பெங்களூரு தோல்வியை புனேவில் ஈடுகட்டுமா இந்திய அணி- வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவாரா?

இந்தியா - நியூஸிலாந்து டெஸ்ட் போட்டிகள், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

புனே நகரில் நாளை (அக்டோபர் 24) தொடங்க இருக்கும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.

டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய மண்ணில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் நியூசிலாந்து அணி வெற்றியை பதிவு செய்தது.

புனே நகரில் உள்ள கிரிக்கெட் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமானது என்பதால், தமிழக சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கலாம் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நிர்பந்தத்தில் இந்திய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவதற்கு இன்னும் 4 வெற்றிகள் மற்றும் ஒரு போட்டியில் டிரா செய்வது கட்டாயமாகியுள்ளது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பதால், அடுத்துவரும் 2 போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அடுத்துவரும் 2 டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி வென்று, ஆஸ்திரேலியா பயணத்திலும் 2 போட்டிகளை இந்திய அணி வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.

இந்திய அணி அடுத்த 7 டெஸ்ட் போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று, ஒன்றை டிரா செய்து 65.79 சதவீத புள்ளிகள் பெற்றால்தான் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற முடியும்.

பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகளத்தையும், வானிலையையும் சரியாகக் கணிக்காமல் முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது.

அதனால் புனே நகரில் நாளை தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் சரியான வீரர்களைத் தேர்வு செய்து களமிறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய பேட்டர்கள் எவ்வளவு பலவீனமாக இருக்கிறார்கள் என்பது கடந்த பெங்களூரு டெஸ்டில் முதல் இன்னிங்ஸின்போது தெரிந்தது. ரூர்கே, மேட் ஹென்றி, சௌதி ஆகியோரின் வேகப்பந்துவீச்சுக்கு 46 ரன்களில் இந்திய வீரர்கள் சுருண்டனர்.

பெங்களூரு மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது இல்லை. இருப்பினும் வானிலை, மைதானத்தில் நிலவிய ஈரப்பதம், காற்று ஆகியவற்றால் பந்து நன்றாக ஸ்விங் ஆனது.

இந்தியா - நியூஸிலாந்து டெஸ்ட் போட்டிகள், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

புனே விக்கெட் எப்படி

புனே மைதானத்தில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்த ஆடுகளத்தில் புற்கள் இல்லாமல் பிட்ச் கருப்பு மண்ணால் அமைக்கப்பட்டதால், இங்கு பந்து பேட்டரை நோக்கி மெதுவாகவே வரும். வேகப்பந்துவீச்சுக்கு பெரிதாக ஒத்துழைக்காது.

காலை நேரத்தில் ஒரு மணிநேரம் மட்டுமே வேகப்பந்துவீச்சுக்கு சிறிது சாதகமாக இருக்கும், மேலும் பந்து ஸ்விங் ஆகும். வெயில் வந்தபின் முற்றிலும் விக்கெட்டின் தன்மை மாறிவிடும்.

சுழற்பந்துவீச்சாளர்கள், அதிலும் குறிப்பாக வேகம் குறைவாக வீசக்கூடிய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் நன்கு ஒத்துழைக்கும். நாட்கள் செல்லச் செல்ல ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டுக்கு வரும். ஆதலால் இரு அணியினரும் சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் தரலாம்.

இந்த ஆடுகத்தில் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. அதில் 2017-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி தோற்றது. 2019-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் முதலில் பேட் செய்த அணிகள்தான் வென்றுள்ளன. முதல் இன்னிங்ஸில் சராசரியாக 400 ரன்களுக்கு மேல் ஒரு அணியால் குவிக்க முடியும். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, பேட்ஸ்மேன்கள் பேட் செய்வது கடினமாகும்.

இந்த மைதானத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக விராட் கோலி இரட்டை சதம் (254) அடித்துள்ளார்.

இந்தியா - நியூஸிலாந்து டெஸ்ட் போட்டிகள், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த சில நாட்களாக சுப்மான் கில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

கில், பண்ட் வருகை

கடந்த முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் கழுத்துவலி காரணமாக களமிறங்கவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக சுப்மன் கில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டதால், அவர் புனே டெஸ்டில் களமிறங்குவார் எனத் தெரிகிறது.

அதேபோல முதல் டெஸ்ட் போட்டியில் முழங்கால் வலிகாரணமாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை, ஆனால் 2வது இன்னிங்ஸில் பேட் செய்து 99 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட வலி குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டதால், அவர் களமிறங்கவும் வாய்ப்புள்ளது.

கில் களமிறங்கும் வாய்ப்பு ஏற்பட்டால், கே.எல்.ராகுல் ப்ளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படலாம் னத் தெரிகிறது. சர்ஃபிராஸ் கான் 150 ரன்கள் முதல் டெஸ்டில் சேர்த்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆதலால், கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டு கில் உள்ளே கொண்டுவரப்படலாம்.

ஆனால், சர்ஃபிராஸ்கான் இராணிக் கோப்பையில் 222 ரன்கள் சேர்த்து நல்ல ஃபார்மில் இருந்தார், முதல் டெஸ்டிலும் 150 ரன்கள் குவித்து பயிற்சியாளர் கம்பீர் பாராட்டைப் பெற்றுள்ளார். ஆதலால், சர்ஃபிராஸ்கான் அணியில் நீடிக்க வாய்ப்புள்ளது, ராகுல் அமரவைக்கப்படலாம்.

இந்த மைதானத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விராட் கோலி இரட்டை சதம் அடித்ததால், அவரின் இருப்பு அணிக்கு பெரிய பலமாகும்.

இந்தியா - நியூஸிலாந்து டெஸ்ட் போட்டிகள், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் (கோப்புப்படம்)

வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு

புனே மைதானம் முற்றிலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றதாகும். இந்த மைதானத்தில் மெதுவாகப் பந்துவீசும் சழற்பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் விரைவாகக் கிடைக்கும், பந்து நன்றாக டர்ன் ஆகும். ஆதலால், குல்தீப் யாதவுக்குப் பதிலாகவும், பேட்டிங் பலத்தை அதிகரிக்கவும் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ப்ளேயிங் லெவனில் விளையாடலாம்.

ஏனென்றால், நியூஸிலாந்து அணியில் இடதுகை பேட்டர்கள் டாம் லாதம், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இருப்பதால் அவர்களை எதிர்கொள்ள அஸ்வினோடு சேர்த்து, சுந்தர் போன்ற ஆஃப் ஸ்பின்னர் சேர்க்கப்படலாம்.

வேகப்பந்துவீச்சில் பும்ராவுக்கு எதிர்வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு ஓய்வு தேவைப்படுகிறது. ஆதலால், பும்ராவுக்குப் பதிலாக ஆகாஷ் தீப் களமிறங்கலாம். முகமது சிராஜ் டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுக்க திணறுகிறார் என்பதால், அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படலாம் அல்லது கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக அக்ஸர் படேல் சேர்க்கப்படலாம்.

இந்தியா - நியூஸிலாந்து டெஸ்ட் போட்டிகள், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேன் வில்லியம்சன் (கோப்புப்படம்)

கேன் வில்லியம்சன் விளையாடுவாரா

நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை என்பதால், 2வது டெஸ்டிலும் அவர் விளையாடமாட்டார். அனுபவ பேட்டர் வில்லியம்சன் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பாதகம்தான். அவரின் இடத்தை நிரப்ப வில் யங் களமிறங்கினாலும் பெரிதாக ஜொலிக்கவில்லை.

மற்றவகையில் ரச்சின் ரவீந்திராவைத் தவிர்த்து அந்த அணியில் டேரல் மிட்ஷெல், பிளென்டல், கேப்டன் டாம் லாதம் ஆகியோர் இருந்தும் முதல் டெஸ்டில் மோசமாகவே பேட் செய்தனர்.

ஆனால், சவுத்தி, ரவீந்திராவுடன் இணைந்து பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் சேர்த்த ரன்களால்தான் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் பிரமாண்ட ஸ்கோரை எட்ட முடிந்தது. ஆதலால், ரவீந்திராவை தவிர்த்து மற்ற பேட்டர்கள் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து மிட்ஷெல் சான்ட்னர் சேர்க்கப்படாலம்.

இந்திய அணி(உத்தேசம்)

ரோஹித் சர்மா(கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் அல்லது சர்ஃபிராஸ் கான், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், பும்ரா, குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் அல்லது ஆகாஷ் தீப்

நியூஸிலாந்து அணி (உத்தேசம்)

டாம் லாதம்(கேப்டன்), டேவன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்ஷெல், டாம் பிளென்டெல், கிளென் பிலிப்ஸ், மிட்ஷெல் சான்ட்னர், டிம் சவுத்தி, அஜாஸ் படேல், வில்லியம் ரூர்கே.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.