இஸ்ரேல் தாக்குதலில் இரானில் எத்தகைய சேதம் ஏற்பட்டது? பதிலடி பற்றி இரான் கூறுவது என்ன?

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி
  • எழுதியவர், ஈடோ வோக்
  • பதவி, பிபிசி செய்திகள்

இரான் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இஸ்ரேலின் தாக்குதலுக்கு மிகவும் அளவான மறுமொழி கொடுத்துள்ளார். ‘உடனடியாக பதிலடி கொடுக்கப்படும்’ என்று சவால் விடுவதைத் தவிர்த்த அவர், அதே சமயம் இஸ்ரேலின் தாக்குதலைக் குறைத்து மதிப்பிடவோ, மிகைப்படுத்தவோ கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், இந்தத் தாக்குதலுக்கு இரான் ‘தக்க பதிலடி கொடுக்கும்’ என்று கூறினார். ஆனால் ‘இரான் போரை விரும்பவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் தாக்குதலில் குறைந்தது நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இரான் ஒப்புக் கொண்டுள்ளது.

இரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சனிக்கிழமை (அக்டோபர் 26) இரானின் பல இடங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்ததாக இஸ்ரேல் தரப்பு கூறியது. அக்டோபர் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27), இரானிய வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தயாரிப்பு அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாகக் கூறினார். இந்தத் தாக்குதல் “இரானின் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை கட்டமைக்கும் அமைப்புகளுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் - இரான்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘இஸ்ரேலின் கொள்கை இதுதான்…’

இந்தத் தாக்குதல் குறித்துப் பேசிய இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, “இரான் ஒரு எளிய கொள்கையைப் புரிந்து கொள்ள வேண்டும். யார் எங்களைக் காயப்படுத்துகிறார்களோ, அவர்களை நாங்கள் காயப்படுத்துவோம்,” என்று கூறினார்.

மறுபுறம், இரான் இந்தத் தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்னும் கூற்றை மறுத்துள்ளது. இஸ்ரேல் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன என்று இரான் கூறியுள்ளது. சில ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்பிற்குக் குறைவான சேதத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இரானின் உச்ச தலைவர் அலி காமனெயி, இஸ்ரேல் அக்டோபர் 26-ஆம் தேதி இரான் மீது நடத்திய தாக்குதலைக் குறிப்பிட்டு, “இரானிய மக்களின் பலம் மற்றும் விருப்பத்தை இஸ்ரேலிய ஆட்சிக்கு காட்டும் நேரமிது. அதை எவ்வாறு தெரிவிப்பது என்பதை அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும். நமது நாட்டின் நலன்களுக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று கேட்டு கொண்டார்.

இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனும் இதே போன்ற கருத்தை முன்வைத்தார். ஒரு அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அவர், “நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் எங்கள் தேசம் மற்றும் நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரான் தலைநகரைச் சுற்றியுள்ள இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபின், அக்டோபர் 26-ஆம் தேதி டெஹ்ரான் நகரம்

இஸ்ரேலின் தாக்குதல் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது?

இம்முறை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் எதிர்பார்த்ததை விட கட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்தன என்று சில வல்லுநர்கள் கூறிகின்றனர்.

எண்ணெய்க் கிடங்கு மற்றும் அணுசக்தி நிலையங்களைத் தாக்க வேண்டாம் என்று அமெரிக்கா இஸ்ரேலுக்கு பகிரங்கமாக அழுத்தம் கொடுத்தது. அமெரிக்காவின் ஆலோசனையை இஸ்ரேல் கருத்தில் கொண்டிருக்கிறது.

இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, ஞாயிற்றுக்கிழமை, “தாக்குதல் நடத்தப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு எங்களுக்குத் தகவல் கிடைத்தது,” என்று கூறினார்.

“அன்றிரவு தாக்குதல் நடத்தப்படும் சாத்தியங்கள் இருப்பதாக எங்களுக்கு மாலையில் சில தகவல்கள் கிடைத்தன,” என்று அப்பாஸ் அராக்ச்சி செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் அவர் மேற்கொண்டு அதை பற்றி விவரிக்கவில்லை.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டாம் என மேற்கத்திய நாடுகள் இரானிடம் கேட்டு கொண்டன. இரு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களை அது பெரிதுப்படுத்தும், பெரியளவிலான பிராந்தியப் போருக்கு வழிவகுக்கும் என்று கவலைத் தெரிவித்தன.

“இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பெரியளவில் சேதத்தை ஏற்படுத்தவில்லை. இரானில் மக்கள் அன்றாட வாழ்க்கையை எப்போதும் போல இயல்பாக தொடர்கின்றனர்,” என குறிப்பிட்டு இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இரானின் இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படங்களையும் பதிவிட்டுள்ளனர். அதாவது இஸ்ரேலியத் தாக்குதல் பெரிய சேதம் ஏற்படுத்தவில்லை என்பதை வெற்றியாக சித்தரிக்க ஊடகங்கள் நினைப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தொடரும் மோதல்கள்

லெபனானில் இஸ்ரேலுக்கும் இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலாவுக்கும், காஸாவில் இஸ்ரேலுக்கும் பாலத்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸுக்கும் இடையே மோதல்கள் தொடர்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27), தெற்கு லெபனானில் உள்ள சிடோன் நகரத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் கூறியது.

காஸாவில், அல்-ஷாதி அகதிகள் முகாமில் உள்ள பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பள்ளிக்கூடம் அகதிகள் தஞ்சம் புகும் இடமாக இருந்தது.

இறந்தவர்களில் மூன்று பேர் பாலத்தீன ஊடகவியலாளர்கள் என்று பாலத்தீனிய ஊடகங்களும், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளன.

மேலும் இஸ்ரேலில், டெல் அவிவ் நகருக்கு வடக்கே இஸ்ரேலிய ராணுவத் தளம் அருகே பேருந்து நிறுத்தத்தில் டிரக் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். இது தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேலில், டெல் அவிவ் நகருக்கு வடக்கே இஸ்ரேலிய ராணுவத் தளம் அருகே பேருந்து நிறுத்தத்தில் டிரக் மோதியது

நிரந்தரப் போர் நிறுத்தம் சாத்தியமா?

எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) காஸாவில் இரண்டு நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்தார். இந்த நடவடிக்கையில், சில பாலத்தீனிய கைதிகளுக்கு ஈடாக நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

இவ்வாறான ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை அமல்படுத்திய 10 நாட்களுக்குள், நிரந்தரமான ஒரு போர் நிறுத்தத்தை அடையும் நோக்கில் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆனால் பிபிசி-யின் அரபு சேவையிடம் பேசிய மூத்த ஹமாஸ் அதிகாரி சமி அபு சுஹ்ரி, போர் நிறுத்தத்திற்கான அதன் நிபந்தனைகள், இஸ்ரேலால் பல மாதங்களாக நிராகரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

சமி அபு சுஹ்ரி கூற்றுபடி, ஹமாஸ் அமைப்பு முழுமையான போர்நிறுத்தம், காஸாவில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறுதல் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஆகியவற்றை தொடர்ந்து கோரி வருகிறது என்றார்.

“இந்த நிபந்தனைகளுக்கு உத்தரவாதம் அளிக்காத எந்த ஒப்பந்தமும் எந்த மதிப்பையும் கொண்டிருக்காது,” என்றும் அவர் கூறினார்.

2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸின் முன்னறிவிப்பில்லாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஹமாஸை அழிக்க இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

அன்றிலிருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42,924-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு