மட்டக்களப்பு மாநகரின் காவலாளர்களில் ஒருவராக நானும் செயற்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – தி.சரவணபவன் on Saturday, October 19, 2024
மட்டக்களப்பு மாநகரின் காவலாளர்களில் ஒருவராக நானும் செயற்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி வேட்பாளரான தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்
மட்டக்களப்பு மாநகர முதல்வராக செயற்பட்ட ஐந்து வருட காலங்களில் நான் பல சமூகங்கள் வாழும் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தின் எல்லைகளை மிகச்சிறந்த முறையில் பாதுகாத்து மட்டக்களப்பு மாநகரின் எல்லைக் காவலனாகவே செயற்பட்டேன். அதன்படி, கல்லடிப் பாலத்திற்கு அருகாமையிலும் ஏனைய மாநகர சபை எல்லைக் கிராமங்களிலும் சட்டவிரோத காணி அபகரிப்புக்களுக்கு எதிராக செயற்பட்டதுடன் அவ்வாறான செயற்பாடுகளை முற்றாக தடைசெய்து என்னால் இயன்றவரை மக்களுக்காகவே செயற்பட்டு வந்தேன்.
முக்கியமாக எங்களது மாநகர மக்கள் மற்றும் சக உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு சபையின் அங்கீகாரம் பெற்று தொல்பொருள் திணைக்கள அகழ்வுப் பணிகளை மட்டக்களப்பு மாநகரில் முன்னெடுப்பதை தடுத்து நிறுத்தியிருந்தோம். இதனால் குறிப்பிட்ட வரலாற்று முக்கியத்துவமான இடங்கள் இங்கு தொல்பொருள் ஆய்வுக்கு உட்படுவது நிறுத்தப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாநகரின் அபிவிருத்திக்கு மாத்திரம் இன்றி எல்லைக் கிராமங்களை பாதுகாத்தல், சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்தல், கொரோனா உள்ளிட்ட கொடிய நோய்த் தொற்று ஏற்பட்ட காலங்களில் மக்களின் பாதுகாப்பினை முதன்மையாக கொண்டு பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து நேரடியாக களத்தில் இறங்கி மக்களைப் பாதுகாத்தேன்.
மேலும், மழை காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களின் போது மக்களுடன் நானும் மாநகர சபை உழியர்களும் நேரடியாக இறங்கி வெள்ளம் வடிந்தோடக்கூடிய முறையிலான வடிகான்களை அமைத்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை முதன்மையாக எண்ணி செயற்பட்டேன்.