யாழ்ப்பாணம் – இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு முன்பு இன்றையதினம் மாலை நிறைவெறியில் பொலிஸ் முச்சக்கரவண்டியில் சென்ற இரண்டு பொலிஸார் காரை பின்பக்கமாக மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும், குறித்த பகுதியில் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது நிலத்தில் நிறைவெறியில் உருண்டு பிரண்டு கத்திக் குளறியபடி இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொலிஸாரால் விபத்துக்கு உள்ளான கார் சான் ரூறிஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது எனத் தெரியவருகின்றது.
குறித்த காரை வாடகைக்கு ஒருவர் எடுத்துச் சென்ற போதே பொலிஸார் முச்சக்கரவண்டியில் நிறைவெறியில் சென்று காரை இடித்துத் தள்ளியுள்ளனர்.
இந்தநிலையில் அங்கு மக்கள் கூடத் தொடங்கவே அவர்களை இரண்டு பொலிஸாரும் அச்சுறுத்தி தள்ளாடித் தள்ளாடி நிலத்தில் உருண்டு பிரண்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த இரண்டு பொலிஸாரும் கடமையாற்றும் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்த சிவில் உடைதரித்த பொலிசார் பொதுமக்களை அங்கிருந்து அகற்ற முற்பட்டதுடன் கார் உரிமையாளருடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்தி வீதியில் அட்டகாசம் செய்த பொலிஸாரை உடனடியாக அங்கிருந்து அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.