களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேக்கவத்தை பகுதியில் வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடிய சந்தேகநபர் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை தெற்கு – தேக்கவத்த பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர் ‘மிஹிகடவத்தே பக்கலா’ என அழைக்கப்படுபவர் என தெரியவருகிறது.
வாத்துவ, களுத்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பொலிஸ் பிரிவுகளில் நீண்டகாலமாக வீடுகளுக்குள் புகுந்து திருடுவதாக களுத்துறை குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே களுத்துறை மிஹிகடவத்த பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பல வீடுகளில் திருடி தனியார் அடகுக் கடைகளுக்கு விற்பனை செய்திருந்த சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், குறித்த வீடுகளில் இருந்து திருடப்பட்ட பெறுமதியான 6 கையடக்க தொலைபேசிகள், கையடக்க தொலைபேசி துணைக்கருவிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை குறைந்த விலைக்கு பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்தமையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அதிக அடிமையாகியுள்ள இந்த சந்தேக நபர் வீடு உடைப்பு குற்றச்சாட்டில் பல வருடங்கள் சிறைத்தண்டனை பெற்று தற்போது நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு முகங்கொடுத்து வருபவராவார்.
சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.