தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மலையேற்றம் செல்லலாம்? என்ன வழிமுறை? முழு விளக்கம்
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
-
தமிழ்நாட்டில் மலையேற்றப் பயணங்களுக்குச் செல்பவர்கள் இணைய வழியில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எங்கெங்கெல்லாம் மலையேற்றப் பயணங்களை மேற்கொள்ளலாம், அதற்கு என்ன செய்ய வேண்டும்? விரிவான தகவல்கள்.
கேள்வி: தமிழ்நாட்டில் மலையேற்றப் பயணத்திற்கென (Trekking) மாநில அரசு துவங்கியிருக்கும் புதிய முயற்சி என்ன? இதன் பின்னணி என்ன?
பதில்: பெரும் வனப்பரப்பைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் உள்ள வனப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் நீண்டகாலமாகவே மலையேற்ற பணயங்கள் (Trekking) நடந்துவந்தன. ஆங்காங்கே உள்ள வனச்சரகங்களில் அனுமதிபெற்று, இதுபோல பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. சில சமயங்களில் அனுமதிகளைப் பெறாமலும் சிலர் இந்தப் பயணங்களை மேற்கொண்டனர்.
இந்நிலையில், 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு மலை ஏற்றத்திற்காக சென்ற நபர்களில் 23 பேர் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவர்கள், வனத்துறையின் அனுமதியைப் பெறாமல் மாற்றுப் பாதையில் சென்றவர்கள் எனவும் கூறப்பட்டது.
இதையடுத்து இதுபோன்ற மலையேற்றப் பயணங்களுக்கு என விதிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் இதற்கான விதிகள் வகுக்கப்பட்டன.
அதற்குப் பிறகு, மலையேற்றப் பயணத்திற்கு உகந்த 124 வனப் பாதைகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் இருந்து முதல்கட்டமாக, 40 பாதைகளைத் தேர்வு செய்து அவற்றில் மலையேற்றப் பயணங்களை நடத்த வனத்துறை முடிவெடுத்தது. தமிழ்நாடு வன அனுபவக் கழகமும் தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளன.
கேள்வி: தமிழ்நாட்டில் இப்படி எந்தெந்தப் பாதைகள் எந்தெந்த மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன?
பதில்: நீலகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள மலையேற்றப் பாதைகள், தமிழ்நாடு வனத்துறையால் தமிழ்நாடு வன மற்றும் உயிரின (மலையேற்ற ஒழுங்குமுறை) விதிகள் 2018 ஆண்டின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக நாற்பது பாதைகள் மலையேற்றப் பயணத்திற்காக திறக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக பத்து பாதைகள் இடம்பெற்றுள்ளன.
அதற்கடுத்ததாக கோயம்புத்தூரில் ஏழு பாதைகளும் திண்டுக்கல், சேலம், தேனி மாவட்டங்களில் தலா மூன்று பாதைகளும் திருப்பூர், திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் தலா இரண்டு பாதைகளும் கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒரு பாதையும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த மலையேற்றப் பாதைகளில், பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்து பயணங்களை மேற்கொள்ளலாம்.
கேள்வி: இந்தப் பாதைகளில் பயணம் செய்ய எப்படி முன்பதிவு செய்வது?
பதில்: இதற்கென தற்போது பிரத்யேகமான ஒரு இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.trektamilnadu.com என்ற இந்த முன்பதிவு தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மலையேற்றத்திற்கான இடத்தைத் தேர்வுசெய்ய உதவும் வகையில், அந்தந்த இடங்களின் புகைப்படம், காணொளிக் காட்சிகள், 3D அனிமேஷன், மலையேற்ற பாதைகள் தொடர்பான அத்தியாவசிய விவரங்கள், விதிமுறைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்திலேயே பணம் செலுத்தி, நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இத்திட்டத்தின் கீழ் மலையேற்றம் மேற்கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்குக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது.
எளிதான பாதைகள், சற்று கடினமான பாதைகள், மிகக் கடினமான பாதைகள் என மூன்று வகையாக இந்தப் பயணங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கேள்வி: மலையேற்றப் பாதையில் வழிகாட்டிகளுக்கு (guide) என தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டுமா? வழிகாட்டிகள் தேவையில்லை என சொல்ல முடியுமா?
பதில்: இல்லை. நுழைவுக் கட்டணத்திலேயே வழிகாட்டிகளுக்கான கட்டணமும் அடங்கும். இந்த இணையதளத்தில் பதிவுசெய்பவர்கள், வழிகாட்டிகளின் உதவியுடன் மட்டும்தான் வனப்பகுதிகளில் மலையேற்றம் செய்ய முடியும். இம்மாதிரியான சூழல்களில் வழிகாட்டிகளுடன் பயணம் செய்வதே சிறந்தது என்பதால், இந்த மலையேற்றப் பயணங்கள் இப்படி வடிவமைக்கப் பட்டிருப்பதாக வனத் துறை தெரிவிக்கிறது.
மலையேற்ற வழிகாட்டிகளாக காடுகள் குறித்த பாரம்பரிய அறிவைக் கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள், வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, மலையேற்ற வழிகாட்டிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு வன ஒழுக்கம், திறன் மேம்பாடு, முதலுதவி, விருந்தோம்பல், பல்லுயிர் பாதுகாப்பு போன்றவற்றில் போதுமான தொழில்முறை பயிற்சிகளும் அவசர நிலைகளைக் கையாளுவதற்கான பாதுகாப்பு நெறிமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவிக்கிறது.
கேள்வி: எந்த வயதைச் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் மலையேற்றப் பயணத்தை மேற்கொள்ளலாம்?
பதில்: இதற்கென உள்ள இணையதளத்தில் பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் மேற்கொள்ளலாம்.
பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்ச வயதைப் பொறுத்தவரை, உடல் ஆரோக்கியமிருந்தால் எந்த வயதிலும் பங்கேற்கலாம்.
கேள்வி: இந்த மலையேற்றத்திற்கு எல்லா காலகட்டத்திலும் செல்ல முடியுமா?
பதில்: முடியாது. காட்டுத் தீ ஏற்படும் அபாயமுள்ள மாதங்களில் மலையேற்றத்திற்கு அனுமதி கிடையாது. ஆகவே, பிப்ரவரி 15 முதல் இரு மாதங்களுக்கு மலையேற்றத்திற்கு அனுமதி கிடையாது.
கேள்வி: மலையேற்றத்திற்கு வரும்போது என்னென்ன பொருட்களை கொண்டுவரலாம்? மலையேற்றப் பாதையில் கழிப்பறை வசதிகள் உண்டா?
பதில்: ஒரு சிறிய பையில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டிலில் தண்ணீர், சிற்றுண்டி, தேவையான மருந்துப் பொருட்கள் ஆகியவை போதுமானது. கழிப்பறையைப் பொறுத்தவரை, சில மலையேற்றப் பாதைகளின் துவக்கப் புள்ளிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களிலும் விரைவில் இந்த வசதி மேற்கொள்ளப்படும் என வனத்துறை தெரிவிக்கிறது.
கேள்வி: வளர்ப்புப் பிராணிகளையும் மலையேற்றத்திற்கு அழைத்துவரலாமா?
பதில்: எல்லா மலையேற்றப் பாதைகளுமே வன விலங்குகள் வசிக்கக்கூடிய வனப் பகுதிக்குள் இருப்பதால் வளர்ப்புப் பிராணிகளை அழைத்துவர அனுமதி கிடையாது.
கேள்வி: தற்போதைய அடையாளம் காணப்பட்டுள்ள மலையேற்றப் பாதைகளில், தனித்துச் செல்ல முடியுமா?
பதில்: எல்லா மலையேற்றப் பாதைகளுமே வனம் மற்றும் வனவிலங்குகள் நடமாடக்கூடிய பகுதியில் இருப்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக தனித்துச் செல்ல அனுமதி கிடையாது. வனத்துறை வகுத்துள்ள கொள்கையின்படி குறைந்தது ஐந்து பேர் கொண்ட குழுவாகத்தான் மலையேற்றத்தை மேற்கொள்ள முடியும்.
கேள்வி: இந்தப் பயணங்களுக்கான கட்டணங்கள் சற்று அதிகமாக உள்ளதா?
பதில்: இந்தக் கட்டணங்களைப் பொறுத்தவரை, வழிகாட்டிகளின் ஊதியம், சிற்றுண்டி, சில கையேடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. சில இடங்களில் டிக்கெட் வழங்கும் இடத்திலிருந்து பயணம் துவங்கும் இடம்வரை வனத்துறையின் வாகனத்தில்தான் செல்ல வேண்டும். அதற்கான கட்டணமும் இதில் அடங்கும். விரைவிலேயே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குறைந்த அளவிலான மலையேற்றப் பயணங்களை வடிவமைக்கவுள்ளதாகவும் வனத்துறை தெரிவிக்கிறது.
இந்த மலையேற்றம் சுலபம், மிதமான மற்றும் கடினம் என என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக நீலகிரியில் உள்ள கேன் மலையில் (சுலபம்) டிரெக்கிங் செய்ய ஒரு நபருக்கு 699 ரூபாய் கட்டணம்.
கோவையின் சாடிவயல்- சிறுவாணியில் (மிதமான) டிரெக்கிங் செய்ய ஒரு நபருக்கு 3,149 ரூபாய் கட்டணம்.
நீலகிரியின் அவிலாஞ்சி- ‘கொல்லரி பெட்டாவில் (கடினம்) டிரெக்கிங் செய்ய ஒரு நபருக்கு 4,749 ரூபாய் கட்டணம்.
ஒவ்வொரு பகுதிக்கும், மலையேற்ற பாதைக்கும் ஏற்ப கட்டணம் மாறுபடுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.