தவறி விழுந்த செல்போனை எடுக்க முயன்று பாறை இடுக்கில் தலைகீழாக சிக்கிய பெண் – என்ன ஆனார்?
- எழுதியவர், ஃப்ளோரா ட்ரூரி
- பதவி, பிபிசி நியூஸ்
ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் நடைபயணம் சென்ற போது கீழே விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது, இரு பாறைகளுக்கு நடுவே பல மணிநேரம் தலைகீழாக சிக்கிக்கொண்டார்.
மெட்டில்டா கேம்பெல் எனும் அப்பெண் இம்மாத தொடக்கத்தில் நியூ சௌத் வேல்ஸ் ஹண்டர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்து சென்ற போது, பாறை இடுக்கில் தவறி விழுந்தார்.
அவரை சுமார் ஏழு மணிநேரம் போராடி மீட்க வேண்டியிருந்தது. பாறைகளை நகர்த்துவது உட்பட “சவாலான” மீட்புப்பணிகளை அவசர சேவை பிரிவினர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
500 கிலோ எடையுள்ள பாறையை வெளியே எடுத்த போதிலும், அப்பெண் சிக்கியிருந்த “எஸ்” வடிவிலான வளைவிலிருந்து அவரை மீட்க மேலும் பல பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
லேசான காயங்களுடன் பெண் மீட்பு
“மீட்புப்பணி மருத்துவ உதவியாளராக என்னுடைய 10 ஆண்டுகால பணி வாழ்க்கையில், இப்படியொரு அனுபவத்தை சந்தித்ததில்லை. இப்பணி சவாலான, ஆனால் மனநிறைவு தருகிற பணியாக இருந்தது,” என நியூ சௌத் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவையின் மருத்துவ உதவியாளர் பீட்டர் வாட்ஸ் தெரிவித்தார். அச்சேவையின் சமூக ஊடக பக்கங்களில் வெளியான அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பெண் தலைகீழாக இருந்துள்ளார். அவரை மீட்பதற்கு அவரின் நண்பர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
ஆம்புலன்ஸ் சேவை பகிர்ந்துள்ள புகைப்படங்கள், அப்பெண் தலைகீழாக பாறைகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்ததையும், பாறைகளுக்கு நடுவே பெரிய இடைவெளியை உண்டாக்கி, அவரை மீட்க அவசர சேவை குழுவினர் மேற்கொண்ட சிக்கலான முயற்சிகளையும் காட்டுகின்றன.
அப்பெண் ஒரு “குதிரைப்படை வீரர்” (trooper) என, ஆஸ்திரேலியாவின் ஏபிசி ஊடகத்திற்கு வாட்ஸ் அளித்த பேட்டியில் விவரித்துள்ளார்.
“அங்கு எப்படி அந்த பெண் சென்றார், அவரை எப்படி மீட்கப் போகிறோம் என்பதுதான் எங்கள் எல்லோருடைய கேள்வியுமாக இருந்தது?” என்று அவர் கூறியுள்ளார்.
நம்ப முடியாத வகையில், அப்பெண் லேசான கீறல்கள் மற்றும் காயங்களுடன் மீட்கப்பட்டதாக என்.எஸ்.டபிள்யூ ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டாலும் அவரது செல்போனை மீட்க முடியவில்லை.
“என்னை காப்பாற்றிய குழுவினருக்கு நன்றி, அவர்கள் உண்மையிலேயே உயிர் காப்பாளர்கள்,” என அப்பெண் இணையம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
“ஆனால், என்னுடைய செல்போனை மீட்க முடியாதது துரதிருஷ்டவசமானது.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு