on Wednesday, October 23, 2024
கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதால்,இதுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள 75,000 கடவுச்சீட்டுக்களை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.கடவுச்சீட்டு தட்டுப்பாடு மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.பல மாதங்களாக கடவுச் சீட்டுக்குத் தட்டுப்பாடு நிலவியது.இந்நிலையில்,புதிய கடவுச்சீட்டுக்கள் நாட்டுக்கு வந்துள்ளதால், நேற்று முன் தினம் முதல் இவை விநியோகிக்கப்படுகின்றன.
கரு நீல நிறத்தைக் கொண்ட புதிய சாதாரண கடவுச்சீட்டானது 48 பக்கங்களைக் கொண்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய கடவுச்சீட்டின் உட் பகுதிகளில் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க பல முக்கிய இடங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல் முறையாக மேற்கொள்ளப்படும். இது தொடர்பில், அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.