மோதி – ஷி ஜின்பிங் சந்திப்பு: இரு நாட்டு உறவுகள் இனி மேம்படுமா? நிபுணர்களின் முக்கிய எச்சரிக்கை என்ன?- ஓர் அலசல்
- எழுதியவர், சந்தீப் ராய்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கடந்த ஐந்து ஆண்டுகளாக இறுக்கமாக இருந்த இந்தியா – சீனா உறவுகள், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துக் கொண்ட போது இளகியது. ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கைகுலுக்கிக் கொண்டனர்.
ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றபோது இரு தலைவர்களும், எல்லையில் பதற்றத்தை குறைப்பதற்கான ஒப்பந்தத்தை வரவேற்றனர்.
‘எல்லையில் அமைதியைப் பேணுவதே’ முன்னுரிமை என இரு தலைவர்களும் வலியுறுத்தினர். மேலும் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை இருதரப்பு உறவுகளை வழிநடத்தும் என மோதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
“இரு நாட்டு மக்களும் மற்றும் உலக மக்களும் நமது சந்திப்பை மிக நெருக்கமாக கவனித்து வருகின்றனர், பரஸ்பர உறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்” என்று ஷி ஜின்பிங் கூறினார்.
2020-ஆம் ஆண்டில், கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் இரு நாடுகளின் ராணுவங்களுக்கிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர், பல சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான உறவுகள் நீடித்து வந்தன.
சுமார் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லையில் நிலவி வரும் பதற்றத்தைக் குறைப்பதற்காக மெய்யான கட்டுப்பாட்டு கோடு (LAC) குறித்த இருநாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தை திங்கட்கிழமை அன்று இந்தியா அறிவித்தது.
சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் எனும் செய்தித்தாள், “இது இந்தியா- சீனா பிரச்னையைத் தீர்ப்பதற்கான முக்கியமான வாய்ப்பு, இதனை வரவேற்க வேண்டும்” என்று கூறியுள்ளது.
இந்தியா- சீனா உறவுகளை நெருக்கமாகக் கவனித்து வரும் ஆய்வாளர்கள், மோதி மற்றும் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதில் ஒரு முக்கிய படி என்று கருதுகின்றனர்.
இந்த சந்திப்பு எவ்வளவு முக்கியமானது?
கடந்த ஐந்து ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் கசப்பாக இருந்த நிலையில், இந்த பேச்சு வார்த்தை அரசியல் ரீதியாக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ராஜன் குமார் கூறுகையில், “ஒரு வாரத்துக்கு முன்பு வரை இரு நாடுகளுக்கிடையே இத்தகைய சந்திப்பு நடைபெறப் போகிறது என்பது தெரியவில்லை. லடாக் எல்லையில் ராணுவ விலகல் குறித்து இரு நாடுகளும் அறிவித்த பிறகு இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
லடாக் எல்லையில் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்திருந்தால், எல்லையில் வீரர்கள் இரு தரப்பில் நின்று கொண்டிருக்கும் போது சந்திப்பு நடக்கிறது என விமர்சனங்கள் எழுந்திருக்கும். இதை வைத்து பார்க்கும்போது இதுவொரு முக்கிய சந்திப்பு” என்றார்.
சில ஆய்வாளர்கள் பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தையும், சீனாவை பேச்சுவார்த்தை மேஜைக்கு கொண்டுவந்ததையும் இந்தியாவின் ‘பெரிய வெற்றியாக’ பார்க்கின்றனர்.
புது டெல்லியை தளமாகக் கொண்ட ஆப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறையின் துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் வி. பண்ட், “இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பது மிகவும் முக்கியமானது”, என்கிறார்.
“இது இந்தியாவின் பெரிய வெற்றி. இந்தியா நான்கு ஆண்டுகளாக ஒரு பெரிய சக்திக்கு எதிராக நின்று, எல்லையில் சூழ்நிலை இயல்பாகும் வரை மற்ற விவகாரங்களில் இயல்பு நிலை இருக்காது என்று மீண்டும் மீண்டும் கூறியது. சமீபத்திய ஒப்பந்தத்தில் சீனா இதை ஏற்றுக்கொண்டது” என பிபிசியிடம் கூறினார்
“பரஸ்பர மரியாதை இல்லாவிட்டால் பரஸ்பர உறவுகள் முன்னேற முடியாது என பிரதமர் மோதி கூறியுள்ளார். நிச்சயமாக ஒரு தொடக்கம் ஏற்பட்டுள்ளது, ஆனால் சீனா தனது அணுகுமுறையை ஓரளவு மாற்றிக்கொண்டால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும். இந்தச் சந்திப்பிலிருந்து வெளிப்படும் செய்தி இதுதான் என நான் நினைக்கிறேன்” என்கிறார்
எனினும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ராஜன் குமார் கூறுகையில், ”இந்தச் சந்திப்பின் மூலம் சில எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்படும், ஆனால் இதன் மூலம் சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்று புரிந்துகொள்ளக்கூடாது.” என்கிறார்.
இரு நாட்டு உறவில் பொருளாதார அழுத்தங்களின் பங்கு
கடந்த ஐந்து ஆண்டுகளாக இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இது பொருளாதார நலன்களை அந்த அளவுக்கு பாதிக்கவில்லை என்றாலும், உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டுவருவதில் இரு தரப்பினருக்கும் பொருளாதார நலன்கள் உள்ளன.
வர்த்தகம் இரு நாடுகளுக்கிடையே ஒரு முக்கியமான விவகாரமாக இருந்து வருகிறது.
ராஜன் குமார் கூறுகையில், “நாம் 80 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்கிறோம், ஆனால் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்கிறோம். சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்னை. இந்தப் பிரச்னையைத் தீர்க்க இந்தியா விரும்புகிறது.” என்றார்.
2023ல் இரு நாடுகளுக்கிடையே 136 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றது. இது மட்டுமல்ல, அமெரிக்காவை முந்தி சீனா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நாடாக மாறியுள்ளது.
ஆனால் கடந்த சில காலமாக சீனாவின் பொருளாதாரம் மந்தமடைந்து வருகிறது. மறுபுறம், பதற்றம் காரணமாக இந்தியாவில் சீனாவின் முதலீடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் துறைக்கு பெருமளவிலான மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது.
பேராசிரியர் ஹர்ஷ் பண்ட் கூறுகையில், “இரு நாடுகளும் பொருளாதார உறவுகள் இயல்பாக இருக்க வேண்டும் என விரும்பின. வர்த்தகம் தொடர்ந்தாலும், சீன முதலீட்டில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கியது. இதனால் சீனாவுக்கு இந்தியாவில் முதலீடு செய்வது கடினமாகிவிட்டது.”
அவரது கூற்றுப்படி, “முதலீடு குறைந்தது மட்டுமல்லாமல், முக்கியமான உள்கட்டமைப்பு உருவாக்கப் பணிகளிலிருந்தும் சீனா வெளியேறியது. 2020க்கு முன்பு, சீனாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவே இந்தியாவில் 5ஜி விரிவாக்கத்தில் பங்கேற்கலாம் என்ற பேச்சு இருந்தது. ஆனால் சர்ச்சைக்குப் பிறகு அதில் எந்த முன்னேற்றமும் இல்லை”
தற்போது சீனாவின் பொருளாதார நிலை அவ்வளவு சீராக இல்லை என்றும், இந்தியா போன்ற சந்தைகளில் தொடர்ந்து இடம்பெற அது நிச்சயமாக விரும்பும் என்றும் பேராசிரியர் பண்ட் கூறுகிறார்.
ஆனால் அரசின் நிலைப்பாட்டால் இந்திய தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹர்ஷ் பண்ட் கூறுகையில், “அரசாங்கத்தின் நிலைப்பாட்டால், இந்திய தொழில்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன. சீனாவுடனான உறவுகள் சற்று இயல்பானால் இந்தியாவின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க முடியும் என்று இந்திய தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவும் தனது உள்நாட்டு உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறது” என்றார்.
அதாவது, உறவுகள் இயல்பானால் இரு தரப்பினரின் வணிகமும் மீண்டும் சீராகும் என்ற விருப்பம் இரு தரப்பிலும் இருந்து வருகிறது.
சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கம் அதிகரித்துள்ளது. ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய அமெரிக்கா தலைமையிலான குவாட் குழுவில் இந்தியா உறுப்பினராகியுள்ளது.
பேராசிரியர் ஹர்ஷ் பண்ட் இந்தியா தனது நலன்களுக்கு ஏற்ப மற்ற நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்தி வருகிறது என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு தடுப்பை உருவாக்க விரும்புகிறது என்றும் கூறுகிறார்.
ஷி ஜின்பிங் மற்றும் மோதி இடையேயான சந்திப்புக்குப் பிறகு, சீனா தனது அறிக்கையில், “பல சக்திவாய்ந்த நாடுகளை கொண்ட பலதுருவ உலகம்” பற்றி பேசியுள்ளது என்றாலும், எந்தவொரு ராணுவக் குழுவிலும் சேராது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.
பேராசிரியர் பண்ட் கூறுகிறார், “பல துருவ உலகம் என்றுதான் சீனா பேசுகிறது. ஏனென்றால் அமெரிக்காவுடன் போட்டி போடுகிறது. ஆனால் சீனா பல துருவ ஆசியா பற்றி பேசவில்லை, இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகள் வழியாக இந்தியாவை இரண்டாம் சக்தியாக மாற்ற அது தன்னால் முடிந்தவரை முயற்சித்துள்ளது.”
“சீனாவின் அணுகுமுறை மூர்க்கதனமாக இருந்தால், அது இந்தியாவுடனான உறவுகளை மதிக்கவில்லை என்றால், இந்தியா மற்ற நாடுகளுடன் உறவுகளை உருவாக்க வேண்டியிருக்கும். இந்தியாவுடன் எத்தகைய உறவை வைத்துக் கொள்ள விரும்புகிறது என்பது சீனாவைப் பொறுத்தது” என்றும் அவர் கூறினார்.
மற்ற பிரச்னைகளில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்?
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள சர்ச்சை மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு பற்றியது மட்டுமில்லை.
“இரு நாடுகளுக்கு இடையே உள்ள பல பிரச்னைகளில் இதுவும் ஒன்று” என்கிறார் பேராசிரியர் பண்ட்.
உண்மையில், சீனா இந்தியப் பகுதிக்கும், அருணாச்சல பிரதேசத்திற்கும் உரிமை கொண்டாடி வருகிறது. சீனா அருணாச்சல பிரதேசத்தை ‘தெற்கு திபெத்’ என்று அழைக்கிறது.
பேராசிரியர் ஹர்ஷ் பண்ட் கூறுகையில், “இந்தியாவை சீனா ஒருபோதும் சமமாகப் பார்க்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய பிரச்னை. பாகிஸ்தானை பயன்படுத்தி அல்லது இந்தியப் பெருங்கடலில் இருதரப்பு சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, அல்லது இந்தியாவை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சேர அனுமதிக்காமல் என்று கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம், சீனா இந்தியாவை இரண்டாம் நிலையில் உள்ள நாடாக முன்னிறுத்த முயன்றது” என்றார்.
மேற்கொண்டு பேசிய அவர், “இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு நிறைய மாறிவிட்டது என்றோ அல்லது சீனாவின் தரப்பில் ஏதோ பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவோ இந்தியா எந்த மாயையையும் கொண்டிருக்கக்கூடாது,” என்று தெரிவித்தார்.
அதிக நம்பிக்கையை வெளிப்படுத்துவது குறித்து ராஜன் குமார் எச்சரிக்கிறார். அவர், “அருணாச்சல பிரதேசத்திற்கும் பூட்டானுக்கும் இடையே நடக்கும் ரோந்து எப்போதும் மோதலாகவே இருக்கும் என்பதால், எல்லைப் பிரச்னைகள் முற்றிலும் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ஒப்பந்தத்திற்குப் பிறகு, சீனா தனது கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் உள்கட்டமைப்புகளை உருவாக்கத் தொடங்கியது,” என்று கூறினார்.
“தற்போது பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது, அது நீண்டதூரம் செல்லக்கூடும்,” என்றும் முனைவர் ராஜன் குமார் கூறுகிறார்.
மேலும் பேராசிரியர் பண்ட் கூறுவது போல், “மெய்யான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதற்றம் குறைந்ததால், இரு நாடுகளுக்கும் தேவைப்படும் வர்த்தகத்திலும் அது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்”.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு