மதுரை: கனமழையால் வீடுகளில் வெள்ளம் – பராமரிப்பின்றி கிடக்கும் பிரதான கால்வாய்கள்

மதுரை, கனமழை

  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

மதுரை நகரில் கடந்த 25ஆம் தேதி 15 நிமிடங்களில் 45 மி.மீ., என்ற அளவில் அதி கனமழை பதிவானது. இதனால் பல குடியிருப்புகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் வெள்ள நீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்து மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், எதிர் வரும் காலங்களில் அதீத மழை பெழிவு ஏற்பட்டால் வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை மாநகராட்சியில் அதிகனமழை என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது? வெள்ளநீர் புகுந்த குடியிருப்புகளின் தற்போதைய நிலை என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மதுரையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அதி கனமழை

மதுரையில் கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. காலை நேரத்தில் வெயில் இருந்தாலும் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் தல்லாகுளத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ., மழை பதிவாகி இருந்தது.

தொடர்ந்து தினமும் மழை பெய்தாலும், இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கைகளின்படி, வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை பல கட்டங்களாகப் பெய்த மழையால் 98 மி.மீ., மழை பதிவானது. குறிப்பாக அன்றைய தினம் மதுரை நகரில் 15 நிமிடத்தில் 45 மி.மீ., மழை பதிவானது.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) பெய்த கன மழையால் சாலை ஓரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நான்காவது வார்டு பார்க் டவுன் குடியிருப்பை மழைநீர் சூழ்ந்தது. ஆலங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டது.

மதுரை, கனமழை

படக்குறிப்பு, மதுரையின் பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது

இதனால், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக சர்வேயர் காலனி, ஒத்தக்கடை, காந்தி நகர் பகுதியில் மழை நீர் வீடுகளைச் சூழ்ந்துள்ளது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய அதிகனமழை பதிவாகி உள்ளதாக மதுரை மக்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜகம்பீரம், கொடிக்குளம் கண்மாய்களுக்குச் செல்லும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு அறிக்கை

மதுரையில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு தொடர்பாக தமிழக அரசு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “மதுரையில் கனமழை பெய்ததை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, கனமழை

படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது

மேலும், “பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளவும், களத்திற்குச் சென்று சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் மற்றும் சங்கீதாவிற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்,” என்று அந்த அறிக்கையில் தமிழக அரசு கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் வடியத் துவங்கியுள்ள நிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஊழியர்கள் வடிகால் மற்றும் கண்மாய்களில் குப்பைகளை அகற்றி அடைப்புகளைச் சரி செய்து தண்ணீர் வடிவதற்கு ஏற்பாடு செய்து வருவதுடன், தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

‘பந்தல்குடி கால்வாய்க்கு இருபுறமும் சுற்றுச்சுவர் தேவை’

மதுரை, கனமழை

இதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் செல்லூர் பகுதியில் பெய்த மழையால் நீர் தேங்கியதாகக் கூறுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த சங்கர பாண்டியன்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், மதுரையில் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குத் துவங்கி இரவு 7 மணி வரை தொடர்ந்து அதி கனமழை பெய்தது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை விட்டு விட்டுப் பெய்தது.

இதனால் செல்லூர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் தண்ணீர் புகுந்து பழுதடைந்துள்ளது.

வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் முதியவர்கள் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இன்னும் தீபாவளி பண்டிகைக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் கடைகளுக்குள் நீர் புகுந்ததால் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மழை நீரில் சேதம் அடைந்தன.

கடந்த 1993ஆம் ஆண்டு, அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல் மழை பெய்து செல்லூர் கண்மாய் உடைந்து பெரியளவிலான உயிரிழப்புகளும் பொருள் சேதங்களும் ஏற்பட்டன. அதன் பிறகு நேற்று பெய்த அதீத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

கனமழையால் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செல்லூர், சர்வேயர் காலனி, புதூர், தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் முடக்கத்தான், ஆனையூர், சிலையனேரி உள்ளிட்ட சிறிய கண்மாய்கள் நிறைந்து செல்லூர் பெரிய கண்மாய்க்கு உபரி நீர் பாய்ந்து பந்தல்குடி கால்வாய் வழியாக வைகை ஆற்றில் சேரும்.

மதுரை, கனமழை

படக்குறிப்பு, மதுரையில் நீர் தேங்கி நிற்கும் ஒரு குடியிருப்புப் பகுதி

இதற்காக அரை கிலோமீட்டர் தூரம் நீளமான கால்வாய்கள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கால்வாய் பகுதி முறையாகத் தூர்வாரப்படாததால், பொதுமக்கள் கால்வாயில் குப்பைகளைக் கொட்டுவதால் குப்பை மேடாக மாறி கால்வாய் பரப்பளவு குறைந்து மழை நீர் செல்ல முடியாமல் செல்லூர் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது.

செல்லூர் கண்மாயை தூர்வாரி பராமரிக்க முதலில் ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவிக்கபட்டு பின் நிதித் தொகை ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டு, பின் அந்தத் தொகையையும் உயர்த்தி தற்போது ரூ.120 கோடி நிதி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது வரை நிதி ஒதுக்கப்படவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

செல்லூர் கண்மாயைத் தூர்வாரி இருபுறங்களும் சுற்றுச்சுவர் அமைத்து பந்தல்குடி கால்வாய்க்குச் செல்லும் வழித்தடத்தில் உள்ள குப்பைகளை அகற்றி வைகை ஆற்றில் மழை நீர் சேர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

செல்லூர் கண்மாய்க்கு ஒருபுறம் பந்தல்குடி கால்வாய் இருப்பதைப் போன்று மறுபுறம் கால்வாய் அமைப்பதற்கான பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்லூர் தாகூர் நகர் பகுதியில் நடைபெற்றது. ஆனால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி கைவிடப்பட்டது.

எனவே செல்லூர் கண்மாய்க்கு மறுபுறம் கால்வாய் அமைக்க உடனடி நடவடிக்கை எடுத்தால் எதிர் வரும் காலங்களில் மழை நீர் தேங்குவதால் செல்லூர் பகுதியில் பாதிப்பு ஏற்படாது என்கிறார் சங்கர பாண்டியன்.

பராமரிப்பில்லாமல் கிடக்கும் பிரதான கால்வாய்கள்

மதுரை, கனமழை

படக்குறிப்பு, சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

பிரதான கால்வாய்கள் முறையாக தூர்வாரப் படாததால் மழை நீர் வடிய வழியின்றி செல்லூர் உள்ளிட்ட மதுரை வடக்குப் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார் மதுரை மாநகராட்சி மன்றத்தின் அ.தி.மு.க குழுத் தலைவரான சோலை எம்.ராஜா.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராஜா, மதுரையில் பந்தல்குடி, கிருதுமால், சிந்தாமணி, வண்டியூர் உள்ளிட்ட 17 பிரதான கால்வாய்கள் உள்ளன, என்றார்.

“இந்தப் பிரதான கால்வாய்கள் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தூர்வாரப்படாததால் வெள்ளிக்கிழமை பெய்த மழை நீர் செல்லூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் முழுமையாகத் தேங்கியுள்ளது,” என்றார்.

“இதுகுறித்துப் பல முறை மாமன்றக் கூட்டத்தில் தான் எடுத்துரைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தூர்வாருவதற்கு ஜே.சி.பி இயந்திரங்களைப் பயன்படுத்தினார்,” என்றார்.

மதுரை, கனமழை

பட மூலாதாரம், Solai M Raja

படக்குறிப்பு, மதுரை மாநகராட்சி மன்றத்தின் அ.தி.மு.க குழுத் தலைவரான சோலை எம்.ராஜா

மேலும், “ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு கால்வாயின் ஒருசில இடங்களில் தேங்கியிருந்த குப்பைகள், ஆகாயத் தாமரை உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் ஜே.சி.பி இயந்திரத்தால் முழுமையாகத் தூர்வார முடியாது. ஹிட்டாச்சி இயந்திரத்தைக் கொண்டு தூர்வாரும் பணி செய்தால் மட்டுமே பிரதான கால்வாய்களை முழுமையாகத் தூர்வார முடியும். ஆனால் ஹிட்டாச்சி இயந்திரம் மதுரை மாநகராட்சியில் இல்லாததால் தூர்வாரும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது,” என்றார்.

“மேலும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் முறையாக வீடுகளில் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் சேகரிக்காததால் வீடுகளில் பயன்படுத்தும் குப்பைகளை பொது மக்கள் வீட்டுக்கு எதிரே உள்ள வாய்க்கால்களில் வீசில் செல்கின்றனர். அந்தக் குப்பைகள் நீர் வழித்தடங்களில் தேங்கி தண்ணீர் போக முடியாமல் தடுத்துள்ளது,” என்றார்.

மேலும் பேசிய அவர், “அதே போல் ஒவ்வொரு நகர் பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால் கால்வாயில் அடைத்துள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சியில் போதுமான தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால் அகற்றபடாமல் உள்ளன. இதனால் மழை நீர், வடிகால் வழியாக குளம், குட்டை உள்ளிட்டவற்றுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது,” என்றார் ராஜா.

மாநகராட்சி ஆணையர் சொல்வது என்ன?

மதுரை, கனமழை

படக்குறிப்பு, சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார் மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார்.

போர்க்கால அடிப்படையில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு மழைநீர் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகள் சரி செய்யப்பட்டு தண்ணீர் வடிந்து வைகை ஆற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், “தண்ணீர் வடியத் துவங்கியதால் குடியிருப்புப் பகுதியில் தேங்கியிருந்த தண்ணீர் குறைந்து, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். மழைக் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க மதுரையில் உள்ள 16 பிரதான கால்வாய்கள் ஹிட்டாச்சி இயந்திரங்களைக் கொண்டு குப்பைகளை அகற்றும் மற்றும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது,” என்றார்.

மழைநீர் வடிகாலில் உள்ள அடைப்புகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து நடைபெற்று வருவதால் மதுரையில் கன மழை பெய்தும் பல இடங்களில் மழை நீர் தேங்கவில்லை எனக் கூறிய தினேஷ் குமார், “இதில் செல்லூர் கண்மாயில் உள்ள பந்தல்குடி கால்வாய் தூர்வாருவதற்கு நடைமுறைச் சிக்கல் இருந்ததால் மழை நீர் குடியிருப்புகளுக்குள் தேங்கி, வெளியேற முடியாமல் சிரமம் ஏற்பட்டது. தற்போது அந்தச் சிக்கல் சரி செய்யப்பட்டு தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் தண்ணீர் வடிந்து வைகை ஆற்றில் கலந்து வருகிறது,” என்றார்.

பொது மக்கள் வடிகால், கால்வாய்களில் குப்பை கொட்டுவதைத் தடுப்பது மதுரை மாநகராட்சிக்கு பெரிய சவாலாக இருப்பதாகவும், குப்பைகளைச் சேகரிப்பதற்காக மாநகராட்சி கூடுதலாக 350 வாகனங்களைப் பயன்படுத்தி வருவதுடன், கூடுதலாக லாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிப்பதாகவும் கூறுகிறார் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார்.

இதுதொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்’

மதுரை, கனமழை

படக்குறிப்பு, மழைநீர் தேங்கியிருக்கும் பகுதியை ஆய்வு செய்யும் அதிகாரிகள்

இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு அமைச்சர்கள் முகாமிட்டுப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், “மொத்தம் 8 இடங்களில் மட்டுமே மழை நீர் சூழ்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன,” எனவும் தெரிவித்திருந்தார்.

அமைச்சர்கள் ஆய்வு

மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்த பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளரிடம் பேசுகையில், மதுரை வடக்குப் பகுதியில் கடந்த 10 நாட்களாகப் பெய்த கனமழையால் அங்குள்ள கண்மாய்கள் நிறைந்து வைகை ஆற்றை நோக்கி வருவதால் மழை நீர் தேங்கியுள்ளது, என்றார்.

மேலும், கண்மாய்களில் இருந்த வரும் தண்ணீரை ஆற்றில் கலப்பதற்கு புதிய மாற்று வழிகள் செய்யப்பட்டுள்ளதால் மக்களுக்குச் சேதம் ஏற்படாது என்றார்.

“தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கண்மாய்கள் நிறைந்து தண்ணீர் வருவதால் மதுரையில் மழை நின்றாலும் உபரி நீர் வரத்து அதிகமாக இருப்பதால் குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழை நீர் முற்றிலுமாக வடிய மூன்று நாட்களுக்கு மேலாகும்,” என்றார்.

அதோடு, “பந்தல்குடி கால்வாய்க்கு வரும் தண்ணீரின் அளவைக் குறைப்பதற்கு மாற்று வழியில் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளதால் படிப்படியாக கால்வாய்க்கு வரும் தண்ணீர் வரத்து குறையும்,” என்றும் கூறினார்.