டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல், மல்யுத்தம், WWE

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்பிற்கு ஆதரவாக ஹல்க் ஹோகன் பிரசாரம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்
  • எழுதியவர், ஸாம் காப்ரல்
  • பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்டன்

டொனால்ட் டிரம்ப் கடைசியாக WWE போட்டிகளில் (World Wrestling Entertainment – WWE)) சிறப்பு விருந்தினராக தோன்றி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு முன்னாள் WWE வீரர்கள் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

‘ஹல்க் ஹோகன்’ என்று அழைக்கப்படும் டெர்ரி போல்லியா ஒரு பிரபல WWE வீரர் ஆவார். குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் தனது சட்டையை கீழித்து, உள்ளே அணிந்திருந்த சிவப்பு நிற சட்டையை வெளிக்காட்டினார். அதில் “டிரம்ப் 2024” என்று எழுதியிருந்தது.

அவர் “டிரம்ப்மேனியா (trumpmania) உலகெங்கும் பரவட்டும்” என்று கோஷமிட்டார். (Wrestlemania என்பது பிரபலமான ஒரு மல்யுத்த போட்டி, அதுபோல ஹல்க் ஹோகன் “டிரம்ப்மேனியா” என்ற சொல்லை குறிப்பிட்டார்)

அமெரிக்காவில் மதம் ஒரு கேலிக்குள்ளாக்கப்படுகிறது என்று கடந்த வாரம், முன்னாள் மல்யுத்த வீரராக இருந்து ஊடக ஆளுமையான டைரஸ் உடனான நேர்காணலில் டிரம்ப் தெரிவித்தார்.

சமீபத்தில் பல்வேறு ஊடகங்களுடனான நேர்காணல்களுக்கு வர மறுத்த டிரம்ப், WWE பிரபலமான ‘தி அண்டர்டேக்கர்’ என்று அழைக்கப்படும் மார்க் காலவே தொகுத்து வழங்கிய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

“நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அரசியலை மீண்டும் மகிழ்ச்சியானதாக மாற்றிவிட்டீர்கள்”, என்று மார்க் காலவே கூறினார்.

அதை டிரம்ப் ஆமோதித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் டிரம்ப் இவ்வாறு பிரசாரம் செய்வது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக கருதப்படுகிறது.

“பெரும்பாலான அமெரிக்க மக்கள் தேர்தல் நெருங்கும் போது மட்டுமே நாட்டின் அரசியல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை கவனிக்கிறார்கள். அவர்கள் சமீபத்திய விஷயங்களை கருத்தில் கொண்டே வாக்களிக்கின்றனர்”, என்று ஜோசஃபின் ரைஸ்மேன் கூறினார். இவர் ஒரு தன்னார்வ பத்திரிகையாளர் மற்றும் Ringmaster: Vince McMahon and the Unmaking of America என்ற நூலின் ஆசிரியர்.

“இந்த மல்யுத்த வீரர்களின் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை பலரும் கேட்கிறார்கள். இதன் மூலம் அரசியல்மயப்படாதவர்களையும், புதுமையான எண்ணங்களை கொண்டவர்களையும் அவர் ஈர்க்கலாம்”, என்று ஜோசஃபின் ரைஸ்மேன் டிரம்பின் இந்த உத்தி குறித்து கூறினார்.

இதுபோன்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் மல்யுத்த வீரர்களை வைத்து பிரசாரம் செய்வதன் மூலம் டிரம்ப் இளைஞர்களை கவர முயற்சித்து வருகிறார். இது போன்ற தளங்கள் டிரம்பின் பிரசாரத்திற்கு மிக முக்கியமாக இருப்பதாக, அவரது ஆலோசகர்கள் செமாஃபோர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர். டிரம்ப் ‘ஒரு நட்சத்திரம்’ என்று மூத்த தகவல் தொடர்பு ஆலோசகர் அலெக்ஸ் புரூஸ்விட்ஸ் அந்நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“டிரம்பின் முந்தைய பிரசாரத்தை விட தற்போது நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். டிரம்பை ஒரு தனி நபராக முன்னிறுத்தி வருகிறோம். இது டிக்டாக்கில் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது”, என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்க அரசியலில் 78 வயதாகும் டிரம்பின் எழுச்சி, வீழ்ச்சி மற்றும் மறுபிரவேசம் ஆகியவற்றை மல்யுத்தத்துடன் ஒப்பிட்டு புரிந்துகொள்ளலாம் என்று ரிங்மாஸ்டர் என்ற புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது யதார்த்தத்தையும், கற்பனையையும் இணைக்கும் ஒரு கலை, உணர்ச்சிகளை உயர்த்தும் ஒரு உளவியல் மற்றும் தவறுகளை சரியாக மாற்றும் ஒரு திறன் என்று அவர் விவரித்தார்.

டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல், மல்யுத்தம், WWE

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தி அண்டர்டேக்கர்’ என்று அழைக்கப்படும் மார்க் காலவே

“சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அரசியலில் ஒருவர் உண்மைகளையும், பொய்களையும், சில நேரம் பாதி உண்மையை மட்டும் சரியான அளவில் உற்சாகத்துடனும் நேர்மையுடனும் கூற வேண்டும்”, என்று ஜோசஃபின் ரைஸ்மேன் தெரிவித்தார்.

“ஆனால் அரசியல் விதிகள் மற்றும் கொள்கைகள் சார்ந்து அல்லாமல் மல்யுத்தம் போல உற்சாகமும், சுய அடையாளம் சார்ந்ததாக மாறலாம்”, என்று அவர் எச்சரித்தார்.

அரசியலுக்கு வருவதற்கு முன், டிரம்ப் நியூயார்க்கில் உள்ள குயின்ஸில் சிறுவயதில் மல்யுத்தம் பார்த்து வளர்ந்தார். அவர் எப்பொழுதும் மல்யுத்த வீரர்களை பொழுதுபோக்காளர்களாக மட்டும் பார்க்காமல் அவர்களுக்கு உரிய மரியாதையையும் அளித்தார்.

ஒரு காலத்தில் சிறிய நிறுவனமாக இருந்த WWE, அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் கென்னடி மக்மஹோனின் கீழ் உலகின் மிகப் பெரிய மல்யுத்த நிறுவனமாக மாறியதைப் போன்றே டிரம்பும் தொழிலதிபராக வளர்ந்து வந்தார். இருவருமே குடும்ப நிறுவனங்களில் அதிகாரத்திற்கு வந்து, அதை அதிக அளவில் வளர்த்தெடுத்தனர்.

அதிபர் ரீகனுக்கு பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்தின் கீழ் இந்த நிறுவனம் செழித்து இருந்தது. இவர்கள் இருவரும் விசாரணையில் இருந்து தப்பினர். இதற்கு பிறகே டிரம்ப் அவரது தொழிலாளர்களுக்கு கடுமையான விதிகளை விதித்ததாகவும், வின்சென்ட் கென்னடி மக்மஹோன் WWE விளையாட்டு வீரகளுக்கு வழங்கும் சுகாதார சலுகைகளை நிறுத்தியதாகவும் ஜோசஃபின் ரைஸ்மேன் குற்றம் சாட்டினார்.

1980களின் பிற்பகுதியில், நியூ ஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் சிட்டியில் உள்ள ஹோட்டலில் டிரம்ப் WWE-இன் மார்க்கீ ரெஸில்மேனியா நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தினார். அப்போது தான் இந்த இருவரின் பாதைகள் ஒன்றிணைந்தன.

டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல், மல்யுத்தம், WWE

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வின்சென்ட் மக்மஹோனை (கீழே நடுவில் இருப்பவர்) பிரதிநிதித்துவப்படுத்தும் மல்யுத்த வீரரான பாபி லாஷ்லியை (வலது) தோற்கடித்த டிரம்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மல்யுத்த வீரர்

2007 ஆம் ஆண்டு, இருவரும் ஒரே போட்டிக்குள் நுழைந்தனர். அதில் டிரம்ப் WWE-யின் தலைமை அதிகாரிக்கு சவால் விடுத்தார். அவர் அரங்கின் கூரையின் மேல் இருந்து ரசிகர்களின் மீது அமெரிக்க டாலர்களை பொழிந்தார்.

“ஒரு மிகப்பெரிய கூட்டத்தில் முதல்முறையாக டிரம்ப் பேசியது இதுவே முதல் முறை”, என்று ஜோசஃபின் ரைஸ்மேன் கூறினார்.

இருவருக்கும் இடையேயான பகை 2023 ஆம் ஆண்டு ‘ரெஸில்மேனியா’ மல்யுத்த நிகழ்ச்சியின் ஒரு போட்டியான ‘பாட்டில் ஆஃப் பில்லியனர்ஸ்’ -இன் போது தொடங்கியது. அதில் இருவரின் சார்பாக மல்யுத்த வீரர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். இந்த போட்டியில் தோல்வியடையும் போட்டியாளரின் உரிமையாளர் தலை மொட்டையடிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தது.

இந்த ஒரு போட்டி மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வருவாயை எட்டியது என்று மல்யுத்த பத்திரிக்கையாளரும் பாட்காஸ்டருமான பிரையன் அல்வாரெஸ் தெரிவித்தார்.

இந்த மல்யுத்த நிகழ்ச்சியில் எத்தனையோ போட்டி நடந்தாலும், மக்கள் ஒருவர் தலையை மொட்டையடித்துக் கொள்ளும் நிபந்தனையினால் இந்த போட்டியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

டிரம்ப் 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு WWE போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. மேலும் அது சார்ந்த தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களின் தொடர்பிலும் இல்லை.

ஆனால் அவர் அதிபரான பிறகு மக்மஹோனின் மனைவி லிண்டாவை தனது அமைச்சரவையில் சிறு வணிக நிர்வாகியாக பணியமர்த்தினார். தற்போது டிரம்ப் சார்பு கொண்ட ஃபர்ஸ்ட் பாலிசி இன்ஸ்டிடியூட்டின் தலைவராக லிண்டா உள்ளார்.

டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல், மல்யுத்தம், WWE

பட மூலாதாரம், Getty Images

டிரம்ப் மீண்டும் அதிபராவது குறித்து, WWE-யை சேர்ந்தவர்களில் சிலருக்கு உடன்பாடு இல்லை.

‘தி அனிமல் பட்டிஸ்டா’ என்று அழைக்கப்படும் டேவ் பட்டிஸ்டா, கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட ஜிம்மி கிம்மலின் நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் டிரம்பை கேலி செய்தார்.

“டொனால்ட் டிரம்ப் ஒரு வலிமையான மனிதர் என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். அவர் அப்படி இல்லை”, என்று அவர் கூறினார்.

ஆயினும்கூட, சில பிரபல மல்யுத்த வீரர்கள் வழக்கத்திற்கு மாறான வழிகளில் டிரம்பிற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

“தெருவில் இருக்கும் ஒரு சாதாரண நபரிடம் ஹல்க் ஹோகனைத் தெரியுமா என்று நீங்கள் கேட்டால், மல்யுத்த ரசிகர் அல்லாத ஒருவர் கூட ஆம் என்று சொல்வார். டிரம்ப் இது போன்ற மிக பிரபலமான நபர்களை தனது பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார்”, என்று அல்வாரெஸ் பிபிசியிடம் கூறினார்.

“டிரம்ப் மல்யுத்தத்தை போலவே அரசியலிலும் செயல்பட்டு வருகிறார்”, என்று அல்வாரெஸ் கூறினார்.

திங்கட்கிழமையன்று டிரம்புடனான தனது நேர்காணலின், “அரசியல்வாதிகளைப் போலவே மல்யுத்த வீரர்களும் மக்கள் கவனத்தை பெற்றால்தான் உண்மையிலேயே சிறந்து விளங்க முடியும்”, என்று அவர் தெரிவித்தார்.

டிரம்ப் ஆர்வத்துடன் முன்னோக்கி சாய்ந்த போது, ​​”நீங்கள் இதில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள்” என்று அல்வாரெஸ் குறிப்பிட்டார்.

“நீங்கள் ஒரு வழி அல்லது வேறு வழியில் மக்களின் கவனத்தை பெற்றுள்ளீர்கள். அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.