இந்தியாவின் உலக சாதனைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி – நியூசிலாந்து வரலாற்று வெற்றியை பெற்றது எப்படி?
- எழுதியவர், போத்திராஜ். க
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
புனேவில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 113 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமிருக்கும் நிலையிலேயே இரண்டாது டெஸ்ட போட்டி முடிவுக்கு வந்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களும், இந்திய அணி 156 ரன்களும் சேர்த்தன. நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி, 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 359 ரன்கள் இலக்கோடு இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி, 245 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்கறு நியூசிலாந்து அணி புதிய வரலாறு படைத்துள்ளது.
இந்தியாவுக்கு 359 ரன் இலக்கு
நியூசிலாந்து அணி நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து, 301 ரன்கள் என பெரிய முன்னிலை பெற்றிருந்தது. டாம் பிளென்டல் 30 ரன்னிலும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். டாம் பிளென்டன் 41 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இதைத் தொடர்ந்து கடைசிவரிசை பேட்டர்களான சான்ட்னர் (4), சவுத்தி (0), அஜாஸ் படேல் (1), ரூர்கே (0) என வரிசையாக ஜடேஜா, அஸ்வின், சுந்தர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். காலை தேநீர் இடைவேளைக்கு முன்பாகவே நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, இந்திய அணிக்கு 359 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
டி20 போல் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால்
359 ரன்கள் இலக்கைத் துரத்த இந்திய அணிக்கு 3 நாட்கள் வரை அவகாசம் இருந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா இருவரும் இந்திய அணியின் இன்னிங்சைத் தொடங்கினர். ரோகித் சர்மா நிதானமாக பேட் செய்ய, ஜெய்ஸ்வால் அதிரடியாக ரன்களைச் சேர்த்தார். நிதானமாக ஆட முயன்றாலும் ரோகித் சர்மாவால் நீண்டநேரம் நிலைக்க முடியவில்லை. , 8 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து ரன்களைச் சேர்த்தார்.
இருவரும் களத்தில் இருந்தவரை ரன்கள் வேகமாக வந்தன. டி20 போட்டியைப் போல் இருவரும் அதிரடியாக ஆடியதால் 8.2 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. ஜெய்ஸ்வால் சிக்ஸர், பவுண்டரிகளாக அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்.
உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் அரைசதத்தைப் பதிவு செய்தார். கில், ஜெய்ஸ்வால் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்து சென்றது.
இந்திய அணியை சுருட்டிய சான்ட்னர்
நிதானமாக பேட் செய்த கில் 23 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் மிட்ஷெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். 15.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை 96 பந்துகளில் எட்டி வேகமாக இலக்கை நோக்கி நகர்ந்தது.
அடுத்து கோலி களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். அதிரடியாக ஆடிவந்த ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்த நிலையில் சான்ட்னர் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன்பின் இந்திய அணியின் சரிவு தொடங்கியது. அடுத்துவந்த ரிஷப் பந்த் ரன் அவுட் செய்யப்பட்டு டக்-அவுட் ஆனார்.
சான்ட்னரின் ‘ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்’ பந்துவீச்சில் காலை நகர்த்தாமல் ஆடி விராட் கோலி 17 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்ஃபிராஸ் கான் களத்துக்கு வந்தது முதலே தனது காலை நகர்த்தாமலேயே சான்ட்னரின் பந்துவீச்சை எதிர்கொண்டு பல தவறுகளைச் செய்தார்.
லேசாக டர்ன் ஆகும் வகையில் சான்ட்னர் வீசிய பந்தைத் தடுத்து ஆட முற்பட்ட போது சர்ஃபிராஸ் கானை ஏமாற்றிய பந்து க்ளீன் போல்டாக்கியது. சர்ஃபிராஸ் கான் 9 ரன்னில் ஏமாற்றமளித்தார்.
அதன் பிறகு இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வரிசையாக இழந்த வண்ணம் இருந்தது. வாஷிங்டன் சுந்தர் (21), அஸ்வின் (18), ஆகாஷ் தீப் (1) என வரிசையாக விக்கெட்டுகளைக் கோட்டைவிட்டனர். கடைசியில் நம்பிக்கையளித்த ஜடேஜா 42 ரன்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன் என்ற வலுவான நிலையில் ஒரு கட்டத்தில் இருந்தது. ஆனால், அடுத்த 149 ரன்களுக்குள் மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் உலக சாதனைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி
நியூசிலாந்து தொடருக்கு முன்பாக, இந்திய அணி 2013-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வென்று உலக சாதனையுடன் வீறுநடை போட்டது. இந்திய மண்ணில் நடைபெறும் தொடர் என்பதால், இதனையும் வெற்று சாதனைப் பயணத்தை மேலும் நீட்டிக்கும் முனைப்பில் இந்திய அணி இருந்தது. ஆனால், அதற்கு நியூசிலாந்து அணி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தற்போதைய நிலையில், சர்வதேச டெஸ்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 18 முறை தொடர்களை வென்றதே சாதனையாக இருக்கிறது. ஆஸ்திரேலியா இருமுறை தொடர்ந்து 10 தொடர்களை வென்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
கடந்த 1983-ஆம் ஆண்டுக்குப் பின் இந்திய அணி ஒரு காலண்டர் ஆண்டில் உள்நாட்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது இதுதான் முதல்முறை. ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்குப் பின் ஒரே ஆண்டில் உள்நாட்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
புதிய வரலாறு
இதுவரை, நியூசிலாந்து அணி இந்தியாவில் பல ஆண்டுகள் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர்களில் விளையாடியிருந்தாலும், ஒருமுறைகூட டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. அந்த வரலாறு இம்முறை மாறியுள்ளது.
இந்திய மண்ணில் பெங்களூருவில் நடந்த டெஸ்டில் வென்ற நியூசிலாந்து அணி, புனேயில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
“ஒட்டுமொத்த அணியின் தோல்வி”
டெஸ்ட் தொடரை இழந்தபின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “டெஸ்ட் தொடரை இழந்தது வேதனையளிக்கிறது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களைவிட நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். களத்தில் வந்த சவால்களுக்கு எங்களால் சரியான பதிலடி கொடுக்க முடியாமல் தோல்வி அடைந்துவிட்டோம்,” என்றார்.
மேலும், “சரியாக பேட் செய்தோம் என நான் நினைக்கவில்லை, அதனால்தான் போதுமான ரன்களும் கிடைக்கவில்லை. 20 விக்கெட்டுகளை எடுக்கலாம். அதேசமயம், பேட்டர்களும் ரன்கள் குவிக்க வேண்டும். நியூசிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேலாக முன்னிலை பெற வைத்துவிட்டோம். இதற்கு நாங்கள் சரியாக பேட்டிங் செய்யாததுதான் காரணம். நாங்கள் பதிலடி கொடுத்திருக்க வேண்டும், ஆனால், தோற்றுவிட்டோம்,” என்றார்.
“இது அதிகமான ஆட்டங்கள் நடந்த பிட்ச் அல்ல, நாங்கள்தான் சரியாக பேட் செய்யவில்லை. வான்ஹடே மைதானத்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்ல முயல்வோம். இது அணியின் ஒட்டுமொத்த தோல்வி. எங்கள் முன் நின்ற சவால்களை ஏற்பதில் ஓர் அணியாகத் தோற்றுவிட்டோம்,” எனத் தெரிவித்தார்.
கடினமான பாதை, ஒற்றை மனிதரின் சாதனை
இந்தியப் பயணத்துக்கு முன்பாக இலங்கை சென்ற நியூசிலாந்து அணி, அந்நாட்டிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் அனுபவ கேப்டன் கேன் வில்லியம்ஸன் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. சிறந்த டெஸ்ட் பேட்டரான வில்லியம்ஸன் இல்லாமலே நியூசிலாந்து அணி இந்தியத் தொடருக்கு வந்தது. ஆனால், இந்திய அணி தயாரித்து வைத்த ஆயுதத்தை எடுத்தே இந்திய அணியை வீழ்த்தி 2-0 என்று டெஸ்ட் தொடரை வென்று புதிய சகாப்தத்தை நிகழ்த்தியுள்ளது.
நியூசிலாந்து அணி, டெஸ்ட் தொடரை வெல்வதற்கு பிரம்மாஸ்திரமாக இருந்தது மிட்ஷெல் சான்ட்னர் எனும் ஒற்றை மனிதர்தான். முதல் இன்னிங்ஸில் 53 ரன்களுக்கு 7 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் என ஆட்டத்தையே திருப்பிவிட்டார்.
12 ஆண்டுகளுக்குப்பின் முற்றுப்புள்ளி
அதேசமயம், கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய மண்ணில் எந்த நாட்டு அணிக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழக்காமல் இருந்து வந்தது.
தற்போது 12 ஆண்டுகளுக்குப்பின் நியூசிலாந்திடம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்து, தனது சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டது. இதுவரை எந்த அணியும் உள்நாட்டில் டெஸ்ட் தொடரை 12 ஆண்டுகளாக இழக்காமல் பயணித்தது இல்லை. ஆனால், இந்திய அணி மட்டுமே அந்தச் சாதனையை செய்திருந்த நிலையில் அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 4,332 நாட்களுக்குப்பின் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்துவிட்டது.
இந்திய அணிக்கு என்ன ஆச்சு?
நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்ற சுழற்பந்துவீச்சாளர்களான மிட்ஷெல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸ் இருவருமே டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் இல்லை. அதிலும் சான்ட்னர் இதுவரை டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியதே இல்லை. அப்படியிருந்த வீரர் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.
ஆனால், டெஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்கள் என அடையாளம் காணப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்துவீச்சு புனேவில் சுத்தமாக எடுபடவில்லை இருவரின் பந்துவீச்சையும் நியூசிலாந்து பேட்டர்கள் எளிதாகக் கையாண்டனர். இதில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு மட்டும் விதிவிலக்கு.
இந்திய பேட்டர்கள் சிறிதுகூட நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறச் செய்யும் வகையில் பேட் செய்யவில்லை. அவர்களை நிலைகுலைய வைக்கும் விதத்தில் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுக்கவில்லை. அவ்வாறு அதிரடி பாணியை எடுத்திருந்தால், நியூசிலாந்து அணியின் திட்டம் சிதறி, என்ன செய்வதென்று தெரியாமல் தவறுக்கு மேல் தவறு செய்திருப்பார்கள்.
ஆனால், சுழற்பந்துவீச்சைக் கவனமாக ஆட வேண்டும் என்ற நோக்கோடு கூடுதலாக செலுத்திய கவனம், ரன்வேகத்தையும் குறைத்தது. தவறு செய்யவும் வழிவகுத்தது. இந்திய பேட்டர்கள் கூடுதல் கவனம் செலுத்தியதை வாய்ப்பாகப் பயன்படுத்திய சான்ட்னர், ‘ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்’ பந்துவீசி நெருக்கடியும், அழுத்தத்தையும் அதிகரித்து விக்கெட்டுகளை எளிதாகச் சாய்த்தார்.
சான்ட்னரின் பந்துவீச்சுத் திட்டத்தை தொடக்கத்திலேயே ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், கில், ரிஷப்பந்த் போன்ற அதிரடி பேட்டர்கள் தகர்த்திருக்கலாம். ஆனால், கவனமாக ஆட வேண்டும் என்ற நோக்கோடு ஒவ்வொரு பந்துக்கு ஒவ்வொரு விதமாக செயல்பட்டு அவரை ஃபார்முக்கு இட்டுச் சென்றனர்.
அதேநேரத்தில், நியூசிலாந்து பேட்டர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோரை நிலைகுலையச் செய்யும் விதத்தில் அதிரடி ஆட்டத்தை கையாண்டனர். இது அஸ்வின், ஜடேஜாவின் பந்துவீச்சு உத்தியை குழப்பிவிட்டது. இலங்கை அணிக்கு எதிராக கல்லே நகரில் நடந்த டெஸ்டிலும் இதே உத்தியைத்தான் நியூசிலாந்து அணி கையாண்டது குறிப்பிடத்தக்கது.
சுழற்பந்துவீச்சுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக ஆடக் கூடியவர்கள் என்று இந்திய பேட்டர்கள் என அறியப்பட்ட காலம் இருந்தது. அதனால்தான் இந்திய ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டன. அப்படியிருந்த இந்திய அணியில் சீனியர் பேட்டர்களான ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோர் ஜொலிக்காமல் போனது கேள்வியை எழுப்புகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற முடியுமா?
இந்திய அணியின் டெஸ்ட் தொடர் தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் அதன் பாதையை கடினமாக்கியுள்ளது. தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியும், முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் சிறிய புள்ளிகள் வித்தியாசத்தில்தான் இருக்கின்றன.
இன்னும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் என 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 வெற்றிகள், ஒரு டிராவை இந்திய அணி பதிவு செய்தால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.