ஒற்றைப் பனை மரம் படத்திற்கு சீமான் எதிர்ப்பு – என்ன சர்ச்சை?

ஒற்றைப் பனை மரம்: சீமான்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

புதியவன் ராசைய்யா என்பவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார். என்ன காரணம்?

புதியவன் ராசைய்யா என்ற இயக்குநர், ‘ஒற்றைப் பனை மரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்ஷயா என்பவர் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்ட நிலையில், பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்தப் படம் தமிழ்நாட்டில் அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்கக்கடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அந்த அறிக்கையில், “ஈழத் தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப் பரப்பரையையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

மண் விடுதலைக்குப் போராடி வீர காவியங்களான மாவீரர் தெய்வங்களை இழிவுபடுத்தவோ அல்லது அவதூறு பரப்புவோ முயலும் எந்தவொரு படைப்பையும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரிக்கிறேன்.

ஆகவே, ஈழவிடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ‘ஒற்றை பனை மரம்’ திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு நாங்கள் அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். இத்திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

மேலும், தமிழ்நாடு அரசு இதனை உடனடியாகக் கவனத்தில் எடுத்து, தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவிடாமல் தடுக்குமாறு வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

ஒற்றைப் பனை மரம்: சீமான்

படக்குறிப்பு, புதியவன் ராசைய்யா என்ற இயக்குநர், ‘ஒற்றைப் பனை மரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி சில நாட்களுக்கு முன்பு திரையிடப்பட்டது. அதற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், இலங்கை தமிழ் பெண்களை மோசமாக இந்தப் படம் சித்தரிப்பதாகக் கூறி செய்தியாளர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்தான், இந்தப் படம் ஈழத் தமிழர்களை மோசமாகச் சித்தரிப்பதாகக்கூறி, அதனை வெளியிடக்கூடாது என சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

படம் வெளிவருவதற்கு முன்பாகவே படத்தை எதிர்ப்பது ஏன் எனக் கேட்டபோது, “போர் முடிந்துவிட்ட நிலையில், எல்லோரும் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். அந்தப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் படம் எடுத்தால் அதை ஏற்க முடியாது” என பிபிசியிடம் தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தொடர்பாளர் சே. பாக்கியராசன்.

“நாங்கள் யாரும் படம் பார்க்கவில்லை. ஆனால், பத்திரிகையாளர்களுக்கான காட்சியில் படம் பார்த்த சில பத்திரிகையாளர்கள் அதிர்ந்துபோய், எங்களிடம் சொன்னார்கள். இந்தப் படத்தை அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்கான போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற பெயரில், தொடர்ந்து அந்தப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் செயல்படுகிறார்கள். போர் முடிந்து, அதில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நீதி கேட்டு நிற்கும்போது, அதற்கு உதவும் வகையிலான கதைக் களம் இருக்க வேண்டும். இது போன்ற கதைக் களத்தைக் கொண்ட படங்கள் இந்தப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும். அதனால்தான் எதிர்க்கிறோம்” என்கிறார் பாக்கியராசன்.

ஒற்றைப் பனை மரம்: சீமான்

படக்குறிப்பு, இந்த படத்தின் இயக்குநர் புதியவன் ராசைய்யா

இது குறித்து பிபிசியிடம் பேசிய படத்தின் இயக்குநர் புதியவன் ராசைய்யா, “அவர்கள் ஈழ விடுதலை போராட்டத்தை மையமாக வைத்து ஒரு அரசியலைச் செய்கிறார்கள். அவர்கள் இந்தப் போராட்டம் குறித்து பரப்பிவருவதற்கு மாறான கருத்தை இந்தப் படம் சொல்கிறது. அதுதான் அவர்களுக்குப் பிரச்னை” என்கிறார்.

“போர் முடிவடைந்த பிறகு ஈழத் தமிழர்கள் மிக மோசமான வாழ்வை இலங்கையில் எதிர்கொண்டுவருகிறார்கள். அதைப் பற்றித்தான் இந்தப் படம் சொல்கிறது. போர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2012-ஆம் ஆண்டுவாக்கில் முள்வேலி முகாம்களில் இருந்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அப்படிச் செல்லும் கதாநாயகி எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான் படம்.

போருக்குப் பிந்தைய இலங்கையில், கணவனை இழந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வாறெல்லாம் சிரமப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். மேலும், இஸ்லாமியர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டதும் படத்தில் வருகிறது. இதில் தமிழர்களுக்கு எதிராகவோ, இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ எதையும் சொல்லவில்லை.

என் மண் சார்ந்து, எங்களுடைய பிரச்னை சார்ந்து படமெடுப்பது எனது உரிமை. எங்கள் பிரச்னையை நான் விரும்பியபடி சொல்ல இவர்கள் அனுமதி தேவையில்லை. என் சமூகத்தை என் பார்வையில் பதிவுசெய்வேன்” என்கிறார் இயக்குனர் புதியவன் ராசைய்யா.

ஒற்றைப் பனை மரம்: சீமான்

ஆனால், தங்கள் எதிர்ப்பைக் கைவிடப்போவதில்லை என்கிறது நாம் தமிழர் கட்சி. “எல்லோருக்கும் ஒரு கருத்து இருக்கும் என்பது சரிதான். ஆனால், அவரது கருத்து பொதுக் கருத்துக்கு எதிராக இருந்தால், அதை எதிர்க்கத்தானே முடியும்? ஆகவே நாங்கள் எதிர்ப்போம். கடைசிவரை கடுமையாக எதிர்ப்போம்” என்கிறார் பாக்கியராசன்.

ஒற்றைப் பனை மரம் படத்தின் பெரும்பான்மை காட்சிகள் கிளிநொச்சியிலும் 10 சதவீத காட்சிகள் தமிழ்நாட்டிலும் எடுக்கப்பட்டிருக்கின்றன. புதியவன் ராசைய்யா இதற்கு முன்பாக, ‘மண்’, ‘யாவும் வசப்படும்’ ஆகிய இரு படங்களை இயக்கியிருக்கிறார். ‘மண்’ திரைப்படம், இலங்கையில் பூர்வீகத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையிலான முரண்பாடைப் பற்றிப் பேசிய திரைப்படம்.

‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படம், இதுவரை இலங்கையில் வெளியாகவில்லை. இலங்கையில் வெளியிடுவதற்காக தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு அந்தக் குழு படத்தை அக்டோபர் 14-ஆம் தேதி பார்த்துவிட்டது என்கிறார் ராசைய்யா. ஆனால், இதுவரை முடிவு ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

“ஒரு திரைப்படத்தைப் பார்த்தால் மூன்று நாட்களுக்குள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். ஏன் இன்னும் தெரிவிக்கவில்லை என எனது சட்டத்தரணி மூலம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன்” என்கிறார் ராசைய்யா.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.