தேசிய மக்கள் சக்தியின் உண்மை முகங்கள் வெளிவருகின்றன – மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து விட்

by sakana1

தேசிய மக்கள் சக்தியினர் தமது உண்மை முகங்களை தற்போது வெளிக்காட்டி தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து விட்டனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

  யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஏராளமான சுயேட்சை குழுக்கள் களமிறங்கி வாக்குகளை சிதைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் யார் என்பது பற்றி மக்கள் மத்தியில் தெளிவு இருக்கிறது. 

ஐக்கிய மக்கள் சக்தியில் நாம் தேர்தலில் போட்டியிடுகிறோம். ஐக்கிய மக்கள் சக்தியில் மாத்திரமே தான் சிறுபான்மையினர் போட்டியிடுகின்றனர். 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மாத்திரமே சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ளவர்கள். கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா இனவாதி இல்லை. அவரே சிறுபாண்மையினர் மீது அக்கறை கொண்டவர்.

தேசிய மக்கள் சக்தியினரின் உண்மை முகங்கள் தற்போது வெளிவர தொடங்கி விட்டது. அவர்களே எல்லாம் என்ற மாயை உருவாகி அலை ஒன்று ஏற்பட்டு இருந்தது. தற்போது அதன் உண்மை வெளிவர தொடங்கி விட்டது. ரில்வின் சில்வாவின் கருத்து, அவர்கள் யார் என்பதனையும் அவர்களின் உண்மை முகங்களையும் காட்டுகின்றது.

தமிழ் மக்களின் இன பிரச்னைக்கு ஒழுங்கான தீர்வு திட்டம் எதுவம் அவர்களிடம் இல்லை. தமிழ் மக்களுக்கு பொருளாதார பிரச்சனை தான் இருக்கிறது என கூறுகின்றனர். தமிழர்களுக்கு சோற்றுக்கு தான் பிரச்சனை என சொல்கின்றனர் 

தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் செல்வாக்கை இழந்து விட்டார்கள். சஜித் பிரேமதாசா தலைமையில் தான் பாராளுமன்றம் அமையும் அவரே பிரதமராக பதவியேற்பார். 

ஊழலற்ற நேர்மையானவர்களே நாடு முழுவதும் சஜித் தலைமையில்  போட்டி இடுகின்றனர் என மேலும் தெரிவித்தார். 

அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரும் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளருமான உமாச்சந்திர பிரகாஷ் கருத்து தெரிவிக்கையில், 

ஐக்கிய மக்கள் கூட்டணியாக நாங்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறோம்.

தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சி பீடம் ஏறி எதனையும்செய்யவில்லை.  குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்கள் என எவருக்கும் எதுவும் செய்யவில்லை. அவர்கள் இனியும் செய்ய போவதில்லை. 

எனவே தான் சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும். யார் மக்கள் பிரதிநிதியாக போக வேண்டும் என்பதனை மக்கள் தான் தெரிவு செய்ய வேண்டும். 

தேசிய மக்கள் சக்தியின் தமது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்பது ஜனநாயகம் அல்ல. வேட்பாளர் தெரிந்தவர் அறிந்தவர் அயலவர்கள். என வாக்களித்து வாக்கை சிதறடிக்க வேண்டாம் என மேலும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்