில் ரசாயன போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கிறதா? வீட்டிலேயே தயாரிக்க முயன்ற இளைஞர்கள் கைது

சென்னை மெத்தம்பெட்டமைன் விவகாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காரில் வந்த இளைஞரை சோதனை செய்தபோது, அவரிடம் வெள்ளை நிற தாளில் படிகாரம் போன்ற பொருள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர் (சித்தரிப்பு படம்)
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

வீட்டில் ஆய்வகம் அமைத்து போதைப்பொருள் தயாரித்ததாக கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேரை கடந்த வாரம் சென்னை காவல்துறை கைது செய்தது.

கஞ்சா, ஹெராயின் கிடைப்பதில் சிரமம் உள்ளதால் ரசாயனம் சார்ந்த போதைப் பயன்பாடு அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர், காவல்துறை அதிகாரிகள்.

சில்லறை வியாபாரிகள் மட்டுமே கைது செய்யப்படுவதால் போதைப் பொருள் விற்பனை அதிகரிப்பதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் சில மாணவர்கள் வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து போதை மருந்து தயாரித்தது எப்படி? மெத்தம்பெட்டமைன் பயன்பாடு தமிழ்நாட்டில் அதிகரிக்கிறதா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சென்னை கொடுங்கையூரில் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி இரவு, வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வழியாக காரில் வந்த இளைஞரை சோதனை செய்தபோது, அவரிடம் வெள்ளை நிற தாளில் படிகாரம் போன்ற பொருள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

அது போதைக்காகப் பயன்படுத்தப்படும் பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து சுமார் 245 கிராம் அளவுள்ள மெத்தம்பெட்டமனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, அவர் மற்றும் அவருடைய 6 நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் பொறியியல் படித்து வருகின்றனர். ஒருவர் முதுகலை வேதியியல் படித்துள்ளார்.

எஃப்.ஐ.ஆர் சொல்வது என்ன?

சென்னை மெத்தம்பெட்டமைன் விவகாரம்

பட மூலாதாரம், Getty Images

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கையில், ‘கைதான நபர்கள் எளிதாகப் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரூ.3 லட்சத்தை ஏற்பாடு செய்து செங்குன்றத்தைச் சேர்ந்த அருண் குமாரிடம் மெத்தம்பெட்டமைன் வாங்கியுள்ளனர்.”

“அதை ஒரு கிராம் 800 ரூபாய் என தேனாம்பேட்டை, கொடுங்கையூர், செங்குன்றம், மாதவரம் ஆகிய பகுதிகளில் அவர்கள் விற்றதாக” கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதான 7 பேர் மீதும் என்.டி.பி.எஸ் சட்டப் பிரிவு 22(சி), 25, 29(1) ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்பிறகு கைதானவர் வீட்டில் நடத்திய சோதனையின்போது காவல்துறைக்கு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.

வீட்டிலேயே ஆய்வகம்

கொடுங்கையூரில் உள்ள, கைதானவர்களில் ஒருவரின் வீட்டில், போதைப் பொருள் தயாரிப்பதற்காகச் சிறிய ஆய்வகம் ஒன்றை அமைத்துள்ளார்.

அந்த மாணவர், இதற்குத் தேவையான ரசாயனங்களை சென்னை மண்ணடியில் உள்ள கடைகளில் வாங்கியதாகக் கூறுகிறார், மகாகவி பாரதியார் நகரின் உதவி ஆணையர் சச்சிதானந்தம்.

பிபிசி தமிழிடம் பேசிய சச்சிதானந்தம், “செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த கார்த்திக் மற்றும் அருண்குமாரிடம் மெத் எனப்படும் மெத்தம்பெட்டமைனை வாங்கி விற்றதாக, கைதானவர்கள் கூறினர்.

இந்நிலையில், சொந்தமாகத் தயாரித்து விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்பதற்காக அவர்கள் வீட்டிலேயே ரசாயனங்கள், சோதனைக் குழாய்கள், எடை போடும் எலக்ட்ரானிக் இயந்திரம் ஆகியவற்றை வைத்திருந்தனர்” என்கிறார்.

ஆய்வகத்தில் போதைப் பொருள் தயாரிக்கும் முயற்சியில் இரண்டு முறை இந்தக் குழுவினர் தோல்வியடைந்ததாகக் கூறும் சச்சிதானந்தம், “இவர்கள் மெத்தம்பெட்டமைனை வாங்கி அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர். இந்தப் பணத்தில் கஃபே (Cafe) ஒன்றைத் தொடங்குவதை நோக்கமாக வைத்திருந்தனர். இதற்கு முன்னதாக இந்தக் கும்பல் மீது வேறு எந்த வழக்குகளும் பதிவாகவில்லை” என்கிறார்.

சென்னை மெத்தம்பெட்டமைன் விவகாரம்

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, மேற்கு ஆப்ரிக்காவை சேர்ந்த அபித் கிளாப்டனின் கடந்த 22ஆம் தேதி தனிப்படை காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக சிறப்புக் குழு (Anti Narcotics intelligence unit) ஒன்றை மாநகர காவல்துறை ஆணையர் அருண் நியமித்துள்ளார். அந்தக் குழுவினரின் தொடர் தேடுதலின் பலனாக கொடுங்கையூரில் ஏழு பேர் பிடிபட்டதாகக் கூறுகிறார், காவல் உதவி ஆணையர் சச்சிதானந்தம்.

“இதற்காக வெளி மாநிலங்களையோ, வெளிநாடுகளையோ சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக மெத்தம்பெட்டமைன் பேசுபொருளாகி வருகிறது” என்கிறார் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ்.

அரும்பாக்கம் சம்பவம்

கொடுங்கையூர் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை அரும்பாக்கத்தில் மெத்தம்பெட்டமனை விற்பனை செய்து வந்த தீபக்-டாலி தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு சப்ளை செய்ததாக பெங்களூருவை சேர்ந்த சந்தோஷ், அந்தோணி ரூபன், மேற்கு ஆப்ரிக்காவை சேர்ந்த அபித் கிளாப்டனின் ஆகியோரை கடந்த 22ஆம் தேதி தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.

இவர்கள் ஆந்திராவை சேர்ந்த சதீஷிடம் மொத்தமாக மெத்தம்பெட்டமனை கொள்முதல் செய்வது தெரிய வந்துள்ளது. அந்த நபரிடம் வாடிக்கையாளர் போல பேசி சென்னைக்கு வரவழைத்து மாதவரம் பேருந்து நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த நபருக்கு ஆந்திர மாநிலம் ஓங்கோலில் உள்ள விஸ்வநாதன் ரெட்டி என்பவர் விநியோகம் செய்தது தெரிய வந்தது. சதீஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். விஸ்வநாதன் ரெட்டியை போலீஸ் கைது செய்தபோது அவர் தப்பியோடும் வீடியோ காட்சிகள், இணையத்தில் வைரல் ஆனது.

முன்னாள் டி.ஜி.பி மகன் கைது

சென்னை மெத்தம்பெட்டமைன் விவகாரம்

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, ஆந்திராவில் இருந்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்யும் காட்சி

இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து கோகைன் என்ற போதைப் பொருளைக் கடத்தியதாக தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி ரவீந்திரநாத்தின் மகன் அருண் என்ற நபரை கடந்த வெள்ளியன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஜான் எஸி என்பவருடன் சேர்ந்து சென்னையில் கோகைன் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீஸ் கூறுகிறது.

இந்த வழக்கில் அருண் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 3.8 கிராம் அளவுள்ள கோகைன் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெத்தம்பெட்டமைன் விவகாரம், வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ்

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ்

தொடரும் கைதுகள் – ஆனால்…

“போதைப் பொருள்களை விற்பனை செய்யக் கூடிய நபர்களை தொடர்ச்சியாக காவல்துறை கைது செய்து வருகிறது. ஆனால், இது போதுமானதாக இல்லை” என்கிறார் பாஜக துணைத் தலைவரும் வழக்கறிஞருமான ஆர்.சி.பால்கனகராஜ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “போதைப் பொருள் வணிகத்தில் ஈடுபடும் முக்கிய நபர்கள் கைது செய்யப்படுவது இல்லை. இதை விற்பனைக்காகக் கொண்டு செல்லும் நபர்கள், இந்தப் பொருளைப் பற்றித் தெரியாமல் கொண்டு செல்லும் நபர்கள் ஆகியோர் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர்,” என்கிறார்.

இதன் காரணமாக, “வியாபாரம் தொடரவே செய்யும். போதைத் தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுக்களைத் தாண்டி காவல் நிலையங்களிலும் அதிக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டிற்குள் போதைப் பொருள்களை அனுப்பி வைக்கும் நபர்களையும் கைது செய்யும்போதுதான் இதன் பரவலான விற்பனையைத் தடுக்க முடியும்” என்று பால்கனகராஜ் கூறுகிறார்.

டி.ஜி.பி கொடுத்த விளக்கம்

சென்னை மெத்தம்பெட்டமைன் விவகாரம்

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் மாநிலம் முழுவதும் 1,148 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜிவால் கூறியுள்ளார்

ஆனால், இந்தக் கூற்றை மறுக்கும் வகையில் கடந்த 7ஆம் தேதி தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கையில், போதைப் பொருள் தொடர்பாக, அக்டோபர் முதல் வாரத்தில் மட்டும் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஜார்க்கண்ட், ஆந்திரா, மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 641 வழக்குகளில் 1965 கிலோ கஞ்சாவும் 10,634 போதை மாத்திரைகளும் 35,500 கிலோ மற்ற மருந்துகள், மெத்தம்பெட்டமைன், ஆம்பெட்டமைன், கஞ்சா சாக்லேட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் மாநிலம் முழுவதும் 1,148 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜிவால் கூறியுள்ளார்.

மெத்தம்பெட்டமைன் தொடர்பான வழக்குகள் அதிகரிப்பது குறித்து சென்னை தெற்கு காவல் இணை ஆணையர் சிபி சக்ரவர்த்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, இதுகுறித்து தனிப்பட்ட முறையில் விளக்கமளிக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்.

‘மாற்று வழிகளை தேடுவதுதான் காரணம்’ – முன்னாள் டி.ஜி.பி

மெத்தம்பெட்டமைன்: தொடரும் கைதுகள், சிக்கிய மாணவர்கள் - தமிழ்நாட்டில் ரசாயன போதைப் பயன்பாடு அதிகரிக்கிறதா?

பட மூலாதாரம், Dr.Ravi Muthusamy IPS/FB

“போதைப் பொருள்களை விநியோகம் செய்யும் நபர்கள், பெரியதொரு நெட்வொர்க் ஆகச் செயல்படுகின்றனர். அவர்களைக் கண்டறியும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது” என்கிறார் முன்னாள் டி.ஜி.பி. ரவி.

வெளிநாடுகள், வெளிமாநிலம் ஆகியவற்றில் இருந்து போதைப் பொருள்கள் வருவதாகக் கூறும் ரவி, “மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் போதைப் பொருள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை துண்டிக்கும் வேலையை காவல்துறை செய்து வருவதாக” தெரிவித்தார்.

கஞ்சாவுக்கு எதிராக காவல்துறை எடுத்த நடவடிக்கையால், தற்போது பெரியளவில் அவை கிடைப்பதில்லை. அதற்கு மாற்றாக வேறு வழிகளைத் தேடுவதால் மெத்தம்பெட்டமைன் அதிகளவில் பிடிபடுவதாகவும் கூறுகிறார் அவர்.

போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர் கூட்டங்களை நடத்தி அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாகவும் முன்னாள் டி.ஜி.பி ரவி குறிப்பிட்டார்.

போதைப் பயன்பாடுகளைத் தடுக்கும் வகையில் வியாழன் அன்று (அக்டோபர் 24) உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

அதில், “தமிழ்நாட்டின் இளைஞர், மாணவர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக, உங்களின் தந்தையாக கேட்டுக் கொள்கிறேன். போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம். போதை ஒழியட்டும்; பாதை ஒளிரட்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு