டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்தின் சான்ட்னருக்கு சி.எஸ்.கே உதவியதா?

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

முழுநேர டெஸ்ட் பந்துவீச்சாளராக இல்லாத போதும், சமீபத்தில் புனேவில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற மிட்செல் சான்ட்னர் முக்கியப் பங்காற்றினார். 69 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி உள்ளது.

நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரிக்குப் பின் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக மிட்செல் சான்ட்னர் புகழ்பெற்றுள்ளார்.

உண்மையில் டேனியல் வெட்டோரி ஓய்வு பெற்றபின் நியூசிலாந்து அணியில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால் அணியில் சேர்க்கப்பட்டவர் சான்ட்னர்.

ஆனால், அவரிடம் இருந்து பெரிய அளவிலான ஆகச்சிறந்த பந்துவீச்சு வெளிப்படவில்லை என்பதால், அவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில்கூட நியூசிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல்லை எடுக்கவே அந்த அணியின் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. மேலும், ப்ளேயிங் லெவனில் அஜாஸ் படேல், பிரேஸ்வெலுக்குதான் முக்கியத்துவம் அளிக்க முடிவுசெய்திருந்தது.

ஆனால், சொந்தப்பணி காரணமாக பிரேஸ்வெல் தொடரில் இடம் பெறமுடியாததால் சான்ட்னர் ப்ளேயிங் லெவனில் நியூசிலாந்து அணிக்குள் வந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

யார் காரணம்?

ஆசிய நாடுகளில் கிரிக்கெட் தொடருக்காக நியூசிலாந்து அணி பயணம் செய்யத் தொடங்கிய பின்புதான் சான்ட்னரின் பந்துவீச்சுத் திறமை மெருகேறி, அவரைச் சிறந்த பந்துவீச்சாளராக அடையாளம் காட்டியது.

சான்ட்னரின் பந்துவீச்சில் திடீரென ஏற்பட்ட முன்னேற்றம், நுணுக்கம், துல்லியம் ஆகியவை மெருகேற இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஒருவரும், ஐ.பி.எல் டி20 தொடரும், சி.எஸ்.கே அணியும்தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிட்செல் சான்ட்னர்

புனே டெஸ்ட்: முன்பும்- பின்பும்

குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான புனே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, சான்ட்னர் டெஸ்ட் அரங்கில் ஒருமுறைகூட ஒரே இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. சான்ட்னரின் அதிகபட்சமே ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள்தான்.

உள்நாட்டுப் போட்டிகளிலும் ஒருமுறைதான் சான்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். புனே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக சான்ட்னரின் பந்துவீச்சு சராசரி 42.16 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 91.60 ஆகவும் இருந்தது.

இலங்கை சென்றிருந்த நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை இழந்துதான் இந்தியாவுடன் களமிறங்கியது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்கூட சான்ட்னர் வெகு சிறப்பாக பந்து வீசவில்லை. கல்லே டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டுமே சான்ட்னர் வீழ்த்தியிருந்தார்.

ஆனால், புனேவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப்பின் ஒரே டெஸ்டில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, முத்தையா முரளிதரன், மறைந்த ஷேன் வார்ன், சக்லைன் முஸ்தாக், நேதன் லயன் ஆகியோரின் சாதனைக்கு இணையாக சான்ட்னர் உள்ளார்.

ஆனால் புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னரின் டெஸ்ட் வாழ்க்கையே தலைகீழாக மாறி, அவரது பந்துவீச்சுக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது. புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னரின் பந்துவீச்சு சராசரி 36.32 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 78.2 ஆகவும் மெருகேறியுள்ளது.

ஒருமுறைகூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தாத சான்ட்னர் புனே டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகள் என 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, இரு 5 விக்கெட்டுகள் சாதனையைப் படைத்துள்ளார்.

3 நாட்களில் ‘தேசிய ஹீரோ’

நியூசிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் லான் ஸ்மித் வர்ணனையின்போது கூறுகையில் “புனேவில் நடந்த 3 நாட்கள் டெஸ்ட் போட்டிக்குப்பின் நியூசிலாந்தின் தேசிய ஹீரோவாக சான்ட்னர் மாறிவிட்டார்,” என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

கடினமான இந்திய ஆடுகளம்

சான்ட்னரின் பந்துவீச்சில் திடீரென இந்த முன்னேற்றம் ஏற்படுவதற்கு ஒரு விதத்தில் ஐ.பி.எல் டி20 தொடரும், இந்தியப் பந்துவீச்சாளர்களும், சி.எஸ்.கே அணியும் காரணமாகியுள்ளது என்பதை சான்ட்னரே பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் அனைத்தும் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டவை. இங்கு வந்து வெளிநாட்டு சுழற்பந்துவீச்சாளர் சாதிப்பது கடினம்தான். ஏனென்றால் ஆடுகளத்தின் தன்மை, எவ்வாறு பந்துவீசுவது, எந்த வேகத்தில் வீசுவது, பந்துவீச்சில் எத்தகைய மாறுபாட்டை வெளிப்படுத்துவது என்பதைத் தெரிந்து பந்துவீச வேண்டும்.

இதற்கு முந்தைய காலங்களில் மிகச்சில வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள்தான் இந்திய மண்ணில் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்துள்ளனர். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், மெக்கஃபே, நேதன் லயன், ஸ்வான், சக்லைன் முஸ்தாக் என சிலர்தான் சிறப்பாகப் பந்துவீசியுள்ளனர். மற்றவகையில் அனுபவமற்ற சுழற்பந்துவீச்சாளர்களால் இந்திய மண்ணில் சாதிப்பது கடினம்.

ஆனால், இந்தியாவில் ஒரே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சான்ட்னர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்திருப்பது கிரிக்கெட் ஜாம்பவான்களை வியப்படைய வைத்துள்ளது.

இந்திய ஆடுகளங்களின் தன்மையை வெகு எளிதாக சான்ட்னர் அறிந்து கொள்ள அவருக்கு ஐ.பி.எல் தொடரும், சி.எஸ்.கே அணியில் எடுத்த பயிற்சியும், ஐ.பி.எல் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்களுடன் ஏற்பட்ட பழக்கமும் காரணமாகியுள்ளது.

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - கிரிக்கெட்

பட மூலாதாரம், instagram/mitchsantner

ஐ.பி.எல், சி.எஸ்.கே எப்படி உதவின?

‘கிரிக்இன்போ’ இணையதளத்துக்கு சான்ட்னர் அளித்த ஒரு பேட்டியில், “ஒரு சிறந்த சுழற்பந்துவீச்சாளராக நான் உருமாறுவதற்கு எனக்கு ஐ.பி.எல் டி20 தொடர் வெகுவாக உதவியது. சி.எஸ்.கே அணியில் நான் இடம் பெற்றபோது அதில் இருந்த ஹர்பஜன் சிங், ரவிந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோரின் நட்பும் அவர்களின் பந்துவீச்சு நுணுக்கமும் என் பந்துவீச்சை மெருகேற்ற உதவியது,” என்று தெரிவித்தார்.

“இந்திய ஆடுகளங்களைப் பற்றி பெரிதாகத் தெரியாது. ஆனால், ஐ.பி.எல் தொடரில் ஆடியபின் இந்திய ஆடுகளங்களின் தன்மையை நான் புரிந்துகொண்டேன். அதற்கு ஏற்றாற்போல் பந்துவீச்சை மாற்ற முடிந்தது. குறிப்பாக நான் கேரம்பால் பந்துவீச்சை அஸ்வின் பந்துவீச்சு முறையைப் பார்த்துதான் கற்றுக்கொண்டேன்,” என்று தெரிவித்தார்.

யார் அந்த இலங்கை வீரர்?

அது மட்டும்லலாமல் ஆசியாவில் வங்கதேசம், இலங்கை, இந்தியா போன்ற அணிகளுடன் விளையாட நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் சென்று விளையாடத் துவங்கியதிலிருந்து அந்த அணிக்குப் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன்னா ஹிராத் நியமிக்கப்பட்டார்.

ஹிராத்தின் ஏராளமான ஆலோசனைகள், அவர் கற்றுக்கொடுத்த நுணுக்கங்கள் ஆகியவை சான்ட்னரின் பந்துவீச்சு மெருகேறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கிறது. புனே டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை ஃபுல் டாஸில் ஆட்டமிழக்கச் செய்யக்கூட ஹிராத்தின் ஆலோசனையில் வீசப்பட்ட பந்துவீச்சுதான் காரணம் என்று சான்ட்னர் தெரிவித்துள்ளார்.

புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னர் அளித்த பேட்டியில் “என்னுடைய சுழற்பந்துவீச்சு மெருகேறியதற்கு ஹிராத்தின் ஆலோசனை முக்கியக் காரணம். ஹிராத் உண்மையில் சிறந்த பந்துவீச்சாளர். பந்துவீச்சில் எவ்வாறு வேகக்தைக் குறைப்பது, ஒவ்வொரு பந்திலும் வேகத்தில் மாறுபாட்டை எவ்வாறு கொண்டுவருவது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தார்,” என்றார்.

“புனே டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் இதேபோன்று பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்துப் பந்துவீசிய முறையைக் கண்டேன். அதேபோன்று ஹிராத்தும் கற்றுக்கொடுத்தது எனக்கு உதவியது. விராட் கோலியை ‘ஃபுல் டாஸில்’ ஆட்டமிழக்கச் செய்ய நான் பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்து வீசியது காரணம். இந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தது ஹிராத் தான்,” எனத் தெரிவித்துள்ளார்.

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

வெட்டோரிக்குப்பின் கிடைத்த அடையாளம்

இந்தியத் தொடருக்கு சான்ட்னர் வருவதற்கு முன்புவரை பெரிதாக அறியப்படாத வீரராகவும், பந்துவீச்சாளராகவும் இருந்தார். ஆனால் ஒரே டெஸ்டில் உச்சத்துக்கு சென்றுவிட்டார்.

கடந்த 1992-ஆம் ஆண்டு, பிப்ரவரி 5 ஆம் தேதி ஹேமில்டன் மாகாணத்தில் வைகடோ நகரில் மிட்செல் சான்ட்னர் பிறந்தார். சிறுவயதிலிருந்தே பந்துவீச்சு, பேட்டிங்கில் தீவிரமாகப் பயிற்சி எடுத்த சான்ட்னர், பந்துவீச்சு ஆல்ரவுண்டராகவே வளர்ந்தார். கிரிக்கெட் விளையாடாத நாட்களில் கோல்ஃப் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

2011-ஆம் ஆண்டிலிருந்து நியூசிலாந்து வடக்கு மாவட்ட கிரிக்கெட் அணிகளில் சான்ட்னர் விளையாடி வந்தார். 2014-15 ஆம் ஆண்டில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் சான்ட்னரின் ஆட்டம் வெகுவாக பாராட்டப்பட்டதையடுத்து, நியூசிலாந்தின் தேசிய அணிக்குள் இடம் பெற்றார்.

2015-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் டேனியல் வெட்டோரி ஓய்வு பெற்றபின், இடதுகை சுழற்பந்துவீச்சாளரை அந்த அணி தேடிக்கொண்டிருந்தபோது, சான்ட்னர் அடையாளம் காணப்பட்டு அவர் அணியில் சேர்க்கப்பட்டார்.

முதல்முறையாக 2015-ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்துக்கான நியூசிலாந்து அணியில் சான்ட்னர் அறிமுகமாகி ஆக்டோபர் 24-ஆம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினார். அதற்குமுன்பாக உள்நாட்டில் சோமர்செட் கவுன்டி அணிக்கு எதிராக சான்ட்னர் 94 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து நிர்வாகத்துக்கு வெகுவாக நம்பிக்கையளித்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சான்ட்னர் விளையாட வாய்ப்புக் கிடைத்தது.

சர்வதேசப் போட்டியில் சான்ட்னர் விளையாடுவதற்கு முன்பாக அவர் 19 முதல்தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாம் பில்லிங்ஸ் விக்கெட்டை வீழ்த்தி சான்ட்னர் முதல் சர்வதேச விக்கெட்டை எடுத்தார். நான்காவது ஒருநாள் போட்டியில் அதில் ரஷித் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - கிரிக்கெட்

பட மூலாதாரம், instagram/mitchsantner

படக்குறிப்பு, 2018-இல் முழங்காலில் ஏற்பட்ட காயம், அறுவை சிகிச்சையால் சான்ட்னர் சிஎஸ்கே அணியில் விளையாட முடியாமல் போனது.

பகலிரவு டெஸ்டில் அறிமுகம்

இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் சான்ட்னர் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. அதே 2015-ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவுடெஸ்ட் போட்டியில் சான்ட்னர் அறிமுகமாகினார். டெஸ்ட் வரலாற்றில் ஒரு வீரர் பகலிரவு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியது இதுதான் முதல்முறையாகும்.

அதன்பின் நியூசிலாந்தின் நேதன் மெக்கலம், ஜீத்தன்படேல், அஜாஸ் படேல் ஆகியோருடன் சேர்ந்து சுழற்பந்துவீச்சு வீசும் வாய்ப்பும் சான்ட்னருக்கு கிடைத்தது. இருப்பினும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சான்ட்னரின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை, வெற்றி நாயகனாக வலம்வர முடியாமல் பெரிதும் அறியப்படாத வீரராகவே இருந்து வந்தார்.

ஐ.பி.எல் அறிமுகம்

இதனிடையே 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி 50 லட்சம் ரூபாய்க்கு சான்ட்னரை வாங்கியது. ஆனால் அந்த ஆண்டில் முழங்காலில் ஏற்பட்ட காயம், அறுவை சிகிச்சையால் சான்ட்னர் சி.எஸ்.கே அணியில் இடம் பெற்று விளையாட முடியாமல் போனது. அதன்பின் சிஎஸ்கே அணியில்தான் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

குறிப்பாக 2019-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடைசிப்பந்தில் சிக்ஸர் அடித்து சி.எஸ்.கே அணியை சான்ட்னர் வெற்றி பெறவைத்த ஆட்டமும், இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2 விக்கெட் வீழ்த்தியதும் அவரை பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றது.

சான்ட்னர் தனக்கு பேட்டிங் செய்யக் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியதில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாட்லிங்குடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சான்ட்னர் முதல்முறையாக சர்வதேச டெஸ்ட் சதத்தை எட்டினார். 7-வது விக்கெட்டுக்கு வாட்லிங், சான்ட்னர் 261 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணியின் அதிகபட்ச 7-வது விக்கெட் ரன் குவிப்பு என்ற சாதனையைப் புரிந்தனர்.

இதுவரை டெஸ்ட் போட்டியில் சான்ட்னர் ஒரு சதம், 3 அரைசதங்கள் உள்பட 941 ரன்களும், ஒருநாள் போட்டியில் 3 அரைசதங்கள் உள்பட 1,355 ரன்களும், டி20 போட்டியில் ஒரு அரைசதம் உள்பட 675 ரன்களும் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சான்ட்னர் 67 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 107, டி20 போட்டியில் 115 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

புனே டெஸ்ட் போட்டிக்கு முன்புவரை பெரிதும் அறியப்படாத வீரராக இருந்த சான்ட்னரை உலகம் அறியச் செய்த பங்கு இந்திய வீரர்களுக்கும், ஐ.பி.எல், சி.எஸ்.கே அணியினருக்கும் இருக்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.