உயிர்த்த ஞாயிறு விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுமந்திரன் வேண்டுகோள் ! on Sunday, October 27, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் சம்பந்தமான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை, ஜனத் டிசில்வா தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கை, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
உதயகம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் அறிக்கைகளின் உள்ளடக்கம் சம்பந்தமாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் சம்பந்தமாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்தவராக விசாரணைகளில் பங்கேற்றிருந்தேன்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையானது அந்த நேரத்தில் காணப்படுகின்ற தரவுகளை மையப்படுத்தியே தயாரிக்கப்பட்டிருந்தது. ஆகவே, மேலதிக விசாரணைகள் அவசியமாக இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.
அதனை விட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனத் டி சில்வா தலைமையிலான அறிக்கையும் நியாயமானதாகவே இருக்கிறது.
மேலும், உயிர்த்த ஞாயிறு சம்பவம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றும் உள்ளது. ஆகவே, குறித்த மூன்று விடயங்கள் சம்பந்தமாக எனக்கு எவ்விதமான முரண்பாடுகளும் தெரியவில்லை.
அவ்வாறான நிலையில் உதய கம்மன்பில குறிப்பிடுகின்ற இரண்டு அறிக்கைகளும் அவசர அவரசமாக தயாரிக்கப்பட்டுள்ளதைப் போன்றே தெரிகின்றது. ஏதோவொரு காரணத்துக்காக தயாரிக்கப்பட்டதைப் போன்றும் தென்படுகிறது.
ஆகவே குறித்த இரண்டு அறிக்கைகளையும் தவிர்த்து உயர் நீதிமன்றம், பாராளுமன்றத் தெரிவுக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியவற்றை அமுல்படுத்தினாலே தாக்குதலின் சூத்திரதாரிகளையும் உடந்தையானவர்களையும் கண்டறிய முடியும். அதன் பின்னர், நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.