சிஎஸ்கே வீரர் சான்ட்னர் சுழலில் இந்திய அணி வீழ்ந்தது எப்படி?- விறுவிறுப்பான கட்டத்தில் புனே டெஸ்ட்
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புனேயில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களில் சுருண்டது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களில் ஆட்டமிழந்து. தற்போது, 2வது இன்னிங்ஸில் பேட் செய்துவரும் நியூசிலாந்து அணி இன்றைய (அக்டோபர் 25) ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து, 301 ரன்கள் என்ற முன்னிலை பெற்றுள்ளது.
டாம் ப்ளன்டெல் 30 ரன்னிலும், க்ளென் பிலிப்ஸ் 9 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு அரைசதம் கூட இல்லை
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக ஜடேஜா(38), கில்(30), ஜெய்ஸ்வால்(30) ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன் அனைவரும் 20 ரன்களுக்குள்ளே ஆட்டமிழந்தனர். கடந்த டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் சொற்ப ரன்கள் மட்டுமே குவித்து ஏமாற்றினர்.
வரலாற்று வெற்றியை நோக்கி நியூசிலாந்து?
ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நாளிலேயே விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருப்தால், 5 நாட்கள்வரை ஆட்டம் நீடிக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நாளை அல்லது நாளை மறுநாளில்கூட டெஸ்ட் போட்டி முடிவுக்கு வரக்கூடும் என கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.
இதுவரை இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்லாத நியூசிலாந்து அணி முதல்முறையாக தொடரைக் கைப்பற்றி வரலாறு படைக்கும் முயற்சியில் இருக்கிறது. ஆட்டத்தின் இரண்டாவது நாளான இன்று ஒரே நாளில் இரு அணிகளிலும் சேர்த்து 14 விக்கெட்டுகள் வீழ்ந்தன.
ஆட்டம் எப்படி மாறும்
புனே ஆடுகளம் கடைசி 2 நாட்களில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும். இந்த ஆடுகளத்தில் இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் முதலில் பேட் செய்த அணிதான் வென்றுள்ளது.
நியூசிலாந்து அணி வசம் இன்னும் 5 விக்கெட்டுகள் இருப்பதால், 350 ரன்களுக்கு மேல் இந்திய அணிக்கு இலக்கு வைக்கலாம்.
இந்த பிட்ச்சில் சேஸிங் (chasing) செய்வது இந்திய அணிக்கு மிகக் கடினமாக இருக்கும். பிட்சின் தன்மை நாளுக்கு நாள் மாறுகிறது, அதனால் அது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கூடுதலாக ஒத்துழைப்பு அளிக்கும்.
சான்ட்னர், அஜாஸ் படேல், பிலிப்ஸ் ஆகியோரின் பந்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதத்தில் டர்ன் ஆகிறது. ஆதலால், நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் கணித்து ஆடுவது எளிதானதாக இருக்காது.
இந்திய அணி சுழற்பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தால் டெஸ்ட் தொடரையே இழக்க நேரிடலாம். அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கலை ஏற்படுத்தலாம்.
நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறுவதற்கு அந்த அணியின் கேப்டன் டாம் லாதம்(86), டாம் பிளென்டல்(30) பேட்டிங் குறிப்பிடத்தக்க உதவி புரிந்தது.
சான்ட்னரின் முதல் 5 விக்கெட்
இதுவரை சான்ட்னர் ஒரு டெஸ்ட் போட்டியில்கூட ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியதில்லை.
ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில் சான்ட்னர் 53 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்.
இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்க காரணம் என்ன?
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் 10 விக்கெட்டுகளில் 7 விக்கெட்டுகளை மிட்செல் சான்ட்னர் மட்டுமே வீழ்த்தியிருந்தார். 2 விக்கெட்டுகளை கிளென் ப்லிப்ஸ், ஒரு விக்கெட்டை சௌதியும் கைப்பற்றினர்.
ஆனால், சான்ட்னர் பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் 7 பேர் ஆட்டமிழந்ததில் சர்ஃப்ராஸ் கான் மட்டுமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்திருந்தார். மற்ற 6 பேட்ஸ்மேன்களுமே கால்காப்பில் வாங்கியும், போல்டாகியும் விக்கெட்டை இழந்திருந்தனர்.
இதற்கு முக்கியக் காரணம் சான்ட்னர் தனது பந்துவீச்சில் “ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்” என்ற முறையில் பந்துவீசினார். அதாவது தனது பந்துவீச்சின் இலக்கை ஸ்டெம்பை நோக்கியே வைத்திருந்தார்.
இரண்டாவதாக சான்ட்னர் பந்துவீச்சின் வேகம் மணிக்கு 90 கிலோமீட்டருக்கும் குறைவாகவும், அதேநேரம் பந்தை “டாஸ்” செய்யும் அளவு அதிகமாகவும் இருந்தது.
புனே போன்ற மெதுவான ஆடுகளத்தில் வேகம் குறைவாக வீசும் சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை கணித்து ஆடுவது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும்.
அது மட்டுமல்லாமல் “ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்” வீசும் சான்ட்னர் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் சிறிது கவனக்குறைவாக கையாண்டாலும் அவர்கள் விக்கெட்டை இழக்க நேரிடலாம்.
இந்த உத்தியில்தான் சான்ட்னர் பந்துவீசினார். குறிப்பாக வேகத்தைக் குறைத்து சான்ட்னர் பந்துவீசியதால், பந்து பிட்ச் ஆனபின் நன்கு ட்ர்ன் ஆகி, திடீரென பவுன்ஸ் ஆகியது. இதனால் பந்தை கணித்து ஆடுவது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருந்தது.
ஒரே இடத்தில் பந்து பலமுறை பிட்ச் ஆனாலும், ஒவ்வொரு முறை பிட்ச் ஆகும்போது பந்து ஒவ்வொரு விதமாக சென்றது. இதை புரிந்து கொண்ட சான்ட்னர் ஆடுகளத்துக்கு ஏற்ப தனது பந்துவீச்சை மாற்றிக்கொண்டார்.
ஆனால், பிட்சுக்கு ஏற்ப இந்திய பேட்டர்கள் தங்கள் பேட்டிங்கை மாற்றாததால், இந்திய அணி விக்கெட்டுகளை மளமளவென இழந்தனர்.
முதல் 5 விக்கெட்டுகளை 83 ரன்களுக்கு இழந்த இந்திய அணி, அடுத்த 5 விக்கெட்டுகளை 73 ரன்களுக்கு இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியைப் பொருத்தவரை எதிரணி 100 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற டெஸ்ட் போட்டிகளில் இருமுறை மட்டுமே வென்றுள்ளது.
2000-01-ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும், 1976-ஆம் ஆண்டில் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் மட்டும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த டெஸ்டில் 300 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கப்படும் இலக்கை இந்திய அணி சேஸ் செய்யுமா என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்திய பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை
சான்ட்னரின் இன்று 17.3 ஓவர்கள் மட்டுமே வீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கடந்த 2016-17 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதே புனே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் ஓ கீஃப் பந்துவீச்சில் இந்திய அணி ஆட்டத்தில் சுருண்டது.
இந்த பிட்ச்சில் பந்தில் அதிகமான டர்ன் இருக்கிறது, பந்து பல்வேறு விதத்தில் திரும்புகிறது இதற்கு ஏற்றார்போல் இந்திய பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை இருக்க வேண்டும்.
அதாவது ஒரே இடத்தில் பிட்ச் ஆகும் பந்து ஒருமுறை அதிகமாக டர்ன் ஆகியும், 2வது முறை குறைவாக டர்ன் ஆகியும், 3வது முறை நேராகவும் பேட்டரை நோக்கி வரும்போது பேட்டர்கள் குழப்பமடைகிறார்கள். இந்த பிட்ச்சின் இயல்புத்தன்மைக்கு ஏற்ப பேட்டிங் உத்தியை இந்திய வீரர்கள் மாற்ற வேண்டும்.
குறிப்பாக விராட் கோலி, ஃபுல்டாஸாக சான்ட்னர் வீசிய பந்தை அடிக்க முற்பட்டபோது பந்து மெதுவாக வந்து க்ளீன் போல்டாகினார்.
பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்டில் சுழற்பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சர்ஃப்ராஸ்கான் அதே அணுகுமுறையோடு இந்த ஆட்டத்திலும் பேட்டிங் செய்தபோது, ஸ்வீப் ஷாட்டில் விக்கெட்டை இழந்தார்.
ஆடுகளத்தின் தன்மையையும், சான்ட்னரின் பந்துவீ்ச்சையும் கணித்து ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் இருவர் மட்டுமே ஓரளவுக்கு பேட் செய்தனர். சுந்தர் 18 ரன்களையும் ஜடேஜா 38 ரன்களையும் குவித்தனர். இருவரும் அதிரடியாக சில ஷாட்களை ஆடியதால்தான் இந்திய அணி 150 ரன்களைக் கடந்தது.
நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை
ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்ட நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக பேட் செய்தனர். பவுண்டரி அடிக்க வாய்ப்பிருக்கும் எந்தப் பந்தையும் அவர்கள் வீணடிக்கவில்லை. ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களிலும், கால்களை நகர்த்தியும் ஷாட்களை ஆடி, இந்தியப் பந்துவீச்சாளர்களை குழப்பினர்.
இதனால், அஸ்வின் 6 ஓவர்களை வீசி 33 ரன்களையும், ஜடேஜா 3 ஓவர்களில் 24 ரன்களையும் எடுத்தனர். கேப்டன் டாம் லாதம் 82 பந்துகளில் அரைசதம் அடித்து அதிரடியான பேட்டிங் உத்தியை செயல்படுத்தினார்.
ஆனால், வாஷிங்டன் சுந்தரின் வேகக்குறைவான சுழற்பந்துவீச்சை கையாளத் தெரியாமல், அதிரடியாக ஷாட்களை அடிக்க முயன்றபோது நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் இழந்த 5 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளை வாஷிங்டன் பந்துவீச்சில்தான் இழந்தது. வாஷிங்டன் சுந்தரும் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் உத்தியைக் கையாண்டு பந்துவீசியதால், கால்காப்பில் வாங்கியும், போல்டாகியும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்துவரும் நியூசிலாந்து அணி, 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து, 301 ரன்கள் என்ற முன்னிலை பெற்றுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.