சௌமியமூர்த்தி தொண்டமானின் 25 ஆவது சிரார்த்த தினம்!

by guasw2

மலையகத்தின் மாபெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 25 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு, கொழும்பு, ஜனாதிபதி செயலகக் கட்டிடத் தொகுதிக்கு முன்பாக அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சட்ட ஆலோசகர் மாரிமுத்து, தேசிய அமைப்பாளர் சக்திவேல் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றன.

1913 ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக அரசியல் வரலாற்றில் என்றும் மறவாத மாமனிதராக திகழ்கின்றார்.

இலங்கைவாழ் இந்தியர்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் போராடிய மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி இயற்கை எய்தினார்.

1947 ஆம் ஆண்டு பிரஜா உரிமை சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து மலையக மக்களுடைய வீட்டுரிமை, நாட்டுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போது 1952 ஆம் ஆண்டுகளிலே பல்வேறு சத்தியாகிரகங்களையும், போராட்டங்களையும் செய்து மலையக மக்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்த பெருந்தகையே அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்