தீபாவளி ஏன் கொண்டாடப் படுகிறது? வட இந்தியா, தென் இந்தியாவில் மாறுபடும் கதைகள் என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணமாகப் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.
அவற்றில் சில கதைகள் மிகப் பிரபலமானவை.
அந்தக் கதைகள் என்னென்ன?
இந்தியா முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை, அல்லது ஒரே பண்டிகையாக தீபாவளி பண்டிகையைச் சொல்ல முடியும்.
இந்த தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்பது குறித்து பல கதைகள் இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் சில பிரபலமான கதைகள் இங்கே.
1. ராமாயணத்தில் தீபாவளி
இந்தியா முழுவதும் பல்வேறு கதைகளின் அடிப்படையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
ஆனால், வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் தீபாவளிப் பண்டிகை ராமாயணத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
வனவாசம் செல்லும் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோர் தங்கள் வனவாசத்தை முடித்துக்கொண்டு, அயோத்திக்குத் திரும்பும் தினமே தீபாவளியாக கருதப்படுகிறது. ராவணனை வெற்றிகொண்டு, சீதையை மீட்டு அயோத்திக்கு ராமர் திரும்புவது என்பது, தீமையை நன்மை வெற்றிகொள்வதன் அடையாளமாகக் காட்டப்படுகிறது.
தங்கள் அரசனான ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரை வரவேற்க அயோத்தி நகர மக்கள் வீடுகளை அலங்கரித்து, வீட்டு வாசலில் விளக்கேற்றினார்கள் என்றும், அதனையே இப்போது தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவோர் அனைவரும் செய்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், வால்மீகி ராமாயணம் ராமனுக்காக நகரம் தயாரானதைக் குறிப்பிடுகிறதே தவிர, அதே முறையில் பின்னாளில் கொண்டாடப்பட வேண்டும் என்பதாகக் கூறவில்லை.
2. கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த தினம்
வட இந்தியாவில் தீபாவளி பெரிதும் ராமாயணத்தோடு தொடர்புபடுத்தப்படும் நிலையில் தென்னிந்தியாவில் இந்தப் பண்டிகை நரகாசுர வதத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது.
நரகாசுரனின் பிறப்பு குறித்து ஒவ்வொரு புராணமும் ஒவ்வொரு விதமாகக் குறிப்பிட்டாலும், பொதுவான கதை, பூமாதேவிக்கும் விஷ்ணுவின் அவதாரமான வராகத்திற்கும் பிறந்தவன்தான் நரகாசுரன். நரகாசுரனை அவனுடைய தாயைத் தவிர வேறு யாராலும் கொல்ல முடியாது என பிரம்மா வரம் வழங்குகிறார். மிகுந்த பலசாலியான நரகாசுரன், ஒரு கட்டத்தில் தேவலோகத்தையும் வெல்கிறான். இந்திரன் உள்ளிட்டவர்கள் விஷ்ணுவிடம் அது குறித்து முறையிட, தான் அவனை அவதாரம் எடுத்துக் கொல்வதாக வாக்களிக்கிறார் அவர்.
அதன்படி விஷ்ணு, கிருஷ்ணராகவும் பூமாதேவி சத்யபாமாவாகவும் அவதாரம் எடுக்கின்றனர். நரகாசுரனின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டேபோக, தன் மனைவி சத்யபாமாவுடன் கருடன் மீது ஏறி தாக்குதலைத் தொடங்குகிறார் கிருஷ்ணர். பல்வேறு அஸ்திரங்களை நரகாசுரனின் படைகள் மீது ஏவி, அவற்றை அழிக்கிறார். நரகாசுரனும் பல்வேறு அஸ்திரங்களை கிருஷ்ணர் மீது ஏவுகிறான். ஒரு கட்டத்தில் திரிசூலத்தை ஏவ, அதில் தாக்கப்படும் கிருஷ்ணர் மயங்கியதைப் போல நடிக்கிறார். இதையடுத்து, சத்யபாமா நரகாசுரனை தாக்கி வீழ்த்துகிறார். கிருஷ்ணர் தனது சுதர்ஸன சக்கரத்தை ஏவி, நரகாசுரனைக் கொல்கிறார்.
பாகவத புராணத்தில் நரகாசுரன் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த காளிகா புராணம்தான் நரகாசுரனைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மேலும், அசாம் மாநிலத்தில் நரகாசுரனைப் பற்றிய கதைகள் பிரபலமாக உள்ளன.
இருந்தபோதும், தென் மாநிலங்களில் நரகாசுரன் தீபாவளியுடன் இணைக்கப்பட்டிருக்கிறார். தான் இறக்கும் முன்பாக, தான் கொல்லப்பட்ட தினத்தை வண்ண விளக்குகளோடு கொண்டாட வேண்டுமென தன் தாயைப் பார்த்துக் கேட்டதாகவும் சத்யபாமா அந்த வரத்தை வழங்கியதையடுத்தே, அந்த தினம் வண்ண விளக்குகள், வாணவேடிக்கைகளோடு தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுவதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கதையும் தீமையை நன்மை வெல்வதை அடிப்படையாகக் கொண்டது.
3. பாண்டவர்களின் வருகையும் தீபாவளியும்
ராமாயண காலத்திற்குப் பிந்தைய காலத்தில் நடப்பதாகக் காட்டப்படும் மகாபாரதத்தோடும் தீபாவளிப் பண்டிகை தொடர்புபடுத்தப்படுகிறது. பாண்டவர்களை கௌரவர்கள் சூதாட்டத்தில் வென்ற பிறகு, அவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்றும் ஒரு ஆண்டு யாருக்கும் தெரியாத வகையில் வசிக்க வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது. இந்த 13 ஆண்டு கால வனவாசம் நிறைவுபெற்றதும் பண்டவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்ப வருகின்றனர்.
அவர்களது வருகையை அறிந்த மக்கள் ஆனந்தமடைந்து, வீடுகளையும் வீதிகளையும் அலங்கரித்தனர். வீட்டு வாயிலில் தீபங்களை ஏற்றி பாண்டவர்களை வரவேற்றதாகவும் அந்த தினமே தீபாவளியாக கொண்டாடப்படுவதாகவும் ஒரு கதை உண்டு. இந்தக் கதை மிகப் பெரிய அளவில் பிரபலமாகாத ஒரு நம்பிக்கை.
காரணம், 13 ஆண்டுகால வனவாசம் முடிந்த பிறகு, விராடனுக்குச் சொந்தமான உபப்பிலாவியம் என்ற ஊரில் இருந்து, பாண்டவர்கள் கௌரவர்களுக்கு தூது அனுப்பி தங்கள் நாட்டை திரும்பக் கேட்கிறார்களே தவிர, உடனடியாக நாட்டிற்குள் நுழையவில்லை. பாண்டவர்களின் கோரிக்கையை துரியோதனன் ஏற்க மறுக்கவே, குருட்சேத்திரப் போர் வெடிக்கிறது. போர் முடிந்த பிறகு, பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைகிறார்கள் என்றாலும் அந்தச் சூழல் அவ்வளவு மகிழ்ச்சியான சூழலாக இல்லை.
எனவே, மகாபாரதத்துடன் தொடர்புபடுத்தப்படும் இந்தக் கதை அவ்வளவு பிரபலமான கதையாகவோ பொருத்தமான கதையாகவோ இல்லை.
4. திருமகளின் வருகையைக் குறிக்கும் தீபாவளி
செல்வங்களின் கடவுளான லட்சுமிக்கு தீபாவளிக் கொண்டாட்டத்தில் முக்கியப் பங்கு இருக்கிறது. பல இடங்களில், லக்ஷ்மியின் பிறப்போடும் தீபாவளி தொடர்புபடுத்தப்படுகிறது. தேவலோகத்தில் இந்திரன் ஆணவத்துடன் செயல்படுவதால், லட்சுமி அங்கிருந்து நீங்கி, பாற்கடலில் தஞ்சமடைகிறாள்.
இதனால் எல்லா உலகங்களும் இருளில் மூழ்குகின்றன. இதையடுத்து, பாற்கடலைக் கடைந்து லக்ஷ்மியைத் தேட முடிவெடுக்கிறார்கள் தேவர்கள். அதன்படி ஆயிரமாண்டுகள் பாற்கடலைக் கடைந்த பின் லக்ஷ்மி ஒரு தாமரை மலரின் மீது அமர்ந்தபடி மீண்டும் தோன்றுகிறாள்.
இது ஒரு அமாவாசை தினத்தன்று நடக்கிறது என்று இக்கதை கூறுகிறது. இப்படி, செல்வத்தின் கடவுளான லட்சுமி, மீண்டும் தோன்றிய நாள், செல்வம் தங்களது இல்லத்திற்கு வரும் நாள் என்று கருதியும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
5. சீக்கிய மதத்திலும் தீபாவளி
சீக்கியர்களும் தீபாவளியை ஒரு குறிப்பிடத்தகுந்த நாளாகக் கொண்டாடுகின்றனர். சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான குரு ஹர்கோபிந்த்தையும், 52 இளவரசர்களையும் பேரரசர் ஜஹாங்கீர் சிறைபடுத்தினார். 1619-ஆம் ஆண்டு அக்டோபரில் அவரை விடுதலைசெய்ய முடிவெடுத்தபோது, 52 இளவரசர்களையும் விடுதலைசெய்ய குரு வலியுறுத்தினார்.
ஆனால், ஜஹாங்கீர் ஒரு நிபந்தனை விதித்தார். யாரெல்லாம் குரு ஹர்கோபிந்தின் ஆடையின் நுனியை பிடித்தபடி வெளிவர முடியுமோ அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறினார். இதையடுத்து, 52 நுனிகள் இருக்கும் வகையில் ஒரு ஆடையைத் தைத்து, அதனை இளவரசர்களை பிடித்துக்கொள்ளச் செய்தார் குரு ஹர்கோபிந்த். இதனால், அவர்களும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், தீபாவளி தினத்தன்று அமிர்தசரஸ் வந்தடைந்தனர். அவர்கள் வருகையைக் கொண்டாட பொற்கோவில் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இந்த நாளை ‘பந்தி சோர் தீவஸ்’ (Bandi Chhor Divas), அதாவது ‘விடுதலை நாள்’ என்ற பெயரில் குறிப்பிட ஆரம்பித்த சீக்கியர்கள், அந்த தினத்தை கோலாகலமாகக் கொண்டாடினர்.
6. ஜைன மதத்தில் தீபாவளி
ஜைன மதத்திலும் தீபாவளிப் பண்டிகை இருக்கிறது.
சமண மதத்தில் தீபாவளி என்பது 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த தினத்தைக் குறிக்கிறது.
வர்த்தமான மகாவீரர் தன் கடைசி நாட்களில் பாவாபுரி நகரில் தங்கியிருந்தார். இந்த பாவாபுரி என்பது தற்போதைய பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் இருக்கிறது. அங்கு தங்கியிருந்தபோது, அங்குள்ள மக்களுக்கு நீண்ட உரை ஒன்றை வழங்கினார்.
இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல் ஆங்காங்கே உறங்கிவிட்டனர். மகாவீரரும் தனது இருக்கையிலேயே வீடுபேறடைந்திருந்தார். இது கி.மு. 527 அக்டோபர் 15-ஆம் தேதி நடந்ததாக நம்பப்படுகிறது.
“பொழுதுவிடிந்ததும் விழித்துப் பார்த்த மக்கள் மகாவீரர் வீடுபேறடைந்திருந்ததை உணர்ந்தனர். தகவல் அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த அரசன் மற்ற அரசர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு ஞானஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும் பொருட்டு அந்த நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றிவைத்து விழா கொண்டாடும்படிச் செய்தான். மகாவீரர் விடியற்காலையில் வீடு பேறு அடைந்ததால்தான் தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது,” என்று தனது நூலில் குறிப்பிடுகிறார் ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி.
8-ஆம் நூற்றாண்டில் ஆச்சார்ய ஜீனசேனர் எழுதிய ஹரிவம்ச புராணத்தில்தான் தீபாவளியை ஒட்டிய சொல்லான ‘திபாலிகாய’ என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கிறது. ஜைனர்களைப் பொறுத்தவரை, புத்தாண்டு தீபாவளி தினத்தன்றே துவங்குகிறது. உலகம் முழுவதுமே தீபாவளி தினம் ஜைனர்களால் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.