அமெரிக்கா: ஜோ பைடன் மீண்டும் அதிபர் ஆகாததால் ஐரோப்பிய நாடுகளுக்கு என்ன பிரச்னை?
- எழுதியவர், கத்யா அட்லர்
- பதவி, பிபிசி ஐரோப்பா ஆசிரியர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஜெர்மனி பயணம் மிகவும் குறுகியதாக இருந்த போதிலும், உலக அரங்கில் தனக்கு இன்னும் பெரிய லட்சியங்கள் உள்ளன என்பதை இந்தப் பயணத்தின் வாயிலாக அவர் பதிவு செய்யத் தவறவில்லை.
சர்வதேச அரங்கில் நிகழும் சம்பவங்களில் அவரின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் யுக்ரேன் தொடர்பான பிரச்னைகளில் தனக்கு இருக்கும் லட்சியங்களைத் தெளிவுபடுத்தினார்.
பைடனின் வெளியுறவுக் கொள்கை ஐரோப்பிய பாதுகாப்புக்கு வலுவான முக்கியத்துவத்தை அளித்துள்ளது. இந்தக் கொள்கை, தற்போது அதிபர் பதவிக்குப் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் உடன் கடுமையாக முரண்படுகிறது.
பைடனின் முயற்சிகளைப் பாராட்டி, ஜெர்மனியின் ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் அவருக்கு நாட்டின் உயரிய விருதான ‘தி ஸ்பெஷல் கிளாஸ் ஆஃப் தி கிராண்ட் கிராஸ்’ ( the special class of the Grand Cross) வழங்கி கௌரவித்தார்.
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு யுக்ரேனில் ஏற்பட்ட மோதல், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த கண்டம் அனுபவித்த மிக மோசமான போராகும்.
இரண்டாம் உலகப் போர் நடந்த, 80 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைப் போலவே இந்த முறையும் ஐரோப்பா ராணுவ ஆதரவு மற்றும் தலைமைக்காக அமெரிக்காவை எதிர்நோக்குகிறது.
“இன்னும் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளது” என்று கூறிய பைடன், “யுக்ரேனில் நீடித்த அமைதி சூழல் உருவாகும் வரை நாம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்” என்றும் கூறினார்.
இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்க தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார் என்பதைப் பொறுத்தே எதிர்கால செயல்பாடுகள் இருக்கும்.
ஐரோப்பா யுக்ரேனுக்கு உதவ அமெரிக்க ராணுவ உதவியை நம்பியுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஜெர்மனி யுக்ரேனுக்கு அதிக உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், பைடனின் அதிபர் பதவிக்காலம் முடிந்த பிறகு அமெரிக்காவின் இந்த ராணுவ உதவிகள் நிறுத்தப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், வெளியுறவுக் கொள்கை அடிப்படையில் சீனா, தைவான் போன்ற விவகாரங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோது (2016-2020), அவரது நிர்வாகம் மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டணியான நேட்டோவுடன் (வடக்கு அட்லாண்டிக் நாடுகள் கூட்டமைப்பு) நல்லுறவைக் கொண்டிருக்கவில்லை.
டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினையும் புகழ்ந்து பேசுகிறார். அதே சமயம் யுக்ரேன் வெற்றி பெற வேண்டும் என்று அவர் இன்னும் பகிரங்கமாகக் கூறவில்லை.
ரஷ்யா யுக்ரேன் மீது முழுப் படையெடுப்பை மேற்கொண்டபோது, ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷூல்ஸ், “எங்கள் ராணுவத்தில் அதிக முதலீடு செய்வோம் இதனால் நாங்கள் எங்கள் நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்கு முழுமையாகப் பங்களிக்க முடியும்” என்று உறுதியளித்தார்.
இந்த வாரம், ஜெர்மனிக்கு ஓர் எச்சரிக்கை வந்துள்ளது. அதன்படி, ரஷ்யா தனது ராணுவத்தில் இதுபோன்று தொடர்ந்து முதலீடு செய்தால், அடுத்த பத்து ஆண்டுகளின் இறுதியில் நேட்டோவைத் தாக்கும் நிலையில் அது இருக்கும்” என்று ஜெர்மனி உளவுத்துறைத் தலைவர் எச்சரித்துள்ளார்.
ஆனால் ஜெர்மனியின் திட்டமிடப்பட்ட ராணுவ சீர்திருத்தம் அதிகாரத்துவத்தின் காரணமாகத் தடைப்பட்டுள்ளது. அரசாங்கம் எதிர்கால பாதுகாப்பு குறித்த வரவு செலவு திட்டத்திற்கு உடன்படவில்லை.
ஜெர்மனியில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஓலாஃப் ஷூல்ஸ் உள்நாட்டில் சவால்களை எதிர்கொள்கிறார். ஏனெனில் வலது மற்றும் இடதுசாரி பிரிவினர் ரஷ்யாவிற்கு அனுதாபம் காட்டுகின்றனர்.
ஜெர்மன் தலைநகர் பெர்லினில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர் ஆகியோர் அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ஜெர்மனியின் அதிபர் ஓலாஃப் ஷூல்ஸை சந்தித்தனர்.
சமீபத்தில், நேட்டோ நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தலைவர்கள் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் குறித்து விவாதித்தனர். அவர்களின் கூட்டு அறிக்கையில், யுக்ரேனுக்கு தொடர்ந்து உதவ வேண்டியதன் அவசியத்தை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்காவின் நிலைப்பாடு
பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர் ரஷ்யா பலவீனமடைந்து வருவதாகவும், அதன் வரவு செலவுத் திட்டத்தில் 40 சதவீதம் போருக்காக மட்டுமே செலவு செய்யப்படுவதாகவும் கூறினார்.
யுக்ரேனுக்கு உதவ எந்த மாதிரியான திறன் தேவை, என்ன கூடுதல் உபகரணங்களைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து அவரும் மற்ற தலைவர்களும் விவாதித்ததாகவும் ஸ்டாமர் கூறினார்.
கடந்த வாரம், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, போருக்கான ‘வெற்றித் திட்டத்தை’ முன்வைத்தார்.
இதில், நேட்டோவில் இணைவதற்கு யுக்ரேனுக்கு முறைப்படி அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதவிர பிரிட்டன் மற்றும் பிரான்ஸிடம் இருந்து பெற்ற நீண்டதூர ஏவுகணைகளைப் பயன்படுத்த சுதந்திரம் கோரியுள்ளார். அவரது இந்தக் கோரிக்கையை மேற்கத்திய நாடுகள் இன்னும் ஏற்கவில்லை.
ரஷ்யாவுடன் பதற்றங்கள் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் பைடன் மீண்டும் மீண்டும் பின்வாங்குவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். யுக்ரேனும் ரஷ்யாவும் பைடனின் ஜெர்மனி பயணத்தை உன்னிப்பாகக் கண்காணித்தன.
நேட்டோ நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை யுக்ரேனை ஆதரிப்பதாக மீண்டும் உறுதியளிக்கின்றன.
ஆனால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இம்முறை அதிபர் போட்டியில் இல்லை, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஜெர்மன் அதிபர் தோல்வியடைய வாய்ப்புகள் உள்ளன. பிரான்ஸ் அதிபரும் நாட்டுக்குள் பல அரசியல் சவால்களை எதிர்கொண்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு